Saturday, December 15, 2012

மறைந்துவரும் மனித உறவுகள்

             பொருளாதாரத் தேவை, ஆன்மிகத் தேடல், மன நிம்மதி காண வழிகள், சமுதாயத்தில் பாதுகாப்பு, சமுதாயத்தில் அங்கீகாரம் என பல தளங்களில் மனிதர்கள் வேகமாக இயங்க வேண்டியது  காலத்தின் கட்டாயமாகிவிட்டது. இந்த வேகத்தில் மனித உறவுகள் மறைந்து அல்லது மறந்துவருவது குறித்து அனைவரும் உணர்ந்திருந்தாலும், அதனை வெளிகாட்டிக் கொள்வதில் தயக்கம் உள்ளது.

முன்பு சில கிராமங்களில் உள்ள வீடுகளுககுச் சென்றால், வரவேற்பு அறையில் பல கருப்பு வெள்ளை புகைப்படங்கள் இருக்கும். " புகைப்படத்தில் இருப்பது எனது அண்ணன் குடும்பம், தம்பி குடும்பம், மாமா, சித்தி, அத்தை" என வீட்டில் எல்லோரும் பெருமையுடன் கூறுவார்கள்.
             
ப்போது தலைமுறை இடைவெளி காரணமாக பெரும்பாலான கிராமத்து வீடுகளிலும், தங்களது பிள்ளைகள், மருமகன் மருமகள், பேரன், பேத்தி புகைப்படங்கள் மட்டுமே காட்சிக்கு வைத்துக் கொண்டு உறவுகளைச் சுருக்கிக் விட்டனர். மற்றவர்கள் ஆல்பங்களுக்குள் மறந்து விட்டனர்.

நகரங்களில் கேட்கவே வேண்டாம், உடன் பிறந்தவர்களின் புகைப்படங்கலேயே வீட்டில் மாட்டி வைத்திருப்பதில்லை. ஏன் இந்த மாற்றம்? கல்யாணம், சடங்கு, காதுகுத்துதல் போன்ற விலக்கலை நமது முன்னோர்கள் ஏன் அமைத்தனர்?

அந்தவிழாக்களில் உறவினர்கள் கூடி, பேசி தங்களது அனுபவங்களையும், பழக்கவழக்கங்களையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளத்தான். எந்த ஒரு நிகழ்வையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள மகிழ்ச்சியே தனிதான். 

முன்பு திருமண விழா என்றால் இரண்டு அல்லது மூன்று நாளைக்கு முன்பே உறவினர்கள் கூடி விடுவார்கள். கோலமிடுவது, இட்லிக்கு மாவு ஆட்டுவது, பொருட்கள் வாங்க செல்வது என பல வேலைகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து செய்து வந்தனர்.

இப்போது திருமணம் காலை 9  மணி முதல் 10 மணிக்குள் என இருந்தால் 9.30 மணிக்கு வந்து, திருமணம் முடிந்ததும், உணவு அருந்தினாலும், அருந்தாவிட்டாலும் மறு வினாடியே " வேலை உள்ளது செல்கிறேன்" என கூறி, சென்று விடுகிறார்கள். தற்போது உள்ள திருமண வீட்டில் திருமணநாள் மலையில் உடன் பிறந்தவர்கள்  கூட தங்குவதில்லை. அந்த அளவுக்கு வேகமாக மக்கள் இயங்க தொடக்கி விட்டனர். மனித உறவுகள் என்பது மகிழ்ச்சியாக பேசி கொண்டாடுவதற்காகத்தான் என்பதை மனிதர்கள் மறந்து வருவது வருத்தத்துக்கு உரியது.

எவ்வளவு வேலைகள் இருந்தாலும், கும்பத்திற்கு  என நேரம் ஒதுக்குங்கள். மனைவி, குழந்தைகளுடன் அந்த நேரத்தில் இருந்து சிரித்துப் பேசி மகிழுங்கள் என உளவியல் நிபுனர்னர்கள் கூறி வருகிறார்கள். அதே போல, உறவினர்களுடனும் விழாக்களில் பார்க்கும் போது சிறிது நேரத்தை செலவிடுங்கள். அதில் உங்களுக்கு மன நிம்மதி கிடைக்கும்.

"சந்தோசம் பனித்துளி போன்றது. சிரிக்கும் போதே உலர்ந்து விடுகிறது"என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

விழாக் காலங்களில் உறவினர்களைப்  பார்த்து சந்தோசப் புன்னகையை புரியக்கூட நாம் நேரம் ஒதுக்குவதில்லை. வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அதையும் மீறி நாம் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். அதுபோலதான் மனித உறவுகளும், சண்டை சச்சரவுகள் இருக்கும், அதை ஒதுக்கி வைத்து விட்டு, மகிழ்ச்சிக்கு மரியாதை கொடுப்போம்.


நன்றி 
எஸ். பாலசுந்தரம் (தினமணி)






No comments:

Post a Comment