Wednesday, June 20, 2012

சுத்தமான குடிநீர்

சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்

தனிமனிதன் ஒருவனுக்கு சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் அடப்படை உரிமையாக ஐக்கிய நாட்டு சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் வாழும் மனிதனின் சுகாதாரத்திற்கும் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. உலக அளாவிய தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விவாதித்தது. ஏற்கனவே 190 நாடுகள் ஒப்புதல் வழங்கிய சுத்தமான குடிநீர் வலியுறுத்தும் அடிப்படை உரிமை தீர்மானத்தை பொலிவியா முன்மொழிந்தது. இதில் 121 நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டன.
இந்த தீர்மானம் மூலம் ஐ.நா.,வில் உள்ள உறுப்பினர் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இத்தோடு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளது. பிற நாடுகள் தங்களது மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு போதிய வழிகாட்டுதலையும் தெரிவிக்க ஐ.நா., பணி செய்யும் .
எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இது குறித்து ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங் கூறுகையில் ; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர் என்றார்.

நிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம்

இந்தியாவில் பல நகரங்கள், ஜீவநதிகளின் கரைகளில் அமைந்துள்ளன. இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதையே, இது எடுத்துக்காட்டுகிறது.இந்தியாவில் இன்னும் பல நகரங்கள், சிறிய நதிக்கரைகளில் அமைந்துள்ளன; பல நகரங்கள், எந்த ஒரு நதிக்கரைகளிலும் அமையாமலும் உள்ளன.

இவைகள் தமக்குள்ளும், தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை, தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய சென்னை மாநகர மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து, கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.
ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும், தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.

உதாரணமாக, சின்னமலை பகுதியில் மூன்று அடி ஆழத்திலும், பெசன்ட் நகர் பகுதியில் 60 அடி ஆழத்திலும், ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.
மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள், மழைநீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

வாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்:நிலத்தடி நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும், அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும், சென்னை மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்...
* ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.

* இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.

* அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து, இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.

ஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

* மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து, தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

* ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

தண்ணீர்ப் பஞ்சம்



நீராபத்து, இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் விபரீத விபத்து என்றே கூறலாம். இப்போது கோடைக்காலம் தொடங்கியதும், மாநிலத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னை, இன்னும் சில ஆண்டுகளில் கோடைக்காலம், மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் இருக்கும்.

அந்த அளவுக்கு நம்முடைய சீர்கெட்ட குடிநீர் மேலாண்மையாலும், அதிகரிக்கும் குடிநீர்த் தேவையாலும் நீரை அத்தியாவசியப் பொருளாகப் பார்ப்பது மறைந்து, மருந்துப் பொருளாகப் பார்க்கும் காலம் விரைவிலேயே ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தமிழகம், குடிநீர் உள்பட அனைத்து நீர் தேவைக்கும் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையை நம்பித்தான் உள்ளது. பருவமழை பெய்வதைப் பொறுத்துத்தான் நீர்நிலைகளும், ஆறுகளிலும் நீர் பெருகுகிறது. மாநிலத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. ஆகும். ஆனால், இந்த மழை அளவைத் தமிழகம் எட்டிப்பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே இந்த மழை அளவை சில ஆண்டுகள் எட்டிப்பிடித்தாலும் அப்போது ஏதாவது ஒரு பகுதியில் அழிவு மழையாகப் பெய்து, இருக்கின்ற எல்லாவற்றையும் கடலுக்கு அடித்துச் சென்று விடுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே அளவில் பெய்யாமல், ஏதோ ஒரு பகுதியில் அழிவு மழையாகவும் இதர பகுதிகளில் லேசாகவும் பெய்து வருகிறது.

இதனால் அண்மைக்காலமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.நாட்டில் நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனக் கூறி வரும் அரசு, நீர் மேலாண்மையில் இப்போதைய நிலைமை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குச் சென்றுவிடும்.

தமிழகத்துக்கு ஆண்டுக்கு 54,395 மில்லியன் கன மீட்டர் நீர் தேவையானதாக இருக்கிறது. இதே அளவில் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும்பட்சத்தில், 2050-ம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவை 57,725 மில்லியன் கன மீட்டராக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள தண்ணீர்த் தேவைக்கே, பக்கத்து மாநிலங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னும் சுமார் 3 மில்லியன் கன மீட்டர் தேவைப்படும்பட்சத்தில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆறு, அணை, குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளைக் கொண்டு, இப்போது தண்ணீர் தாகத்தைத் தமிழகம் தணித்து வருகிறது. மாநிலத்தில் சுமார் 39,202 குளங்கள் உள்ளன. இதில் மழையையும், ஆறுகளின் பாசனத்தையும் சார்ந்து மட்டும் தோராயமாக 20,104 குளங்கள் உள்ளன. குறிப்பாக மழையை எதிர்பார்த்து 80 சதவிகித குளங்கள் உள்ளன.
இக் குளங்கள் அனைத்தும் மன்னர் காலங்களில் வெட்டப்பட்டவை. போதிய பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் இவற்றின் நீர்ப்பிடிப்புத் தன்மை பெருமளவு குறைந்துள்ளது. இப்போது குளங்களில் நீர்ப்பிடிப்புத் தன்மை 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தக் குளங்கள் மூலம் பாசனம் பெறும் பரப்பளவும் 60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக குளத்தை நம்பியுள்ள குடிநீர் விநியோகமும்,விவசாயமும் சூதாட்டத்தைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.

மாநிலத்தில் முக்கியமாக 34 நதிகள் உள்ளன. இவற்றைச் சார்ந்து சுமார் 86 துணை நதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே உற்பத்தியாகி, தமிழகக் கடல்பகுதியில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணிதான். இந்த நதியைத் தவிர பெரும்பாலான முக்கிய நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகத்துக்குள் வரும் நதிகளாகவே இருக்கின்றன.

இப்போதுள்ள அரசியல்வாதிகளாலும், அரசுகளாலும் இந் நதிகளின் நீர்வளத்தை முழுமையாக நம்ப முடியாத சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை வளம் குறைந்து வருவதால், நீர்வளமும் குறைந்து வருகிறது.

÷மேலும், மாநிலத்தில் உள்ள பிரதான அணைகள் மேடாகி வருவதால் அதிக அளவிலான நீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான அணைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8 அணைகளில் 30 சதவிகிதமும், 2 அணைகளில் 50 சதவிகிதமும், 4 அணைகளில் ஒரு சதவிகிதமும் நீரைத் தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக  மணல் திருடர்களால், ஆற்று மணல் திருடுவது அதிகரித்துள்ளதால் மண்வளம் மட்டுமன்றி, நீர் வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் போக்கையே மாற்றிவிடும் அளவுக்குப் பகிரங்கமாக நடைபெறும் இந்தத் திருட்டால், ஆறுகளில் நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது.இவ்வாறு பல்வேறு காரணங்களால் வேகமாகக் குறைந்து வரும் நீர்வளத்தைப் பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அது கடலில் கரைத்த பெருங்காயமாகத்தான் உள்ளது.

நீர்வளத்தைப் பெருக்காவிட்டாலும், இருக்கின்ற வளத்தையாவது காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மலைப் பகுதியில் வியாபார ரீதியான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆறுகள் மூலம் நடைபெறும் நீர் வணிகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். நீர்நிலைகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மீது தனி அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளப்படுவதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்மேலாண்மையில் அரசு காலதாமதமோ, அலட்சியமோ செய்யும்பட்சத்தில், வரும்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

நீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி


நீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி

நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு,​​ நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் தொலைநோக்குத் திட்டமும் கலந்த பசுமைப் புரட்சி மீண்டும் ஏற்பட்டால்தான்,​​ தமிழகத்தில் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை மேலும் அழிவுப்பாதையை நோக்கிச் செல்லாமல் தடுக்க முடியும்.

​ ​ விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ள நாடுகள்,​​ ​ இதன் வளர்ச்சிக்கு சரியான திட்டங்களைச் செயல்படுத்தி,​​ அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து வளமிக்க நாடாக மாற்ற முயற்சிக்கும்.​ ஆனால்,​​ 75 சதவீத மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்தைக் காப்பதற்கு இப்போது உள்ள அரசுக்கும்,​​ இதற்கு முன்னர் இருந்த அரசுகளிடமும் தொலைநோக்குச் சிந்தனைகள் இல்லாமல் போனதால்,​​ இப்போது மீண்டும் ஒரு பசுமைப்புரட்சியைத் தமிழக விவசாயம் எதிர்நோக்கியுள்ளது.​ ​ ​

​ ​ 1960-க்குப் பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை.​ ​ இந்தப் பசுமைப் புரட்சி தமிழக விவசாயத்தில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டுவந்தது.​ இதன்பிறகு கிணற்றுப் பாசனப் பரப்பு அதிகரித்துள்ளது.

​ தமிழகத்தில் கடந்த 1951-ல் 14,751 பம்ப்செட்டுகள் இருந்தன.​ இது 1974-ல் 6,81,205 பம்ப்செட்டுகளாக உயர்ந்தன.​ இப்போது சுமார் 25 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளதாக விவசாய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

​ பசுமைப் புரட்சிக்குப் பின்னர் நிலத்தடி நீரின் பயன்பாடு பிரதானமாக்கப்பட்டது.​ ஏரி,​​ கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.​ ÷அந்தச் சமயத்தில்தான் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர்,​​ சந்தைப் பொருளாகியது.​ அப்போது இருந்த தமிழக அரசுகள் இதைக் கவனத்தில் கொள்ளவில்லை.​ ​

​ ​ பசுமைப் புரட்சிக்குப் பிறகு,​​ விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்தது.​ விவசாயத் தேவைக்கான இயற்கையான நீர் ஆதாரங்களை அதிகரித்துக் கொள்ளவோ,​​ நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்துக் கொள்ளும் சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கவோ தமிழக ஆட்சியாளர்கள் முழு முயற்சி மேற்கொள்ளவில்லை.​ காவிரி,​​ முல்லைப்பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளில் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகள்,​​ இந்தப் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது.​ அரசியல் மாற்றங்களால்,​​ ஓர் அரசு மேற்கொள்ளும் கொள்கைக்கு நேர்எதிரான கொள்கையை மற்றோர் அரசு எடுக்கிறது.​ ​ விவசாயிகளின் நலன்களை மனதில் கொள்ளாமல்,​​ சுய லாபத்துக்காக அரசியல் கட்சிகளும் கருத்துகளில் முரண்பட்டு நிற்கின்றன.

​ ​ அரசு மணல் குவாரிகள் என்ற பெயரில் முக்கிய ஆறுகள் சிலவற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது.​ அரசு மணல் குவாரிகள் இல்லாத ஆறுகளில் அரசியல்வாதிகள்,​​ உள்ளூர் மக்கள் துணையுடன் மணல் கொள்ளை நடந்து வருகிறது.​ ​ இதனால் அந்தந்த ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைவதால் விவசாயக் கிணறுகள் பெரும்பாலானவை வறண்டுவிட்டன.​ ஆற்றின் மூலம் நீரைப் பெறுகின்ற ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில்,​​ மணல் கொள்ளை மூலம் ஆற்றின் ஆழம் அதிகரிப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே ​ ஏரிகளுக்குத் தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.​ ​

​ ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால்,​​ வைகை மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலுள்ள சுமார் 25,000 ஏக்கர் நிலங்களின் நீர்ப்பாசனம் நேரடியாகப் ​ பாதிக்கப்பட்டுள்ளதாக,​​ நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ​ தெரிவித்துள்ளது.​ மேலும்,​​ காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் அதிக ஆழம் ஏற்படுவதால்,​​ ஆற்றின் நீரோட்ட வேகம் வெகுவாகத் தடைபட்டுள்ளதாகவும்,​​ இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

​ ​ ​ விவசாயத்துக்குப் போதுமான அளவில் நீர் ஆதாரம் இல்லை என்ற நிலை ஒருபுறமிருக்க,​​ இருக்கும் நீர் வளத்தையும் பாதுகாக்காமல் விட்டுவிட்டதால் ஆறுகள் அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.​ காவிரி,​​ அமராவதி,​​ நொய்யல்,​​ பவானி,​​ பாலாறு போன்ற நதிக்கரைகளில் அமைந்துள்ள ஏராளமான தொழிற்சாலைகள் வெளியேற்றும் ஆலைக்கழிவுகள்,​​ சுற்றுச்சூழல் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு,​​ நதிநீரும்,​​ நிலத்தடி நீரும் இந்த தலைமுறையே பயன்படுத்த முடியாத நிலைக்கு மாசுபடுத்திவிட்டன.​ ​ ​
​ ​ இதனால் விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை.​ சாகுபடி செய்யும் நிலங்களிலும் விளைச்சல் பெருமளவில் குறைந்து வருகிறது.​ இந்த ஆற்றுப்படுகைகளில் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள்,​​ ஆலைக் கழிவுகளால் விவசாயம் செய்ய முடியாத அளவுக்குப் பாழடைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.​ இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற விவசாயிகளின் குரல் மட்டும்,​​ ​ பல ஆண்டுகளாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.​ தேர்தலின்போதும்,​​ பட்ஜெட்டின் போதும் சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கோடிகளில் நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்புகள் அரசிடமிருந்து பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
​ விவசாயத்துக்கு மிக முக்கியத் தேவையாக உள்ள நீர் ஆதாரம் பாதுகாக்கப்படாததால்,​​ விவசாயம் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது.​ ​ கடந்த 30 ஆண்டுகளில் இருக்கும் நீர் ஆதாரங்களைக் கூட பாதுகாப்பதற்கு ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான்,​​ இன்று அத்தியாவாசியப் பொருள்களை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.​ இதனால் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.​ ​ இனிமேலாவது,​​ ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டு,​​ எஞ்சியுள்ள விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கு,​​ நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியை உடனடியாகத் ​ தொடங்க வேண்டும்.

No comments:

Post a Comment