Saturday, August 30, 2014

Tuesday, July 29, 2014

தீப வழிபாட்டின் முறைகளூம் பயன்களும்





குத்து விளக்கு தெய்வீகமானது.தெய்வ அம்சம் பொருந்தியது என்பர். இதன் அடிப்பக்கம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகா விஷ்ணு அம்சம், மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும் நெய் நாதம், திரி பிந்து, சுடர் அலை மகள், கலைமகள்,தீ மலைமகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்துவிளக்கு என்பர்.

    இந்த விளக்கை மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும். பஞ்சுத் திரி தான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. குத்துவிளக்கின் ஜந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும்.

    குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாட்கள் உண்டு. ஞாயிறு,திங்கள்,வியாழன்,சனி ஆகிய கிழமைகளில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.திங்கள் நடுஇரவு முதல் புதன் நடுஇரவு வரை தன குபேர தாட்சாயணியும், குககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    எனவே இந்த நாட்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள் விலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவாதல் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள் என்பதும் பரவலான நம்பிக்கை.

    ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும். மனம் நிலைப்பட திங்கள் அன்று தீபம் போட வேண்டும். வியாழன் அன்று தீபமேற்றினால் குருவின் பார்வையும் அது தரும் கோடி நன்மையும் நமக்கே கிடைக்கும்.

    வாகன விபத்துக்களைத் தவிர்க்க சனியன்று விளக்குத் துலக்கி தீபம் ஏற்றலாம். மற்ற நாட்களில் விளக்குத் துலக்காமல் தீபம் போடலாம். விளக்குத் துலக்காத நாட்களில் விசேஷமான நோன்பு, பூஜைகள் வந்தால், விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான துணியினால் விளக்கைத் துடைத்து தீபம் ஏற்றலாம்.

   விளக்கில்லாத கோவிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம் ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்பட வேண்டிய ஒன்று.தாமரை நூல் தீபம், மனதுக்குப் பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும். வாழைத் தண்டின் நூலில் திரி செய்து தீபம் ஏற்றுவது மக்கட் பேற்றைத் தரும்.

   பஞ்சமி திதியில் விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும். புதிதாக நெய்த பருத்தி ஆடையில் அரைத்த சந்தனம், பன்னிர் சேர்த்துக் தடவிக் காய வைத்து, அதைத் திரியாக்கி வடக்கு முகமாக வைத்து,’’’ ‘பஞ்ச தீபஎண்ணெய் ஊற்றித் திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும். பல காலமாக வராமலிருந்த பணம் தேடி வரும். ஒரு தீபம் ஏற்றுவது தவறு. சிறிய ஜோதி விளக்கானாலும் இரண்டு திரி போட்டு இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இது குடும்பத்திற்குப் பல நலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.