4. கணவன் அதிகாரம்
எனக்கு விவாகமான அந்தக் காலத்தில், காலணா அல்லது ஒரு தம்படி விலையில்
(எவ்வளவு விலை என்று இப்பொழுது எனக்குச் சரியாக நினைவில்லை) சிறு
பிரசுரங்கள் வெளியாகி வந்தன. தாம்பத்தியக் காதல், சிக்கனம், குழந்தை
மணங்கள் முதலிய விஷயங்களையெல்லாம் பற்றி அவைகளில் விவாதிக்கபட்டிருக்கும்.
அவை எனக்கு கிடைத்த போதெல்லாம் ஒரு வரி விடாமல் அவற்றைப் படிப்பேன்.
எனக்குப் பிடிக்காதவற்றை மறந்து விடுவதும், பிடித்தமானவற்றை அனுபவத்தில்
நிறைவேற்றி வருவதும் என்னிடம் இருந்த பழக்கமாகும். மனைவியிடம் வாழ்நாள்
முழுவதும் விசுவாசத்துடன் இருந்து வர வேண்டியது ஒரு கணவனின் கடமை என்று இப்
பிரசுரங்களில் கூறப்பட்டிருந்தது. அத்துடன், சத்திய வேட்கையும் என்னுள்
இருந்ததால் மனைவியிடம் உண்மைக்கு மாறாக நடந்து கொள்ளுவது என்பதற்கே
இடமில்லை. மேலும், அந்தச் சிறு வயதில் மனைவிக்குத் துரோகம் செய்யச்
சந்தர்ப்பமும் கிடையாது.
ஆனால் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தினால்
எதிரிடையான ஒரு விளைவு ஏற்பட்டது. நான் என் மனைவியிடம் உண்மையோடு நடந்து
கொள்ளுவதென்றால், அவளும் என்னிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று
எனக்குள் சொல்லிக் கொண்டேன். இந்த வண்ணம் என்னைச் சந்தேகம் கொண்ட கணவனாக
ஆக்கிவிட்டது. அவள் உண்மையோடு நடப்பவளாக இருக்கும்படி செய்வதற்கு, அவளுடைய
கடமையை எளிதில் என் உரிமையாக ஆக்கிக் கொண்டேன். அந்த உரிமை விஷயத்தில் நான்
விழிப்புடன் இருந்து வலியுறுத்துவது என்றும் தீர்மானித்தேன். அவளுடைய
பக்தி விசுவாசத்தில் நான் சந்தேகம் கொள்ளுவதற்குக் காரணமே இல்லை. ஆனால்,
காரணங்களுக்காகச் சந்தேகம் காத்துக் கொண்டிருப்பதில்லை. ஆகவே, அவள்
செய்வதையெல்லாம் எப்பொழுதுமே கவனித்து வரவேண்டியது அவசியம் அல்லவா? என்
அனுமதியின்றி அவள் எங்குமே போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தேன். இது
எங்களுக்குள் கடுமையான சச்சரவுக்கு விதை ஊன்றிவிட்டது. நான் விதித்திருந்த
கட்டுப்பாடு உண்மையில் அவளுக்கு ஒரு வகையான சிறைத் தண்டனையே, இத்தகைய
காரியத்திற்கு உடன்பட்டு விடக் கூடிய பெண்ணல்ல, கஸ்தூரிபாய். தான்
விரும்பிய இடங்களுக்கு விரும்பிய போதெல்லாம் அவள் பிடிவாதமாகப் போய்க்
கொண்டுதான் இருந்தாள். நான் கட்டுப்பாடுகளை அதிகமாக விதிக்க விதிக்க, அவள்
தன் இஷ்டம்போல் நடப்பதும் அதிகமாகிக் கொண்டே வந்தது. அதனால் எனக்கு
ஆத்திரமும் அதிகமாகிக் கொண்டே போயிற்று. குழந்தைத் தம்பதிகளான
எங்களுக்குள், ஒருவரோடொருவர் பேசாமல் இருந்துவிடுவது என்பது சர்வ சாதாரணமாக
ஆகிவிட்டது. என்னுடைய கட்டுத் திட்டங்களைக் கஸ்தூரிபாய் மீறியதில் யாதொரு
தவறுமில்லை என்றே நான் இன்று எண்ணுகிறேன். கோயிலுக்குப் போகக் கூடாது
என்றும், தன் தோழிகளைப் போய் பார்க்க கூடாது என்றும் தடைவிதித்தால்,
கபடமற்ற ஒரு பெண் அவற்றை எப்படிச் சகிப்பாள்? அவளுக்குக் கட்டுத்
திட்டங்களை யெல்லாம் விதிக்க எனக்கு உரிமை இருக்கிறதென்றால், அதே போன்ற
உரிமை அவளுக்கும் உண்டு அல்லவா? இவையெல்லாம் இன்று எனக்குத் தெளிவாகப்
புரிகின்றன. ஆனால் அப்பொழுதோ கணவனுக்குரிய அதிகாரங்களைச் செலுத்தியாக
வேண்டும் என்றே நினைத்து வந்தேன்!
என்றாலும், எங்களுடையே வாழ்க்கை மாறாத கசப்பு நிறைந்த வாழ்க்கையாகவே
இருந்தது என்று வாசகர்கள் நினைத்து விட வேண்டாம். நான் அவளிடம் கடுமையாக
நடந்து கொண்டதற்கெல்லாம் அன்பே காரணம். மனைவி என்றால் எப்படி இருக்க
வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்யவே நான் விரும்பினேன்.
அவள் தூய வாழ்க்கை நடத்தி, நான் கற்றவைகளை அவளும் கற்பதன் மூலம் எங்கள்
இருவருடைய வாழ்க்கையும் எண்ணங்களும் ஒன்றாக இருக்கும்படி செய்ய வேண்டும்
என்பதே என் அபிலாஷை.
கஸ்தூரி பாய்க்கு அப்படிப்பட்ட அபிலாஷை ஏதாவது இருந்ததா என்பது
எனக்குத் தெரியாது. அவள் எழுதப் படிக்கத் தெரியாதவள். சுபாவமாகவே அவள்
கபடமற்ற தன்மையும், சுயேச்சை நோக்கும், விடாமுயற்சியும் உடையவள்.
குறைந்தபட்சம் என் விஷயத்தில் மாத்திரம் பேச வெட்கப்படுபவள். தன்னுடைய
அறியாமையைக் குறித்து அவளுக்குக் கவலையே இல்லை. நான் படித்து வந்தது,
தானும் அவ்வாறு படிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் உற்சாகத்தை
அவளுக்கு அளித்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆகையால் நான் கொண்டிருந்த
அபிலாஷையெல்லாம் என்னோடு தான் நின்றது என்று எண்ணுகிறேன். அவள் ஒருத்தி
மீதே நான் என் முழு ஆசையும் வைத்திருந்தது போல அவளும் என்மீது ஆசை வைக்க
வேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படி அவள் ஆசை வைக்காது போனாலும்
வாழ்க்கை மீளாத் துன்பமாக இருந்திருக்க முடியாது. ஏனெனில், ஒரு
பக்கத்திலாவது தீவிரமான அன்பு இருந்தது.
அவளிடம் எனக்கு அடங்காப் பிரேமை என்பதை நான் சொல்லவே வேண்டும்.
பள்ளிக்கூடத்தில்கூட எனக்கு அவள் நினைப்புத்தான். இரவானதும் அவளைச்
சந்திக்கலாம் என்ற எண்ணம் எப்பொழுதும் மனத்தில் தோன்றிக் கொண்டே இருக்கும்.
பிரிந்திருப்பது என்பதோ சகிக்க முடியாததாகும். இரவில் நெடுநேரம் வரையில்
ஏதேதோவெல்லாம் பேசி அவளைத் தூங்க விடமாட்டேன். இத்தகைய அடங்காத காமவெறிக்கு
மாற்றாகக் கடமையில் தீவிரமான பற்று மட்டும் எனக்கில்லாதிருந்தால், நான்
நோய்வாய்ப்பட்டு அகால மரணத்தை அடைந்திருப்பேன். இல்லையானால், பிறருக்குப்
பாரமாக இருந்து வாழ வேண்டியவனாகியிருப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும்
காலையில் எனக்கென்றிருந்த வேலைகளை நான் செய்த தீர வேண்டியிருந்தது.
யாரிடமும் பொய் சொல்லுவது என்பதோ என்னால் ஆகவே ஆகாது. கடைசியாகச் சொன்ன
இந்தக் குணமே படுகுழியில் விழாமல் பல தடவைகளிலும் என்னைக் காத்தது.
கஸ்தூரிபாய் எழுத்து வாசனை இல்லாதவள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன்.
அவளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்று நான் மிகவும் ஆவலோடு
இருந்தேன். ஆனால், காமமே மேலோங்கி நிற்கும் காதலினால் அதற்கு நேரமே இல்லாது
போயிற்று. அவளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதனால், அவளுடைய
இஷடத்திற்கு மாறாக, அதுவும் இரவில்தான் சொல்லிக் கொடுக்க முடியும்.
பெரியவர்கள் இருக்கும்போது அவளைச் சந்திப்பதற்கே எனக்குத் துணிவு
இல்லையென்றால், அவளுடன் பேசுவது எப்படி? கத்தியவாரில் அப்பொழுது ஒரு
விசித்திரமான, உபயோகமற்ற, காட்டு மிராண்டித்தனமான பர்தா முறை (கோஷா முறை)
இருந்தது. இப்பொழுதும்கூட அது ஒரளவுக்கு இருந்து வருகிறது. இவ்விதம்
சந்தர்ப்பங்கள் சாதகமானவையாக இல்லை. ஆகையால் வாலிபப் பருவத்தில் கஸ்தூரி
பாய்க்குக் கல்வி கற்பிக்க நான் செய்த முயற்சிகளெல்லாம் வெற்றி பெறவில்லை
என்பதை நான் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். காமத் தூக்கத்திலிருந்து நான்
விழித்தெழுவதற்கு முன்பே பொது வாழ்க்கையில் இறங்கி விட்டேன். ஆகையால்,
எனக்குப் போதிய ஓய்வு நேரம் இல்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட
உபாத்தியாயர்களைக் கொண்டு போதிக்கவும் தவறிவிட்டேன். இதன் பயனாக, இன்று
கஸ்தூரிபாய் சிரமத்தின் பேரில் சாதாரணக் கடிதங்களை எழுதிக் கொள்ளவும், எளிய
குஜராத்தி மொழியைப் புரிந்து கொள்ளவுமே முடியும். நான் அவளிடம்
கொண்டிருந்த அன்பு, காமக் கலப்பே இல்லாததாக இருந்திருக்குமாயின், இன்று
அவள் சிறந்த படிப்பாளியாக இருப்பாள். ஏனென்றால் படிப்பதில் அவளுக்கு இருந்த
வெறுப்பையும் அப்பொழுது நான் போக்கியிருக்க முடியும். பரிசுத்தமான
அன்பினால் ஆகாதது எதுவுமே இல்லை என்பதை நான் அறிவேன்.
காமம் மிகுந்த அன்பினால் ஏற்படும் நாசங்களிலிருந்து என்னை அநேகமாகக்
காப்பாற்றிய ஒரு சந்தர்ப்பத்தை மட்டும் இங்கே சொன்னேன். குறிப்பிடத்தக்க
மற்றொன்றும் உண்டு. நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை
இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருளுவார் என்பதை எத்தனையோ உதாரணங்கள்
எனக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன. ஹிந்து சமூகத்தில் குழந்தைகளுக்குக்
கல்யாணம் செய்து வைத்துவிடும் கொடிய வழக்கம் இருந்தாலும், அதனால்
ஏற்படக்கூடிய தீமைகளை ஒரளவுக்குக் குறைக்கக் கூடிய மற்றொரு வழக்கமும்
அதனிடம் இருந்தது. இளம் தம்பதிகள் நீண்ட காலம் சேர்ந்து இருக்கப்
பெற்றோர்கள் விடுவதில்லை. குழந்தைப் பருவ மனைவி, பாதிக் காலத்தைத் தன்
பெற்றோரின் வீட்டிலேயே கழித்து விடுகிறாள். எங்கள் விஷயத்திலும் இப்படியே
ஆயிற்று. அதாவது, எங்கள் மண வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளில் (அதாவது
13-இலிருந்து 18-ஆம் வயது வரையில்) மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கு மேல்
நாங்கள் சேர்ந்திருந்ததில்லை. ஆறு மாதகாலத்தை ஒன்றாக இருந்து
கழித்திருப்போம். அதற்குள் என் மனைவியை அவளுடைய பெற்றோர்கள் அழைத்துப் போய்
விடுவார்கள். அப்படி அழைத்துக் கொண்டு போய்விடுவது அந்தச் சமயத்தில்
எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காமல்தான் இருந்தது. ஆனால் அவ்விதம் அழைத்துச்
சென்றதே எங்கள் இருவரையும் காப்பாற்றியது. பதினெட்டாவது வயதில் நான்
இங்கிலாந்துக்குப் போனேன். இதனால் ஏற்பட்ட நீண்ட பிரிவு, எங்களுக்கு
நன்மையாகவே முடிந்தது. இங்கிலாந்திருந்து நான் திரும்பி வந்த பிறகும் கூட
ஆறு மாதங்களுக்கு மேல் நாங்கள் சேர்ந்து வாழ்ந்ததில்லை. ஏனெனில் ராஜ
கோட்டுக்கும் பம்பாய்க்கும் நான் ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. பிறகு
நான் சிற்றின்ப இச்சையிலிருந்து பெரிதும் விடுபட்ட நிலையில் இருந்தேன்.
5. உயர்நிலைப் பள்ளியில்

எனக்கு மணமான போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் என்று
முன்பே கூறியிருக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பிமார் மூன்று பேரும் ஒரே
பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம். மூத்த அண்ணன் மிகவும் மேல்
வகுப்பில் படித்தார். என்னோடு விவாகமான அண்ணனோ எனக்கு ஒரு வகுப்பு மேலே
படித்தார். விவாகத்தால் எங்கள் இருவருக்கும் ஓர் ஆண்டு வீணாயிற்று. இதன்
பலன் தான் என் அண்ணனுக்கு பின்னும் மோசமானதாகவே இருந்தது. அவர் படிப்பையே
முற்றும் விட்டு விட்டார். அவரைப் போல எத்தனை இளைஞர்கள் இதே கதிக்கு
ஆளாகியிருக்கிறார்கள் என்பதைக் கடவுளே அறிவார். இன்றைய நமது ஹிந்து
சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும் ஏக காலத்தில் நடைபெறுகின்றன.
நான் தொடர்ந்து படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் என்னை மந்தமானவன்
என்று யாருமே எண்ணவில்லை. என் உபாத்தியாயர்கள் என்னிடம் எப்பொழுதும்
அன்போடு இருந்தார்கள். என் படிப்பின் அபிவிருத்தி, நடத்தை ஆகியவை பற்றி
ஆண்டுதோறும் பெற்றோருக்கு நற்சாட்சிப் பத்திரம் அனுப்பப்படும். கெடுதலான
பத்திரம் என்னைக் குறித்து ஒரு தடவையேனும் வந்ததில்லை. உண்மையில் நான்
இரண்டாம் வகுப்புத் தேறிய பிறகு பரிசுகளையும் பெற்றேன். ஐந்தாம், ஆறாம்
வகுப்புகளில் முறையே நான்கு ரூபாயும் பத்து ரூபாயும் உபகாரச் சம்பளங்களாகப்
பெற்றேன். இவைகளை நான் அடைந்ததற்கு என் திறமையை விட என்னுடைய
நல்லதிர்ஷ்டமே காரணம். ஏனெனில் இந்த உபகாரச் சம்பளம் எல்லோருக்கும்
உரியதன்று. கத்தியவாரில் சோராத் பகுதியிலிருந்து வரும் சிறந்த
மாணவர்களுக்கு மாத்திரமே அது உண்டு. அந்த நாட்களில் நாப்பது முதல் ஐம்பது
பேர் வரையில் கொண்ட ஒரு வகுப்பில் சோராத்திலிருந்து வரும் மாணவர்கள் பலர்
இருப்பதில்லை.
என் திறமையில் எனக்குப் பிரமாதமான மதிப்பு இருந்ததில்லை என்பதே
ஞாபகம். எனக்குப் பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைக்கும் போதெல்லாம்
நான் ஆச்சரியப்படுவது வழக்கம். ஆனால், எனது நன்னடத்தையை நான் சர்வ
ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு சிறிது குறை ஏற்பட்டாலும்
கண்ணீர் விட்டு அழுது விடுவேன். கண்டிக்கப்பட்டாலோ, கண்டிக்கபட வேண்டியவன்
என்று உபாத்தியாயர் கருதினாலோ என்னால் சகிக்க முடியாது. ஒரு தடவை
அடிப்பட்டதாக எனக்கு நினைவிருக்கிறது. அடிப்பட்டதற்காக நான்
வருத்தப்படவில்லை, நான் அடிபட வேண்டியவன் என்று கருதப்பட்டதே எனக்கு அதிக
வருத்தத்தை அளித்தது. அதற்காகப் பரிதாபகரமாக அழுதேன். முதல் வகுப்பிலோ,
இரண்டாம் வகுப்பிலோ படித்தபோது நடந்தது அது. நான் ஏழாம் வகுப்பில்
படித்துக் கொண்டிருந்த போது அத்தகைய மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சமயம்
தோராப்ஜி எதுல்ஜி ஜிமி தலைமையாசிரியராக இருந்தார். மாணவர்களுக்கெல்லாம்
அவரிடம் அதிகப் பிரியம். அதே சமயத்தில் கட்டுத் திட்டங்களில் மிகக்
கண்டிப்பானவர். குறிப்பிட்ட முறைப்படி காரியங்களைச் செய்பவர். நன்றாக
போதிப்பவருங்கூட. அவர் மேல் வகுப்புப் பையன்களுக்குத் தேகாப்பியாசத்தையும்,
கிரிக்கெட்டையும் கட்டாயமாக்கி விட்டார். இந்த இரண்டும் எனக்குப்
பிடிக்கவில்லை. இவை கட்டாயமாக்கப் படுவதற்கு முன்னால் நான் தேகாப்பியாசம்
செய்ததோ, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடியதோ இல்லை. ஒன்றிலும்
சேராமல் நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த கூச்சம் ஒரு காரணம்.
அப்படி இருந்து விட்டது தவறு என்பதை இப்பொழுது அறிகிறேன். படிப்புக்கும்
தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்தும் அப்பொழுது எனக்கு
இருந்தது. ஆனால், இன்று பாடத்திட்டத்தில் மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம்
அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை
அறிவேன்.
என்றாலும் தேகப் பயிற்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டதனால்
எனக்கு அதிகத் தீமை எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றும் கூறுவேன். இதற்கு
ஒரு காரணம் உண்டு. திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்கூடிய
நன்மைகளைக் குறித்துப் புத்தகங்களில் படித்திருந்தேன். இந்த யோசனை எனக்குப்
பிடித்ததால் நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்பழக்கம்
இன்னும் எனக்கு இருக்கிறது. இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது.
தேகாப்பியாச வகுப்புக்குப் போக நான் விரும்பாததற்குக் காரணம், என்
தந்தைக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வமேயாகும்.
பள்ளிக்கூடம் விட்டதும், நேரே அவசரமாக வீட்டுக்குப் போய் அவருக்குப்
பணிவிடை செய்வேன். இந்தச் சேவை செய்வதற்குக் கட்டாயத் தேகப்பயிற்சி
இடையூறாக இருந்தது. என் தந்தைக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும் ஆகையால்
தேகப்பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு திரு. ஜிமிடம்
கோரினேன். ஆனால் அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ஒரு
நாள் சனிக்கிழமை, அன்று காலையில் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும். மாலை 4
மணிக்குத் தேகப் பயிற்சிக்காக நான் வீட்டிலிருந்து திரும்பவும்
பள்ளிக்கூடம் போக வேண்டும் நான் பள்ளிக்கூடம் போய் சேருவதற்கு முன்னால்
அங்கிருந்து பிள்ளைகளெல்லாம். போய்விட்டார்கள். வந்திருந்தோரின் கணக்கை
திரு. ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்த போது நான் வரவில்லை என்ற
குறித்திருந்ததைக் கண்டார். ஏன் வரவில்லை என்று என்னைக் கேட்டதற்கு
நடந்ததைச் சொன்னேன். நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார். ஒரணாவோ
அல்லது இரண்டணாவோ (எவ்வளவு என்று எனக்குச் சரியாக நினைவில்லை) அபராதம்
செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பொய் சொன்னதாக நான் தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு மிகுந்த மன
வேதனையாகி விட்டது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு
வழியே இல்லை. வேதனை தாங்காமல் கதறி அழுதேன். உண்மையுள்ளவன் எச்சரிக்கையுடன்
இருப்பவனாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்தேன்.
பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்து கொண்ட முதல் சந்தர்ப்பமும்,
கடைசிச் சந்தர்ப்பமும் இதுதான். முடிவில் அந்த அபராதம் ரத்துச்
செய்யப்பட்டு விட்டதில் நான் வெற்றி அடைந்தேன் என்று இலேசாக ஞாபகம்
இருக்கிறது. பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு நான் வந்துவிட
வேண்டும் என்று தாம் விரும்புவதாகத் தலைமையாசிரியருக்கு என் தந்தையே
எழுதியதன் பேரில், தேகாப்பியாசத்திற்குப் போகவேண்டும் என்பதில் இருந்து
விலக்குப் பெற்றேன்.
தேகாப்பியாசத்தில் அசட்டையாக இருந்து விட்டதனால் எனக்குத் தீமை
ஏற்படாது போனாலும் மற்றொரு விஷயத்தில் நான் அசட்டையாக இருந்து விட்டதன்
பலனை இப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக இருக்க
வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து
உண்டாயிற்று என்று தெரியவில்லை. நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில்
இந்த அபிப்பிராயமே எனக்கு இருந்தது. பிறகு, முக்கியமாகத்
தென்னாப்பிரிக்காவில், இளம் வக்கீல்களும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து,
அங்கேயே படித்த இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக் கண்டபோது என்னைக்
குறித்து நானே வெட்கப் பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன் இருந்து
விட்டதற்காக வருந்தவும் செய்தேன். மோசமான கையெழுத்தை, அரைகுறையான
படிப்புக்கு அறிகுறியாகக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். கையெழுத்து
நன்றாக இருக்கும்படி செய்யப் பிறகு முயன்றேன். ஆனால் அதற்குக் காலம் கடந்து
போய் விட்டது. இளமையில் அசட்டையாக இருந்து விட்டதனால் ஏற்பட்ட தீமையைப்
பிறகு என்றுமே நிவர்த்தி செய்து கொள்ள இயலவில்லை. ஒவ்வொர் இளைஞரும்
இளம்பெண்ணும், என்னுடைய உதாரணத்தைக் கண்டாவது எச்சரிக்கையுடன்
இருக்கட்டும்; கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும் படிப்பின் ஒரு பகுதி
என்பதை அறியட்டும். குழந்தைகளுக்கு எழுத்துக்களை எழுதுவதற்குக் கற்றுக்
கொடுப்பதற்கு முன்னால் சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று
இப்பொழுது கருதுகிறேன். பூக்கள், பறவைகள் போன்றவைகளைக் குழந்தை பார்த்தே
தெரிந்து கொள்ளுவதைப் போல, எழுத்துக்களையும் அது பார்த்தே தெரிந்து
கொள்ளட்டும். பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக் கற்றுக் கொண்ட பிறகு
எழுத்துக்களை எழுதக் கற்கட்டும். அப்போது அக்குழந்தையின் கையெழுத்து அழகாக
அமையும்.
என் பள்ளிக்கூட நினைவுகளில் குறிப்பிடத்தக்கவை மற்றும் இரண்டு உண்டு.
என் விவாகத்தினால் எனக்கு ஒரு வருடப் படிப்பு வீணாகி விட்டது. ஒரு
வகுப்புத் தாண்டி மேல் வகுப்பில் என்னைத் தூக்கிப்போட்டு எனக்கு அந்த
நஷ்டத்தை ஈடு செய்துவிட ஆசிரியர் விரும்பினார். நன்றாக உழைத்துப் படிக்கும்
பிள்ளைகளுக்கே இந்தச் சலுகையை அளிப்பது வழக்கம். நான் மூன்றாம் வகுப்பில்
ஆறு மாதங்களே படித்தேன். கோடை விடுமுறைக்கு முன்னால் நடக்கும்
பரீட்சைக்குப் பிறகு என்னை நான்காம் வகுப்புக்கு அனுப்பி விட்டார்கள்.
நான்காம் வகுப்பிலிருந்து பல பாடங்கள் ஆங்கிலத்திலேயே போதிக்கப்பட்டன.
எனக்கோ திக்குத்திசை தெரியவில்லை. ஷேத்திர கணிதம் புதுப்பாடம். ஏற்கனவே அது
எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. அதை ஆங்கிலத்திலும் போதிக்க ஆரம்பித்து
விட்டதால் எனக்கு இன்னும் அதிகக் கஷ்டமாயிற்று. ஆசிரியர் இப்பாடத்தை மிக
நன்றாகவே சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்னால் விளக்கிக் கொள்ள இயலவில்லை.
பன்முறையும் மனச்சோர்வடைந்து விடுவேன். மூன்றாம் வகுப்புக்கே திரும்பிப்
போய்விடலாம் என்றும் எண்ணுவேன். இரண்டு வருடப் படிப்பை ஒரே வருடத்தில்
படித்துவிடலாம் என்பது அதிகப்படியான ஆசை என்றும் எனக்குத் தோன்றும். ஆனால்,
அப்படி மூன்றாம் வகுப்புக்கே போய்விடுவது எனக்கு மாத்திரமல்ல,
ஆசிரியருக்கும் அவமானம். ஏனெனில் கஷ்டப்பட்டுப் படிக்கக்கூடியவன் நான்
என்று நம்பியே என்னை மேல் வகுப்பில் சேர்க்க அவர் சிபாரிசு செய்தார். இந்த
இரண்டு அவமானங்களையும் குறித்து எனக்கு ஏற்பட்ட பயத்தினால் விடாப்பிடியாகப்
படிக்கலானேன். அதிக சிரமத்தின் பேரில் யூக்ளிட்டின் பதிமூன்றாவது
பாடத்திற்கு வந்த பிறகு அந்தப் பாடம் மிக எளிதானது என்று திடீரென்று எனக்கு
தோன்றியது. பகுத்தறிவின் சக்தியைக் கொண்டு மாத்திரமே கற்றுவிட முடியும்.
ஒரு பாடம் கஷ்டமானதாகவே இருக்க முடியாது. அச்சமயத்திலிருந்து ஷேத்திர
கணிதம் எனக்குச் சுலபமானதாகவும் சுவையுள்ளதாகவும் ஆயிற்று.
என்றாலும், சமஸ்கிருத பாடம் அதிகக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஷேத்திர
கணிதத்தில் மனப்பாடம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால்,
சமஸ்கிருதத்திலோ ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன்.
இந்தப் பாடமும் நான்காம் வகுப்பிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால்
வகுப்புக்குப் போனதும் மனச்சோர்வு அடைந்து விட்டேன். அந்த ஆசிரியரோ
கடுமையாக வேலை வாங்குகிறவர். பையன்களை நிர்ப்பந்தப் படுத்துவதில் அவருக்கு
ஒரே ஆசை என்றும் நினைத்தேன். சமஸ்கிருத ஆசிரியருக்கும் பர்ஸிய
ஆசிரியருக்கும் ஒருவகைப் போட்டியே இருந்து வந்தது. பர்ஸிய பாஷை போதித்த
ஆசிரியர் மாணவர்களிடம் அப்படிக் கண்டிப்பில்லாதவர்; பர்ஸிய பாஷை இலகுவானது;
அந்த ஆசிரியரும் நல்லவர்; மாணவர்களை வருத்துவதில்லை என்று பையன்கள்
அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்ளுவார்கள். சுலபம் என்பதில் மயங்கி
விட்டேன்.
ஒருநாள் பர்ஸிய வகுப்பிலேயே போய் உட்கார்ந்து கொண்டேன். நான் இவ்விதம்
செய்ததற்காகச் சமஸ்கிருத ஆசிரியர் வருத்தப்பட்டார். என்னை அழைத்துப்
பக்கத்தில் வைத்துக் கொண்டு பினவருமாறு சொன்னார்: "நீ ஒரு வைஷ்ணவரின் மகன்
என்பதை எப்படி மறந்து போனாய்? உன் மதத்தின் மொழியை நீ கற்க வேண்டாமா? இதில்
உனக்கு ஏதேனும் கஷ்டமிருந்தால் என்னிடம் வந்து சொல்லுவதற்கென்ன? என்னால்
ஆன வரையில் சிரமம்பட்டு மாணவர்களான உங்களுக்குச் சமஸ்கிருதம் சொல்லிக்
கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலே போகப் போக மனத்தைக் கவரும்
விஷயங்கள் இம்மொழியில் இருப்பதை நீ அறிவாய். நீ மனம் தளர்ந்து விடக்கூடாது.
வா. திரும்பவும் சமஸ்கிருத வகுப்பிலேயே வந்து உட்கார்."
அவர் காட்டிய அன்பினால் வெட்கிப் போனேன். ஆசிரியரின் அன்பை அலட்சியம்
செய்து விட என்னால் முடியவில்லை. இந்த ஆசிரியரான கிருஷ்ண சங்கர பாண்டியாவை
இன்று நான் நன்றியுடனேயே நினைக்கிறேன். ஏனெனில், அப்பொழுது நான் கற்றுக்
கொண்ட கொஞ்ச சமஸ்கிருத ஞானமாவது எனக்கு இல்லாதிருக்குமாயின், நமது சமய
நூல்களில் எனக்கு எந்த விதமான சிரத்தையும் இருந்திருப்பதற்கில்லை.
அம்மொழியில் இன்னும் அதிக ஞானத்தை நான் அடையாது போனேனே என்பதற்காக
இப்பொழுது மிகவும் வருந்துகிறேன். ஏனெனில், ஒவ்வொரு ஹிந்துப் பையனும்
பெண்ணும், சமஸ்கிருதத்தை நன்றாக படித்திருப்பது அவசியம் என்பதை இப்பொழுது
உணருகிறேன்.
இந்தியாவில் உள்ள எல்லா உயர்தரக் கல்வி முறையிலும் தாய்மொழியோடு
ஹிந்தி, சமஸ்கிருதம், பர்ஸிய மொழி, அரபு, ஆங்கிலம் ஆகிய இத்தனை
மொழிகளுக்கும் இடமிருக்க வேண்டும் என்பது இப்பொழுது என் அபிப்பிராயம்.
இந்தப் பெரிய ஜாபிதாவைப் பார்த்த யாரும் பயந்துவிட வேண்டியதில்லை. நமது
கல்வி, சரியான முறையில் இருந்து, அந்நிய மொழியின் மூலமே எல்லாப்
பாடங்களையும் கற்க வேண்டி இருக்கும் சுமையும் பிள்ளைகளுக்கும்
இல்லாதிருப்பின், இத்தனை மொழிகளையும் கற்பது சங்கடமாயிராது. அதற்குப்
பதிலாகப் பெரிதும் சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கும் என்பது நிச்சயம். ஒரு
மொழியை முறைப்படி கற்றுக்கொண்டு விட்டவர்களுக்கு மற்ற மொழிகளையும்
கற்றுக்கொண்டு விடுவது எளிதாகும்.
ஹிந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளையும் உண்மையில்
ஒரு மொழி என்றே சொல்லலாம். பர்ஸியமும் அரபும் அதே போல ஒரு மொழியே. பர்ஸிய
மொழி ஆரிய மொழி இனத்தைச் சேர்ந்தாயினும், பர்ஸிய மொழிக்கும், அரபு
மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஏனெனில், இவ்விரு மொழிகளும் இஸ்லாத்தின்
வளர்ச்சியோடு முழு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. உருது ஒரு தனி மொழி என்று
நான் கருதுவதில்லை. எனெனில், ஹிந்தி இலக்கணமே அதன் இலக்கணம்; பர்ஸிய,
அரபுச் சொற்களே அதன் சொற்கள். நல்ல குஜராத்தி, நல்ல ஹிந்தி, நல்ல வங்காளி
அல்லது நல்ல மராத்தி கற்க விரும்புவோர் சமஸ்கிருதத்தைக் கற்றாக வேண்டியது
எப்படி முக்கியமோ, அப்படி நல்ல உருது கற்பதற்குப் பர்ஸிய, அரபு மொழிகளைப்
படிப்பது அவசியம்.
6. ஒரு துக்கமான சம்பவம்
உயர்தரப் பள்ளியில் பல சமயங்களிலும் எனக்கு இருந்த நண்பர்கள் மிகச் சிலரே.
அவர்களில் இருவர் நெருங்கிய நண்பர்கள் எனலாம். அவர்களில் ஒருவருடைய நட்பு
வெகு காலம் நீடிக்கவில்லை. அவரை நான் கைவிடவில்லை. மற்றவர்களுடன் நான்
நட்புக் கொண்டிருந்ததற்காக அவர் தான் என்னக் கைவிட்டு விட்டார். பின்னால்
ஏற்பட்ட இந்த நட்பை, என் வாழ்க்கையில் நேர்ந்த ஒரு துக்கமான சம்பவமாகவே
நான் கருதுகிறேன். இந்நட்பு நீண்ட காலம் நீடித்தது. சீர்திருத்த வேண்டும்
என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்புக் கொண்டேன்.
இந்த நண்பர், முதலில் என் அண்ணனின் நண்பர். இருவரும் ஒன்றாகப்
படித்தவர்கள். அவரிடமிருந்த குறைபாடுகளை நான் அறிவேன். ஆயினும்,
விசுவாசமுள்ள நண்பர் என்று அவரைக் கருதினேன். எனக்குக் கெட்ட சகவாசம்
ஏற்பட்டிருக்கிறது என்று என் தாயார், என் மூத்த அண்ணன், என் மனைவி
முதலியவர்கள் எல்லோரும் எனக்கு எச்சரிக்கை செய்தார்கள். என் மனைவியின்
எச்சரிக்கையை நான் மதிக்கவில்லை. ஆனால், என் தாயார், மூத்த அண்ணன்
ஆகியோருடைய கருத்துக்கு விரோதமாக நான் நடக்கத் துணியவில்லை. ஆகவே,
அவர்களுக்குப் பின் வருமாறு சமாதானம் கூறினேன்: "நீங்கள் கூறும்
குறைகளெல்லாம் அவரிடம் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் அவரிடம்
இருக்கும் நற்குணங்கள் உங்களுக்குத் தெரியா. அவரைத் திருத்திவிட வேண்டும்
என்பதற்காகவே, நான் அவருடன் பழகுவதால் அவர் என்னைக் கெடுத்துவிட முடியாது.
அவர் தம்முடைய வழிகளை மாத்திரம் திருத்திக் கொண்டு விட்டால் மிகச்
சிறந்தவராகி விடுவார் என்பது நிச்சயம். ஆகையால், எனக்காக நீங்கள் கவலைப்பட
வேண்டாம் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்."
நான் இவ்விதம் கூறியது அவர்களுக்குத் திருப்தியளித்திருக்கும் என்று
நான் எண்ணவில்லை என்றாலும், அவர்கள் என் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு என்
வழியே போக என்னை அனுமதித்து விட்டார்கள்.
நான் அப்பொழுது எண்ணியதெல்லாம் தவறு என்பதைப் பிறகு கண்டேன்.
சீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம்
நெருங்கிய சகவாசம் வைத்தக் கொள்ளலாகாது. ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு.
ஆனால், அத்தகைய நட்பை இவ்வுலகில் காண்பது அரிது. ஒரே வித
சுபாவமுள்ளவர்களிடையே ஏற்படும் நட்பே முற்றும் சிறந்ததாகவும்
நீடித்ததாகவும் இருக்கும். நண்பர்களில் ஒருவர் குணம் இன்னொருவருக்குப்
படிகிறது. ஆகவே நட்பினால் சீர்திருத்துவது என்பதற்கு அதிக இடமே இல்லை.
தனிப்பட்டு அன்னியோன்யமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும்
என்பதே என் அபிப்ராயம். ஏனெனில், மனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே
எளிதில் படிந்து விடுகின்றன. கடவுளோடு தோழமை கொள்ள விரும்புவோர் தனியே
விலகி இருக்க வேண்டும்; அல்லது உலகம் முழுவதையுமே தமது நண்பனாக்கிக் கொள்ள
வேண்டும். நான் கூறுவது தவறாக இருக்கலாம். என்றாலும், ஒரு நெருங்கிய நட்பை
வளர்த்துக் கொள்ள நான் செய்த முயற்சியில் தோல்வியே ஏற்பட்டது.
ராஜ்கோட் முழுவதிலும் சீர்திருத்தம் என்ற அலையின் வேகம் மிகுந்திருந்த
சமயத்திலேயே இந்த நண்பரை முதன் முதலில் நான் சந்தித்தேன். எங்கள்
ஆசிரியர்களில் பலர் ரகசியமாக மதுவும், மாமிசமும் சாப்பிடுகிறார்கள் என்று
இந்த நண்பர் என்னிடம் கூறினார். ராஜ்கோட்டில் இருக்கும் பல பிரமுகர்களின்
பெயர்களை சொல்லி அவர்களும் இந்த ரகத்தில் சேர்ந்தவர்களே என்றார்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிலரும் இப்படிச் செய்கிறார்கள் என்றார்.
இதைக்கேட்டு நான் ஆச்சரியமும் மனவேதனையும் அடைந்தேன். அவர்கள்
இவ்விதமானதற்குக் காரணம் என்ன என்று நான் கேட்டதற்குப் பின்வருமாறு அவர்
சொன்னார்: "புலால் உண்ணாததால் நாம் பலமில்லாதவர்களாக இருக்கிறோம். புலால்
உண்பவர்களாக இருப்பதனாலேயே ஆங்கிலேயரால் நம்மை ஆளமுடிகிறது. நான் எவ்வளவு
திடகாத்திரத்துடன் இருக்கிறேன் என்பதை நீயே பார்க்கிறாய். ஓட்டப்
பந்தயத்தில் நான் வல்லவன் என்பதும் உனக்குத் தெரியும். இதற்குக் காரணம்
நான் புலால் உண்பதுதான். மாமிசம் உண்போருக்குக் கட்டிச் சிரங்குகள்,
கொப்பளங்கள் முதலியன வருவதில்லை. எப்பொழுதாவது அவர்களுக்கு வந்து
விட்டாலும் சீக்கிரத்தில் குணமாகி விடுகின்றன. புலால் உண்ணும் நமது
உபாத்தியாயர்களும் மற்ற முக்கியஸ்தர்களும் முட்டாள்கள் அல்ல. அதிலிருக்கும்
நன்மை அவர்களுக்குத் தெரியும். நீயும் அவர்களைப் போல் சாப்பிட வேண்டும்.
சோதனை செய்து பார்ப்பதைப் போல நல்லது எதுவும் இல்லை. சாப்பிட்டு அது
எவ்வளவு பலத்தைக்கொடுக்கிறது என்று பார்."
புலால் உண்பதை வற்புறுத்திச் சொல்லப்பட்ட இவை யாவும் ஒரே சமயத்தில்
கூறப்பட்டவை அல்ல. என் மனத்தில் படும்படி செய்வதற்காக என் நண்பர் பல
சமயங்களில் நீண்ட விரிவான வாதம் புரிந்திருக்கிறார். அதன் சாரமே இது. என
மூத்த சகோதரர் இதற்கு முன்னாலேயே அந்தப் படுகுழியில் விழுந்து விட்டார்.
ஆகையால் நண்பரின் வாதங்களை அவரும் ஆதரித்துப் பேசினார். என் அண்ணனோடும்,
இந்த நண்பரோடும் ஒப்பிடும் போது, நான் நிச்சயமாக நோஞ்சலாகவே இருந்தேன்.
அவர்கள் இருவரும் திடகாத்திரம் உடையவர்கள்; பலசாலிகள்; அதிக தைரியசாலிகள்.
இந்த நண்பரின் பராக்கிரமச் செயல்களைக் கண்டு மயங்கி விட்டேன். அவர் நீண்ட
தூரம் ஓடுவார். உயரத்திலும், நீளத்திலும் தாவிக் குதிப்பதில் சமர்த்தர்.
எவ்வளவு அடி கொடுத்தாலும் சரி, தாங்கிக் கொள்ளுவார். இந்தப் பராக்கிரமச்
செயல்களை யெல்லாம் அவர் என்னிடம் செய்து காட்டுவார். தமக்கு இல்லாத
திறமையைப் பிறரிடம் காணும்போது யாரும் பிரமித்து விடுவது இயல்பு. அதே போல
நண்பரின் பராக்கிரமச் செயல்களைப் பார்த்த நானும் பிரமித்துப் போனேன்.
அவரைப் போல் நானும் இருக்க வேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. என்னால்
தாண்டவோ, ஓடவோ முடியாது. அவரைப் போன்றே நானும் ஏன் பலமுள்ளவனாக இருக்கக்
கூடாது?
மேலும், அப்பொழுது நான் ஒரு கோழையாகவும் இருந்தேன். திருடர்கள்
பயமும், பிசாசுகள், பாம்புகள் ஆகியவற்றின் பயமும் எனக்கு இருந்தன. இரவில்
வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். இருட்டு என்றாலே எனக்கு பயங்கரமாக
இருக்கும். ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும், மற்றொரு பக்கத்திலிருந்து
திருடர்களும், வேறொரு பக்கத்திலிருந்து பாம்புகளும் வருவது போலக் கற்பனை
செய்து கொண்டிருக்கும் காரணத்தால், இருட்டில் தூங்குவதென்பது என்னால்
முடியாத காரியம். எனவே, அறையில் விளக்கு இல்லாமல் என்னால் தூங்க முடியாது.
என் மனைவி அப்பொழுது குழந்தையல்ல; வாலிபப் பருவத்தையடையும் தறுவாயில்
இருந்தாள். அவள் என் பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பாள். எனக்கு
இருந்த பயங்களையெல்லாம் அவளிடம் எப்படிச் சொல்லுவது ? என்னை விட அவள்
தைரியசாலி என்பதை நான் அறிவேன். இதனால் என்னைக் குறித்து நானே வெட்கப்
படுவேன். பாம்பு, பிசாசு என்ற பயம் அவளுக்கு இல்லை. இருட்டில் எங்கே
வேண்டுமானாலும் போவாள். என்னிடமிருந்த இந்தப் பலவீனங்களை எல்லாம் என்
நண்பர் அறிவார். உயிரோடு பாம்பைத் தம் கையில் பிடிக்க முடியும் என்றும்,
திருடர்களை எதிர்த்து விரட்டத் தம்மால் முடியும் என்றும், பிசாசுகள் உண்டு
என்றே தாம் நம்புவதில்லை என்றும் அவர் என்னிடம் கூறுவார். இவ்வளவும் புலால்
உண்பதன் பலன்கள் என்பார்.
குஜராத்திக் கவியான நர்மத்தின் சிந்துப் பாடல் ஒன்றைப் பள்ளிச் சிறுவர்கள் பாடுவார்கள். அது பின் வருமாறு,
பிரம்மாண்டமான ஆங்கிலேயனைப் பார்,
சின்னஞ் சிறிய இந்தியனை அவன் ஆளுகிறான்.
காரணம் - புலால் உண்பதால்
அவன் ஐந்து முழ உயரம் இருப்பதே.
இவையெல்லாம் தமக்குரிய விளைவை என்னிடம் உண்டு பண்ணி விட்டன. நான்
தோற்றுப் போனேன். புலால் உணவு நல்லது; அது என்னைப் பலமுள்ளவனாகவும்
தைரியசாலியாகவும் மாற்றும்; நாடு முழுவதுமே புலால் உணவு கொள்ள ஆரம்பித்து
விட்டால் ஆங்கிலேயரை வென்று விடலாம் என்ற எண்ணங்கள் என்னுள் வளர்ந்தன.
அதன்பேரில் பரிசோதனையைத் தொடங்குவதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டது.
அது ரகசியமாக நடைபெற வேண்டும். காந்தி சமூகத்தினர் வைஷ்ணவர்கள். முக்கியமாக
என் பெற்றோர்கள் தீவிர வைஷ்ணவர்கள். நாள் தவறாமல் அவர்கள் விஷ்ணு
கோயிலுக்குப் போவார்கள். குடும்பத்திற்கு என்றே சொந்தமான கோயில்களும்
உண்டு. ஜைன சமயம் குஜராத்தில் பலமாக பரவி இருந்தது. அதன் செல்வாக்கு
எங்கும், எல்லா சமயங்களிலும் உணரப்பட்டது. குஜராத்தில் ஜைனர்களிடத்திலும்,
வைஷ்ணவர்களிடத்திலும் புலால் உணவுக்கு இருந்த அவ்வளவு பலமான எதிர்ப்பையும்,
அதன் மீது இருந்த கடுமையான வெறுப்பையும் போல் இந்தியாவிலோ, வெளிநாடுகளிலோ
காண முடியாது. இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன் நான். அதோடு என்
பெற்றோரிடம் எனக்கு மிகுந்த பக்தியும் உண்டு. நான் புலால் உண்டேன் என்பதை
அறிந்த கணத்திலேயே அவர்கள் அதிர்ச்சியினால் செத்து விடுவார்கள் என்பதையும்
அறிவேன். மேலும் சத்தியத்தில் நான் கொண்டிருந்த பற்று, என்னை அதிகப்படியான
எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் செய்தது. மாமிசம் சாப்பிட ஆரம்பித்து
விடுவேனாயின், என் பெற்றோரை நான் ஏமாற்ற வேண்டியிருக்கும் என்பது எனக்கு
அப்பொழுது தெரியாது என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் என் புத்தியெல்லாம்
சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தது. ருசிக்கு சாப்பிவது என்பதே அதில்
இல்லை. அதற்கு தனிப்பட்ட ருசி இருப்பதாக எனக்குத் தெரியாது. பலசாலியாகவும்
தைரியசாலியாகவும் ஆகவேண்டும் என்று விரும்பினேன். ஆங்கிலேயரை தோற்கடித்து
இந்தியா சுதந்திரமடையும்படி செய்வதற்கு என் நாட்டினரும் அப்படி ஆகவேண்டும்
என்று ஆசைப் பட்டேன். சுயராஜ்யம் என்ற சொல்லை அதுவரை நான் கேட்டதில்லை.
ஆனால் சுதந்திரம் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும்.
சீர்திருத்தத்தில் இருந்த உற்சாகம் என்னைக் குருடனாக்கி விட்டது.
ரகசியமாகவே இருக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிடவே, இக்காரியத்தை என்
பெற்றோருக்குத் தெரியாதபடி மறைத்து வைப்பது சத்தியத்தினின்று தவறியதாகாது
என்றும் என்னையே சமாதானப் படுத்திக் கொண்டேன்.
7. ஒரு துக்கமான சம்பவம் (தொடர்ச்சி)
முடிவில் அந்த நாள் வந்தது. அப்பொழுது நான் இருந்த நிலையை முழுவதும்
விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு பக்கத்தில் சீர்திருத்த ஆர்வம்; வாழ்க்கையில்
முக்கியமான மாறுதலைச் செய்யும் புதுமை. மறுபக்கத்தில் இந்தக் காரியத்தைத்
திருடனைப் போல ஒளிந்து கொண்டு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம். இந்த
இரண்டில் எது என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை என்னால் சொல்லமுடியாது.
ஆற்றங்கரையில் தன்னந்தனியான இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என்
வாழ்க்கையிலேயே முதல் தடவையாக மாமிசத்தைப் பார்த்தேன். கடை ரொட்டியும்
அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆட்டிறைச்சி,
தின்பதற்குத் தோலைப்போல் கடினமாக இருந்தது. என்னால் அதைத் தின்னவே
முடியவில்லை. எனக்கு அருவருப்பாக இருந்தது. தின்ன முடியாதென்று
விட்டுவிட்டேன்.
அதன் பிறகு அன்றிரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு பயங்கரம்
எனக்குச் சதா இருந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கண் அயரும் போதெல்லாம்,
உயிரோடு ஓர் ஆடு என் வயிற்றுக்குள் இருந்து கொண்டு கத்துவதுபோல் தோன்றும்.
திடுக்கிட்டு எழுவேன். செய்து விட்ட காரியத்திற்காக மனம் உறுத்திக் கொண்டே
இருக்கும். ஆனால் புலால் உண்பது ஒரு கடமை என்று எனக்கு நானே
நினைவுபடுத்திக் கொள்வேன், உற்சாகத்தையும் அடைவேன்.
என் நண்பர் பிடித்த பிடியைச் சாமானியத்தில் விட்டுவிடக் கூடியவர்
அல்ல. இறைச்சியை ருசியுள்ள பலகாரங்களாகத் தயார் செய்து, அவை கண்ணுக்கும்
அழகாக இருக்கும்படி செய்ய ஆரம்பித்தார். அவற்றைச் சாப்பிடுவதற்கு
இப்பொழுதெல்லாம் ஆற்றங்கரையில் தன்னந் தனியான இடத்தைத் தேடிப் போவதும்
இல்லை. ராஜாங்க மாளிகை ஒன்று கிடைத்தது. மேஜை நாற்காலிகளெல்லாம்
போடப்பட்டிருந்த அம்மாளிகையின் போஜன மண்டபத்தை, அங்கிருந்த சமையற்காரனுடன்
பேசி, அந்த நண்பர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் தூண்டிலில் நான் விழுந்துவிட்டேன். கடை ரொட்டியிடம் எனக்கு
இருந்த வெறுப்பையும், ஆடுகளிடம் கொண்டிருந்த இரக்கத்தையும் ஒருவாறு
போக்கிக்கொண்டு விட்டேன். தனி மாமிசம் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும்
மாமிசப் பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டு வந்தேன். இவ்விதம் சுமார்
ஓராண்டு நடந்து வந்தது. ஆனால் ஆறு தடவைகளுக்கு மேல் இத்தகைய விருந்துகளை
நாங்கள் சாப்பிட்டு விடவில்லை. ஏனெனில், தினந்தோறும் எங்களுக்கு ராஜாங்க
மாளிகை கிடைக்கவில்லை. அத்துடன் மாமிசப் பலகாரங்களைத் தயாரிப்பது அதிக
செலவுள்ளதாகையால் அடிக்கடி தயாரிப்பது என்பதிலும் கஷ்டங்கள் இருந்தன.
இந்தச் சீர்திருத்தத்திற்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆகையால் இந்தச்
செலவுக்கு வேண்டியதையெல்லாம் என் நண்பர் தான் தேடிக்கொள்ள
வேண்டியிருந்தது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்பதும் எனக்குத்
தெரியாது. என்னை மாமிசம் தின்பவனாக்கி விடவேண்டும் என்பதில் அவர்
உறுதியுடன் இருந்தால் இதற்கு அவர் எப்படியோ பணம் சம்பாதித்து வந்தார்.
ஆனால், இதில் அவருடைய சக்திக்கும் ஓர் அளவு இருந்திருக்கவே வேண்டும். எனவே,
இந்த விருந்துகள் சுருக்கமாகவும், நீண்ட நாட்களுக்கு ஒரு முறையும்தானே
நடைபெற முடியும்?
இந்த ரகசிய விருந்துகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும்
போதெல்லாம் இரவில் வீட்டில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். வந்து
சாப்பிடும்படி வழக்கம்போல என் தாயார் கூப்பிடுவார். வேண்டாம் என்று
கூறுவதற்குக் காரணம் என்ன என்றும் கேட்பார். எனக்கு இன்று பசியே இல்லை. எதோ
வயிற்றில் கோளாறு இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். இவ்விதம் நான்
சாக்குப் போக்குச் சொல்லும் போது, என் மனம் வேதனைப்படாமல் இராது. நான் பொய்
சொல்லுகிறேன், அதுவும் தாயாரிடம் பொய் சொல்லுகிறேன் என்பதை அறிவேன். அதோடு
நான் மாமிசம் சாப்பிடுகிறேன் என்பது என் தாயாருக்கும் தந்தைக்கும்
தெரிந்து விடுமாயின் அவர்கள் அதிர்ச்சியடைந்து வருந்துவார்கள் என்பதும்
எனக்குத் தெரியும். இவற்றை நான் அறிந்திருந்தது, என் உள்ளத்தை அரித்துத்
தின்று கொண்டே இருந்தது.
ஆகவே, எனக்கு நானே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: 'மாமிசம்
சாப்பிவேண்டியது முக்கியம்தான்; நாட்டின் சாப்பாட்டில் சீர்திருத்தம் செய்ய
வேண்டியதும் அவசியமே என்றாலும், தாயிடமும் தந்தையிடமும் பொய் சொல்லி
ஏமாற்றிக் கொண்டிருப்பது மாமிசம் சாப்பிடாததைவிட அதிக மோசமானது. ஆகையால்,
அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் நான் மாமிசம் சாப்பிடுவதற்கில்லை.
அவர்களுக்குப் பிற்காலம் நான் சுதந்திரம் பெற்றுவிடுவேன். அப்பொழுது நான்
மாமிசத்தைப் பகிரங்கமாகவே சாப்பிடுவேன். ஆனால், அச்சமயம் வரும் வரையில்
நான் அதைச் சாப்பிடாமல் இருந்து விடுவேன்.'
நான் செய்துகொண்ட இந்த முடிவை என் நண்பருக்குத் தெரிவித்தேன். அதன்
பின்னர் மாமிசத்தை நான் சாப்பிட்டதில்லை. தங்கள் குமாரர்களில் இருவர்
மாமிசம் சாப்பிடுகிறவர்கள் ஆகிவிட்டனர் என்பது என் பெற்றோருக்குத் தெரியவே
தெரியாது. பெற்றோரிடம் பொய் சொல்லக் கூடாது என்ற எனது புனிதமான ஆசையின்
காரணமாகவே மாமிசம் சாப்பிடுவதை நான் விட்டேன். ஆனால், என் நண்பருடன்
பழகுவதை மாத்திரம் விடவில்லை. அவரைச் சீர்திருத்த வேண்டுமென்று நான் கொண்ட
ஆர்வம் எனக்கே பெருந்தீங்காக விளைந்தது. இந்த உண்மையை அப்பொழுதெல்லாம் நான்
அறிந்து கொள்ளவே இல்லை.
இதே சிநேகம், என் மனைவிக்கே நான் துரோகம் செய்யும் படியும்
செய்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு சிறு மயிரிழையில் தப்பிக் கொண்டேன். என்
நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே
நான் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து
என்னை உள்ளே அனுப்பினார். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது. கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாயிற்று.
பாவத்தின் வாய்க்குள் போய்விட்டேன். ஆனால் கடவுள் தமது எல்லையில்லாக்
கருணையினால் என்னைத் தடுத்துக் காத்தார். இந்தப் பாவக்குழிக்குள் போனதுமே
பார்வையை இழந்தவன்போல் ஆகி விட்டேன். பேசவும் நா எழவில்லை. படுக்கையில்
அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஆனால் ஒரு வார்த்தை கூட என்னால் பேச
முடியவில்லை. ஆகவே, அவள் பொறுமையை இழந்து விட்டாள். என்னைத் திட்டி,
அவமதித்து வெளியே போகச் சொல்லி விட்டாள். எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு
ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான்
பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் என்னைக்
காத்தருளியதற்காக அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து
வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோலவே நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும்
எனக்கு நினைவிருக்கின்றன. அநேகமாக இவற்றிலெல்லாம் என்னளவில் நான் செய்த
முயற்சியைவிட எனது நல்லதிருஷ்டமே என்னைக் காத்தது. கண்டிப்பான அறநெறியைக்
கொண்டு கவனித்தால், இந்தச் சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள் என்றே
சொல்ல வேண்டும். ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை இருந்தது. அது
காரியத்தைச் செய்துவிட்டதற்குச் சமமே. ஆனால் சாதாரண நோக்கோடு
கவனிப்பதாயின், உடலினால் ஒரு பாவ காரியத்தைச் செய்துவிடாதவன்
காப்பாற்றப்பட்டவனே என்று கருதப்படுவான். நான் காப்பாற்றப்பட்டேன் என்பதும்
இந்த அர்த்தத்திலேதான்.
சில செயல்களிலிருந்து தப்புவது, அப்படித் தப்புகிறவனுக்கும் அவனைச்
சுற்றியிருப்போருக்கும் தெய்வாதீனமாக நிகழும் ஒரு காரியமாக இருக்கிறது.
அவனுக்கு நல்லது இன்னதென்பதில் திரும்ப உணர்வு ஏற்படும்போது, அவ்விதம்
தப்பிவிட்டதற்காக கடவுளின் கருணைக்கு நன்றியுள்ளவனாகிறான். மனிதன் என்னதான்
முயன்றாலும் அது முடியாமல் அடிக்கடி ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டு
விடுகிறான் என்பதை நாம் அறிவோம். அப்படி அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள்
குறுக்கிட்டு அவனைக் காத்து வருவதும் உண்டு என்பதையும் அறிவோம்.
இவையெல்லாம் எவ்விதம் நிகழ்சின்றன? மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல்
நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு
அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே வந்து புகுகிறது? என்பனவெல்லாம்
நம்மால் அறிய இயலாத மர்மங்கள். அவை என்றும் மர்மங்களாகவே இருந்து வரும்.
இனிக் கதையைத் தொடர்ந்து கவனிப்போம். என் நண்பரின் சகவாசம் தீமையானது
என்பதை அறிய, இந்த விபசாரி நிகழ்ச்சி கூட என் கண்களைத் திறந்து விடவில்லை.
எனவே, நான் எதிர்பாராத வகையில் அவரிடம் இருக்கும் சில குறைகளை என்
கண்ணாலேயே கண்ட பிறகுதான் என் கண் திறந்தது. அது வரையில் நான் மற்றும் பல
கசப்பான மருந்துகளை விழுங்கியாக வேண்டியிருந்தது. நாம் காலவாரியாகப் போய்க்
கொண்டிருக்கிறோமாகையால், அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன்.
என்றாலும் ஒரு விஷயம் அதே சமயத்தில் நடந்ததாகையால் அதைப்பற்றி
இப்பொழுது நான் கூறவே வேண்டும். என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட
அபிப்பிராய பேதங்களுக்கு ஒரு காரணம், இந்த நண்பரோடு நான் சேர்ந்திருந்ததே
என்பதில் சந்தேகமில்லை. மனைவியிடம் அளவற்ற அன்பும் சந்தேகமும் கொண்ட கணவன்
நான். என் மனைவி மீது நான் கொண்டிருந்த சந்தேகத் தீயை இந்த நண்பர் ஊதி
வளர்த்துவிட்டார். அவருடைய கூற்று உண்மைதானா என்று நான் சந்தேகிக்கவே
இல்லை. அவர் கூறியவைகளைக் கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி
வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக என்னை நான் ஒருபோதும்
மன்னித்துவிடவில்லை. அநேகமாக ஒரு ஹிந்து மனைவியே இத்தகைய கஷ்டங்களையெல்லாம்
பொறுமையாக சகித்துக் கொள்ளக் கூடும். இதனாலேயே பெண்ணைப் பொறுமையின்
அவதாரம் என்று போற்றுகிறேன். ஓரு வேலைக்காரனைத் தவறாகச் சந்தேகித்து
விட்டால் அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல, மகனைச் சந்தேகித்தால்
தந்தையின் வீட்டைவிட்டே அவன் வெளியேறி விடுவான். நண்பனைத் தவறாகச்
சந்தேகித்தால், நட்பை முறித்துக் கொள்ளுவான். மனைவி, தன் கணவன் பேரில்
சந்தேகம் கொண்டால் சும்மா இருந்துவிடுவாள். ஆனால் அவள் மீது கணவன் சந்தேகம்
கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே. அவள் எங்கே போவது? ஒரு ஹிந்து மனைவி,
கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற முடியாது. சட்டத்தில் அவளுக்குப் பரிகாரம்
இல்லை. என் மனைவியையும் நான் இத்தகைய நிர்க்கதியான நிலைமைக்குக் கொண்டு
போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது; என்னை மன்னித்துவிடவும் முடியாது.
அகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே,
சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரம்மச்சரியத்தின்
மகிமையை உணர்ந்தேன். அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும்,
தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக
துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப்போலத்
தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்து
கொண்டேன். அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய அந்த இருளான நாட்களைக்
குறித்து எண்ணும் போதெல்லாம் என்னுடைய தவறுக்காகவும், காமக்
குரூரத்துக்காகவும் என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நன்பரிடம்
நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாட்டுக்காகவும் வருந்துகிறேன்.
8. திருட்டும் பரிகாரமும்
புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும், நான் செய்த வேறு சில
தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை விவாகத்திற்கு முன்போ, விவாகமான
உடனேயோ நடந்தவை. நானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம்
கொண்டோம். சிகரெட் பிடிப்பதில் நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட்
புகையின் வாசனை எங்களுக்கு பிரியமாக இருந்ததோ இதற்கு காரணம் அல்ல. எங்கள்
வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான இன்பம் இருப்பதாகக்
கற்பனை செய்து கொண்டோம். என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம்
உண்டு. அவர் புகை பிடிப்பதைப் பார்த்தபோது நாங்களும் அவரைப்போல் செய்ய
வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களிடம் காசு இல்லை. ஆகவே, என்
சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும் சிகரெட்டுத் துண்டுகளைத் திருடி
உபயோகிக்க ஆரம்பித்தோம்.
ஆனால், சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை.
கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே, பீடி வாங்க
வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம். ஆனால் பீடியை வாங்கி
எங்கே வைப்பது என்று பிரச்சனை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில் நாங்கள்
பீடி பிடிக்க முடியாது. சில வாரங்கள் வரையில் திருடிய காசுகளைக் கொண்டே
ஒருவாறு சமாளித்துக் கொண்டோம். இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின் தண்டு,
துவரங்கள் உள்ளது என்றும், சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்றும்
கேள்விப்பட்டோம். அதைத் தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.
இவை போன்றவைகளினாலெல்லாம் எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை.
எங்கள் இஷ்டம் போல் செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்ற உணர்ச்சி
மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதியில்லாமல் எதையும் நாங்கள் செய்ய
முடியாதிருந்தது, பொறுக்க முடியாததாகத் தோன்றியது. கடைசியாக வாழ்வே
முற்றும் வெறுத்துப் போய்த் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு
வந்து விட்டோம்!
ஆனால் தற்கொலை செய்து கொள்ளுவது எப்படி? விஷம் எங்கிருந்து
எங்களுக்குக் கிடைக்கும்? ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று
கேள்வியுற்றோம். அவ்விதையைத் தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு
வந்துவிட்டோம். மாலை நேரம் இதற்கு நல்லவேளை என்று முடிவாயிற்று. கேதார்ஜி
கோயிலுக்கு போய் அங்கே விளக்குக்கு நெய் வார்த்தோம்; சுவாமி தரிசனம் செய்து
கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால்
எங்களுக்குத் துணிச்சல் வரவில்லை. உடனேயே செத்துப் போகாமல் இருந்து
விட்டால்? அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை?
சுதந்திரமின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது? என்றாலும் இரண்டு,
மூன்று விதைகளை விழுங்கிவிட்டோம். இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை.
எங்கள் இருவருக்குமே சாவதற்குப் பயம். மனத்தைத் தேற்றிக் கொள்ள ராம்ஜி
கோயிலுக்குப் போய் தற்கொலை எண்ணத்தையே விட்டுவிடுவது என்று முடிவு
செய்தோம்.
தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப் போலத் தற்கொலை செய்து கொண்டு விடுவது
அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டேன். அதிலிருந்து, யாராவது
தற்கொலை செய்துகொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான்
அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை. தற்கொலை எண்ணத்தினால் முடிவாக
ஒரு நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப் புகை
பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக வேலைக்காரனின் காசைத்
திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்.
நான் வயதடைந்துவிட்ட பின்பு, புகைப் பிடிக்கவேண்டும் என்று
விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டு மிராண்டித்தனமானது,
ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும் கருதி
வந்திருக்கிறேன். உலகம் முழுவதிலும் புகை பிடிப்பதில் இவ்வளவு வெறி ஏன்
இருக்கிறது என்பது விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில்
பிரயாணம் செய்யவே எனக்குச் சகிப்பதில்லை. எனக்கு மூச்சுத் திணறி விடுகிறது.
இந்தத் திருட்டையும்விட மிக மோசமான ஒன்று, அதற்குச் கொஞ்சம் பின்னால்
நான் செய்த குற்றமாகும். பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கும்போது
காசுகள் திருடினேன்; வயது எனக்கு இன்னும் குறைவாகவே இருந்திருக்கலாம். நான்
செய்த மற்றொரு திருட்டோ, எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது,
இச்சமயம், மாமிசம் தின்னும் என் அண்ணனின் கைக்காப்பிலிருந்து கொஞ்சம்
தங்கத்தைத் திருடினேன். இந்த அண்னன் இருபத்தைந்து ரூபாய் கடன்
பட்டிருந்தார். அவர் கையில் கெட்டித் தங்கக் காப்பு அணிந்திருந்தார்.
அதிலிருந்து கொஞ்சம் தங்கத்தை வெட்டி எடுத்துவிடுவது கஷ்டமன்று.
சரி, அப்படியே செய்யப்பட்டது, கடனும் தீர்ந்தது. ஆனால், இக்குற்றம்
என்னால் பொறுக்க முடியாததாயிற்று. இனித் திருடுவதே இல்லை என்று முடிவு
கட்டிக் கொண்டேன். இக்குற்றத்தை என் தந்தையாரிடம் ஒப்புக் கொண்டு விடுவது
என்றும் தீர்மானித்தேன். ஆனால், சொல்லத் துணிவு வரவில்லை. என் தந்தையார்
என்னை அடிப்பார் என்று நான் பயப்படவில்லை. எங்களில் யாரையுமே அவர்
அடித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவருக்கு நான் உண்டாக்கக்கூடிய மனவேதனையைக்
குறித்தே அஞ்சினேன். அதற்கும் துணிந்துதான் ஆகவேண்டும் என்று தோன்றியது.
எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி விட்டாலன்றிப் பாவம் தீராது என்று
கருதினேன்.
என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து,
மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக்
காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில்
நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை
எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே
தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக்
கொண்டிருந்தேன். இனித் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து
கொண்டேன்.
குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதியிருந்த காகிதத்தை என் தந்தையாரிடம்
நான் கொடுத்தபோது என் உடலெல்லாம் நடுங்கியது. அப்பொழுது அவர் பவுந்திர
நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார். சாதாரண மரப்பலகையே
அவர் படுக்கை. என் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, அப்பலகைக்கு எதிரில்
உட்கார்ந்தேன்.
அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில்
கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு
சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப்
படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார்.
நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது.
நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக
எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது.
முத்துப்போன்ற அந்த அன்புத்துளிகள் என் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி,
என் பாவத்தையும் அலம்பிவிட்டன. அத்தகைய அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே, அது
இன்னது என்பதை அறிய முடியும். அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ,
அவனே அறிவான் அதன் சக்தியை என்று ஒரு பாடலும் கூறுகிறது. அகிம்சா தருமத்தை
அறிவதற்கு இது எனக்குச் சரியானதோர் பாடமாயிற்று. இதில் தந்தையின் அன்பைத்
தவிர வேறு எதையும் நான் அப்பொழுது காணவில்லை. ஆனால், இன்றோ, அதுதான்
சுத்தமான அகிம்சை என்று அறிகிறேன். அத்தகைய அகிம்சை எல்லாவற்றிலும்
வியாபிப்பதாகி விடும்போது, அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறது.
அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை.
இவ்விதமான உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று.
கோபமடைவார், கடுஞ்சொற்களைக் கூறுவார், தலையில் அடித்துக் கொள்ளுவார்
என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக
அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே
இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை
உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய
பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச்
சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக்
கொண்டுவிட்டது, என்னைப் பற்றிக் கவலையே இல்லை என்று என் தந்தையாரை
உணரும்படி செய்தது என்பதை அறிவேன். என் மீதுள்ள அவரது அன்பையும் அளவு
கடந்து அதிகரிக்கும்படி இது செய்தது.
9. தந்தையின் மரணமும் என் இரு அவமானங்களும்
நான் இப்பொழுது கூறப்போகின்றவை என்னுடைய பதினாறாவது வயதில் நடந்தவை.
பவுந்திர நோயினால் என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தார் என்பதை முன்பே
கண்டோம். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை என் தாயாரும் வீட்டு வேலைக்காரரான
ஒரு கிழவரும், நானும் செய்து வந்தோம். என்னுடையன ஒரு தாதிக்குரிய வேலைகள்.
முக்கியமாகப் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுவது, என் தந்தைக்கு மருந்து
கொடுப்பது, வீட்டிலேயே தயாரிக்க வேண்டியிருந்த மருந்துகளைச் சேர்த்துத்
தயாரிப்பது ஆகியவை அவை. ஒவ்வொரு நாள் இரவும் அவருக்குக் கால்
பிடித்துவிடுவேன். போகுமாறு அவர் சொன்னதுமோ, அல்லது அவர் தூங்கிய பிறகோதான்
போய் படுத்துக் கொள்ளுவேன். இப்பணி செய்வதற்கு நான் பிரியப்பட்டேன். இதில்
நான் எப்பொழுதேனும் அசட்டையாக இருந்து விட்டதாக எனக்கு நினைவில்லை. எனது
அன்றாடக் கடமைகளை நிறைவேற்றியது போக பாக்கியிருக்கும் நேரத்தைப்
பள்ளிக்கூடத்துக்குப் போவதிலும் என் தந்தையாருக்குப் பணிவிடை செய்வதிலும்
கழிப்பேன். அவர் என்னை அனுமதிக்கும் போதோ, அவருக்கு உடம்பு கொஞ்சம் நன்றாக
இருக்கும் போதோ மாத்திரம் மாலையில் உலாவிவிட்டு வரப்போவேன்.
அது, என் மனைவி பிள்ளைப்பேற்றை எதிர்பார்த்திருந்த சமயமும் ஆகும்.
அந்த ஒரு சந்தர்ப்பத்தை இன்று நான் எண்ணிப் பார்க்கும்போது, அது எனக்கு
இரட்டை அவமானம் என்பதை உணருகிறேன். அச்சமயத்தில் நான் பள்ளி மாணவனாகையால்
நான் புலனடக்கத்தைக் கைக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாது
போனது ஓர் அவமானம். படிப்பு விஷயத்தில் என் கடமையென நான் கருதியதையும், என்
பெற்றோரிடம் பக்தியுடனிருப்பது அதையும்விட இன்னும் பெரிய கடமை என நான்
கொண்டிருந்ததையும் மறக்கும்படி காமவெறி செய்துவிட்டது, இரண்டாவது
அவமானமாகும். சிரவணன் போல இருக்க வேண்டும் என்பது குழந்தைப் பருவம் முதலே
என் லட்சியமாக இருந்தது. ஒவ்வோர் இரவும், என் தந்தையாரின் பாதங்களை என்
கைகள் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும் போது என் மனம் மாத்திரம் என்
படுக்கையறையை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அதுவும், மதம், வைத்திய
சாஸ்திரம், பகுத்தறிவு ஆகியவைகளெல்லாம் ஒருமித்து மனைவியுடன் உடல் சேர்க்கை
கூடாது என்று தடுக்கும் ஒரு சமயத்தில் எனக்கு அந்த மனநிலை. என்
வேலையிலிருந்து விடுபடும் போதெல்லாம் மிக்க மகிழ்ச்சியுறுவேன். தந்தைக்கு
வணக்கம் செலுத்திவிட்டு நேரே படுக்கை அறைக்குப் போவேன்.
அதே சமயத்தில் என் தந்தையின் நிலையும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு
வந்தது. ஆயுர்வேத வைத்தியர்கள் தங்கள் களிம்புகளையெல்லாம் போட்டுப்
பார்த்துவிட்டனர். ஹக்கீம்கள் தங்கள் பிளாஸ்திரிகளையெல்லாம் போட்டுப்
பார்த்துவிட்டார்கள். உள்ளூர் அரைகுறை வைத்தியர்களும் தங்கள் தனி உபாயங்களை
எல்லாம் கையாண்டுவிட்டனர். ஓர் ஆங்கில சர்ஜனும் தமது திறமையைப்
பிரயோகித்துப் பார்த்துவிட்டார். சத்திர சகிச்சை ஒன்றே கடைசியாகச்
செய்யக்கூடிய ஒரே காரியம் என்று அவர் சிபாரிசு செய்தார். ஆனால், குடும்ப
வைத்தியர் இதை ஆட்சேபித்தார். அவ்வளவு முதிர்ந்த வயதில் சத்திர சிகிச்சை
செய்வதை அவர் ஓப்புக்கொள்ளவில்லை. அந்த வைத்தியர் திறமை வாய்ந்தவர்;
பிரபலமானவர். ஆகையால், அவர் யோசனையே ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்திர
சிகிச்சை கைவிடப்பட்டது. அதற்காக வாங்கிய மருந்துகளுக்கு அளவே இல்லை.
சத்திர சிகிச்சைக்கு வைத்தியர் அனுமதித்திருந்தால் புண் எளிதில்
ஆறியிருக்கும் என்பது என் எண்ணம். இந்த சிகிச்சையும் பம்பாயில் அப்பொழுது
பிரபலமாக இருந்த ஒரு சர்ஜன் செய்ய வேண்டும். ஆனால், கடவுள் சித்தம்
வேறுவிதமாக இருந்து விட்டது. சாவு நிச்சயம் என்று இருக்கும்போது சரியான
பரிகாரம் யாருக்குத் தோன்றும்? சத்திர சிகிச்சைக்குச் சேகரிக்கப்பட்டு,
இப்பொழுது வீணாகப் போன பொருளுடன் என் தந்தை பம்பாயிலிருந்து திரும்பினார்.
இனி அதிக காலம் உயிரோடிருப்போம் என்ற நம்பிக்கை அவருக்கும் இல்லாமல்
போயிற்று. மேலும் மேலும் பலவீனமாகிக் கொண்டு வந்தார். இதனால் மலஜலங்களைப்
படுக்கையில் இருந்தவாறே கழிக்கும் படி அவருக்குச் சொல்ல வேண்டியதாயிற்று.
ஆனால், கடைசி நேரம் வரையில் அவர் அப்படிச் செய்ய மறுத்து விட்டார். அதிக
சிரமத்துடன் பிடிவாதமாகப் படுக்கையிலிருந்து எழுந்து போயே மலஜலம் கழித்து
வந்தார். வைஷ்ணவ தருமத்தின் புறத் தூய்மையைப் பற்றிய விதிகள் அவ்வளவு
கண்டிப்பானவை.
இத்தகைய சுத்தம் முற்றும் அவசியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்,
சுத்தத்தைக் கண்டிப்பாக அனுசரிப்பதும், நோயாளிக்குக் கொஞ்சமேனும் அசௌகரியம்
இல்லாமல், படுக்கையையும் கொஞ்சமும் அப்பழுக்கு இல்லாமல் வைத்துக் கொண்டு,
குளிப்பது உட்பட எல்லாக் காரியங்களையும் படுக்கையிலேயே செய்யலாம் என்பதை
மேனாட்டு வைத்திய சாத்திரம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்தகைய
சுத்தம் வைஷ்ணவ தருமத்திற்கு முற்றும் பொருத்தமானது என்றே நாம் கருத
வேண்டும். ஆனால், படுக்கையைவிட்டு எழுந்து போயே ஆகவேண்டும் என்று என்
தந்தையார் வற்புறுத்தியது அப்பொழுது எனக்கு ஆச்சரியத்தையே உண்டாக்கியது.
அதை நான் வியந்தேனேயன்றி வேறுவிதமாகக் கருதவில்லை.
பயங்கரமான அந்த இரவும் வந்தது. என் சிறிய தகப்பனார் அப்பொழுது
ராஜ்கோட்டில் இருந்தார். என் தந்தையின் தேக நிலை மோசமாகிக்
கொண்டிருக்கிறதென்ற செய்தியறிந்து அவர் ராஜ்கோட்டுக்கு வந்ததாக எனக்குக்
கொஞ்சம் ஞாபகம். இந்தச் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பலமான அன்பு
கொண்டவர்கள். என் சிற்றப்பா, நாளெல்லாம் என் தந்தையாரின் படுக்கைக்கு
அருகிலேயே உட்கார்ந்திருப்பார். எங்களையெல்லாம் தூங்கப்போகச் சொல்லிவிட்டு,
அவர் மட்டும் என் தந்தையாரின் படுக்கைக்குப் பக்கத்திலேயே பிடிவாதமாகப்
படுத்துக் கொள்ளுவார். தந்தையாரின் நிலை என்னவோ ஆபத்தாகவே இருந்தது. ஆனால்,
அது எமனின் இரவாக இருக்கும் என்று யாரும் கனவுக்கூடக் காணவில்லை.
அப்பொழுது இரவு 10-30 அல்லது 11 மணி. நான் தந்தையாருக்குக் கால்
பிடித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பதிலாக அவ்வேலையைத் தாம் பார்த்துக்
கொள்ளுவதாக என் சிறிய தகப்பனார் கூறினார். மகிழ்ச்சியுற்றேன். நேரே
படுக்கையறைக்குப் போனேன். பாவம், என் மனைவி அயர்ந்து தூங்கிக்
கொண்டிருந்தாள். ஆனால், நான் அங்கே போன பிறகு அவள் எவ்வாறு தூங்க முடியும்?
அவளை எழுப்பினேன். ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கெல்லாம் வேலைக்காரன்
கதவைத் தட்டினான். திகிலுடன் துடித்து எழுந்தேன். "கிளம்புங்கள்;
அப்பாவுக்குக் கடுமையாக இருக்கிறது" என்றான். அவருடைய தேக நிலை மிகவும்
மோசமாகவே இருந்தது என்பதை நான் அறிவேன். ஆகவே, அச்சமயத்தில் கடுமையாக
இருக்கிறது என்றால் அதன் பொருள் இன்னதென்பதை ஊகித்துக் கொண்டேன்.
படுக்கையிலிருந்து குதித்தெழுந்தேன். "என்ன விஷயம், சொல்?" என்றேன். "தந்தை
காலமாகி விட்டார்" என்றான்.
ஆகவே, எல்லாம் முடிந்து போயிற்று! என் கைகளைப் பிசைந்து கொண்டேன்.
அளவு கடந்த வெட்கத்தையும் வேதனையையும் அடைந்தேன். என் தந்தையார் இருந்த
அறைக்கு ஓடினேன். காமவெறி மாத்திரம் என்னைக் குருடனாக்காமல்
இருந்திருக்குமாயின் கடைசி நேரத்தில் தந்தையாரிடமிருந்து பிரிந்ததால்
விளைந்த சித்திரவதை எனக்கு நேர்ந்திராது என்பதைக் கண்டேன். அவருடைய
பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருப்பேன்; என் கரங்களிலேயே அவர் ஆவி
பிரிந்திருக்கும். இப்பொழுதோ, அந்தப் பாக்கியம் என் சிறிய தகப்பனாருக்குக்
கிடைத்தது. அண்ணனிடம் அவருக்கு அளவற்ற பக்தி இருந்ததனால், அவருக்குக் கடைசி
சேவைகளைச் செய்யும் கௌரவத்தை அவர் தேடிக்கொண்டார்! மரணம் நெருங்கிவிட்டது
என்பதை என் தந்தையார் அறிந்து கொண்டு, பேனாவும் காகிதமும் கொண்டு வருமாறு
சமிக்ஞை செய்திருக்கிறார். இறுதிக் கிரியைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச்
செய்யுங்கள் என்று எழுதியிருக்கிறார். பிறகு தம் கையில் அணிந்திருந்த
காப்பையும், தங்கத் துளசி மணிமாலையையும் கழற்றித் தூரத்தில் வீசிவிட்டு,
ஒரு கண நேரத்தில் உயிரை நீத்திருக்கிறார்.
முந்திய ஓர் அத்தியாயத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றிக்
கூறினேன். என் தந்தை சாகும் தறுவாயிலிருந்த நெருக்கடியான நேரத்தில் நான்
விழித்திருந்து பணிவிடை செய்ய வேண்டியிருக்க, எனக்குக் காமவெறி ஏற்பட்டதைப்
பற்றி அவமானமே அது. இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட கறை. இதை என்றுமே
என்னால் அழிக்கவோ, மறக்கவோ முடிந்ததில்லை. என் பெற்றோரிடம் எனக்கு
எல்லையற்ற பக்தி உண்டெனினும், அதற்காக எதையும் தியாகம்
செய்திருப்பேனாயினும், சோதித்துப் பார்த்ததில், அந்தப் பக்தி மன்னிக்க
முடியாத வகையில் குறைபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில், அதே சமயத்தில் என்
மனம் காமத்தின் பலமான பிடிப்பில் இருந்து வந்தது. இதை எப்பொழுதும்
நினைத்துப் பார்ப்பேன். ஆகையால் நான் விசுவாசமுள்ள கணவனாக இருந்தாலும்
காமவெறியன் என்றே என்னை என்று கருதலானேன். காமத்தின் விலங்கிலிருந்து
விடுபட எனக்கு அதிக காலமாயிற்று. அதை வெல்வதற்குள் நான் எத்தனையோ
கடுஞ்சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது.
எனது இரு அவமானங்களைப் பற்றிய இந்த அத்தியாயத்தை முடிக்கும் முன்பு,
என் மனைவியின் வயிற்றில் பிறந்த அந்தப் பரிதாபகரமான சிசு, மூன்று, நான்கு
நாட்கள் கூட உயிரோடு இருக்கவில்லை என்பதையும் நான் கூற வேண்டும். இதைத்
தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. மணமாகி இருப்பவர்களெல்லாம்
என்னுடைய உதாரணத்தைக் கண்டு எச்சரிக்கை அடைவார்களாக.
10. சமய அறிவின் உதயம்
எனது ஆறு அல்லது ஏழாவது வயதிலிருந்து பதினாறாம் பிராயம் வரையில் நான்
பள்ளிக்கூடத்தில் படித்து வந்தேன். மதத்தைத் தவிர மற்ற எல்லாவிதமான
விஷயங்களைப்ப்பற்றியும் எனக்குப் போதித்தார்கள். உபாத்தியாயர்கள், தங்கள்
அளவில் எவ்விதமான சிரமமுமின்றி எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடியவை
எனக்குக் கிடைக்கவில்லை என்றே கூறுவேன். என்றாலும், அக்கம்
பக்கங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக சமய ஞானம் பற்றி நான் அறிந்து
வந்தேன். சமயம் என்பதை அதன் விரிவான கருத்தில் - தன்னைத் தானே அறிதல்
அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே நான் உபயோகிக்கிறேன்.
வைஷ்னவக் குடும்பத்தில் பிறந்தவனாகையால் நான் அடிக்கடி விஷ்ணு
கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. ஆனால் அது என் மனதை ஒரு போதும்
கவரவில்லை. அதன் பகட்டும் ஆடம்பரமும் எனக்குப் பிடிக்கவே வில்லை. அதோடு
ஒழுக்கவீனமான காரியங்கள் பல அங்கே நடக்கின்றன என்ற வதந்திகளையும்
கேள்விப்பட்டேன். ஆகவே, கோயிலுக்குப் போவதில் எனக்கு சிரத்தையில்லை.
இதனால், விஷ்ணு கோயிலிலிருந்து நான் எதையும் பெறவில்லை.
ஆனால், கோயிலில் நான் பெற முடியாது போனதை, எங்கள் குடும்ப வேலைக்காரக்
கிழவியான என் செவிலித் தாயிடமிருந்து பெற்றேன். ரம்பா என்பது அவள் பெயர்.
அவளுக்கு என் மீதிருந்த பிரியம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. எனக்குப்
பேய், பிசாசுகளின் பயம் இருந்தது என்று முன்பே கூறியிருக்கிறேன். ராம
நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதே அந்தப் பயத்தைப் போக்குவதற்கான
மருந்து என்று எனக்கு ரம்பா யோசனை கூறினாள். அவள் கூறிய பரிகாரத்தில்
எனக்கு இருந்த நம்பிக்கையைவிட அவளிடம் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு
ஆகையால், பேய் பிசாசுகளிடம் எனக்கு இருந்த பயத்தைப் போக்கிக் கொள்ளுவதற்கு
இளம் பிராயத்திலிருந்தே ராம நாம ஜபம் செய்வேன். இது தொடர்ந்து நடக்கவில்லை.
ஆனால் குழந்தைப் பருவத்தில் விதைக்கப்பட்ட அந்த நல்ல விதை வீணாகப் போய்
விடவில்லை. அந்த நல்ல பெண்மணியான ரம்பா விதைத்த விதையினாலேயே ராம நாமம்
இன்று எனக்குப் பொய்க்காத அருமருந்தாக இருந்து வருகிறது என்று
நினைக்கிறேன்.
இந்தச் சமயத்தில் ராமாயண பக்தரான என் பெரியப்பா பிள்ளை ஒருவர், நானும்
என் சின்ன அண்ணனும் ராமரட்சை கற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். அதை
மனப்பாடம் செய்தோம். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்த பிறகு வழக்கமாக அதைப்
பாராயணம் செய்து வந்தோம். நாங்கள் ராஜ்கோட்டை அடைந்ததும் அதை
மறந்துவிட்டோம். ஏனெனில் அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நான்
அதைப் பாராயணம் செய்து வந்ததற்கு ஒரு காரணம், சுத்தமான உச்சரிப்புடன்
ராமரட்சையை என்னால் பாராயணம் செய்ய முடிகிறது என்பதில் நான் கொண்டிருந்த
பெருமையேயாகும்.
என்றாலும், என்னுள் ஆழ்ந்த கவர்ச்சியை உண்டாக்கியது, என் தந்தையார்
எதிரில் ராமாயணம் படிக்கப்பட்டு வந்ததாகும். என் தந்தை நோயுற்றிருந்த சமயம்
கொஞ்ச காலம் போர்பந்தரில் இருந்தார். அங்கே மாலை நேரத்தில் ராமயணத்தைப்
படிக்கச் சொல்லிக் கேட்பார். அவ்விதம் ராமாயணம் வாசித்து வந்தவர் சிறந்த
ராம பக்தர். அவர் பிலேஸ்வரைச் சேர்ந்த லதா மகராஜ் என்பவர். அவருக்கு குஷ்ட
நோய் இருந்து குணமாகிவிட்டது. எந்த மருந்தினாலும் அவருக்குக்
குணமாகிவிடவில்லை என்றும், பிலேஸ்வரர் கோயிலில் மகாதேவர் சிலைக்கு அர்ச்சனை
செய்து, பிறகு தூரப் போடப்படும் வில்வ இலைகளைத் தமது உடலில், குஷ்டத்தால்
பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக் கட்டியதாலும், விடாமல் ராமநாம ஜபம்
செய்ததாலுமே அந்நோய் அவருக்குக் குணமாயிற்று என்றும் சொல்லுவார்கள்.
அவருடைய நம்பிக்கை அவர் நோயைப் போக்கியது என்பார்கள். நாங்கள் என்னவோ
இக்கதையை நம்பினோம். லதா மகராஜ் எங்கள் வீட்டில் ராமாயணம் வாசிக்க
ஆரம்பித்தபோது அவர் உடலில் குஷ்டநோய் என்பதே இல்லை என்பது உண்மை. அவருக்கு
இனிமையான சாரீரம் இருந்தது. கண்ணிகளையும் விருத்தங்களையும் பாடுவார்.
அவற்றை விளக்கிப் பொருள் சொல்லுவார். சொல்லும்போதே மெய் மறந்து அவர்
பரவசமாகிவிடுவதோடு கேட்போரையும் மெய் மறந்திருக்கச் செய்துவிடுவார்.
அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். என்றாலும், அவர்
வாசிப்பதைக் கேட்டு நான் பரவசமாகிவிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
ராமாயணத்தினிடம் எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதற்கு அடிகோலியதே அதுதான்.
பக்தி நூல்களிலெல்லாம் தலையாய நூல் துளசிதாஸரின் ராமாயணமே என்று நான் இன்று
கருதுகிறேன்.
இதற்கு சில மாதங்கள் கழிந்து நாங்கள் ராஜ்கோட்டிற்கு வந்தோம். ராமாயண
பாராயணம் எதுவும் இங்கே நடைபெறவில்லை. ஒவ்வொர் ஏகாதசி தினத்தன்றும் பாகவதம்
படிப்பது வழக்கம். சில சமயங்களில் நான் கேட்கப் போவேன். ஆனால், அதைப்
படித்தவரோ, கேட்போருக்கு உருக்கம் உண்டாக்கக் கூடியவர் அன்று. பாகவதம் சமய
உணர்ச்சியை உண்டாக்க வல்ல நூல் என்பதை இன்று நான் காணுகிறேன். அதைத்
தீவிரமான சிரத்தையுடன் குஜராத்தி மொழியில் படித்திருக்கிறேன். ஆனால்,
என்னுடைய இருபத்தொரு நாள் உண்ணாவிரத காலத்தில் பாகவதத்தின் மூலத்திலிருந்து
சில பகுதிகளைப் பண்டித மதன் மோகன மாளவியா படிக்க நான் கேட்டேன். பண்டித
மாளவியாவைப் போன்ற ஒரு பக்தர் அதைப் படிக்கச் சிறு வயதிலேயே நான்
கேட்டிருந்தால் அப்போதிருந்தே அதன் மீது எனக்கு விருப்பு ஏற்பட்டிருக்கும்
என்பது தெரிந்தது. அந்த வயதில் உருவாகும் அபிப்ராயங்கள் ஒருவருடைய
சுபாவத்தில் ஆழ வேரூன்றி விடுகின்றன. அந்தக் காலத்தில் இதுபோன்ற மற்றும் பல
நல்ல நூல்களைப் படிக்கக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாது போயிற்றே என்ற
வருத்தம் என்னைவிட்டு என்றும் நீங்காது.
என்றாலும் ஹிந்து சமயத்தின் எல்லா உட்பிரிவுகள் சம்பந்தமாகவும்,
மற்றச் சகோதர சமயங்கள் விஷயத்திலும் சகிப்புத் தன்மையுடன் இருக்கும்
ஆரம்பப் பயிற்சியும் எனக்கு ராஜ்கோட்டிலேயே கிடைத்தது. ஏனெனில், என்
தந்தையும் தாயாரும் விஷ்ணு கோயிலுக்குப் போவதோடு சிவன் கோயிலுக்கும், ராமர்
கோயிலுக்கும் போவார்கள். அங்கெல்லாம் சிறுவர்களாகிய எங்களையும் அழைத்துப்
போவார்கள்; அனுப்புவார்கள். ஜைன பிஷுசுக்கள் அடிக்கடி என் தந்தையைப்
பார்க்க வருவார்கள். ஜைனர்கள் அல்லாத எங்கள் வீட்டில் சாப்பிடும்
அளவுக்கும் அவர்கள் தாராளமாக நடந்து கொள்ளுவார்கள். சமய விஷயங்களைக்
குறித்தும், உலக விவகாரங்களைக் குறித்தும் என் தந்தையுடன் அவர்கள்
பேசுவார்கள்.
இதல்லாமல் அவருக்கு முஸ்லீம், பார்ஸி நண்பர்களும் உண்டு தங்கள்
சமயங்களைப் பற்றி அவர்கள் இவரிடம் பேசுவார்கள். எப்பொழுதுமே அவர்கள்
கூறுவனவற்றிற்கு மதிப்புக் கொடுத்தும், பெரும்பாலும் சிரத்தையுடனும் இவர்
கேட்பார். என் தந்தையாருக்கு நான் பணிவிடை செய்து வந்ததால் அவர்கள் பேசிக்
கொண்டிருப்பதைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிட்டியது. மற்றச்
சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பை இவைகளெல்லாம்
சேர்ந்தே என்னுள் வளர்ந்தன.
அச்சமயம் கிறிஸ்தவ மதம் மாத்திரம் இதற்கு ஒரு விலக்காக இருந்தது
அதனிடம் எனக்கு ஒருவகை வெறுப்பு இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.
அக்காலங்களில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள், உயர்நிலைப் பள்ளிக்கு அருகில்
தெருத் திருப்பத்தில் நின்றுகொண்டு ஹிந்துக்களையும் அவர்களுடைய
தெய்வங்களையும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள். இதை என்னால் சகிக்க
முடிவதில்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்க ஒரே ஒரு தடவை மாத்திரமே நான் அங்கே
நின்றிருப்பேன். இந்தப் பரீட்சை இனி வேண்டாம் என்று நான் தீர்மானித்து
விட்டதற்கு அது ஒன்றே போதுமானதாயிற்று. ஏறக்குறைய அதே சமயத்தில் பிரபலமான
ஹிந்து ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பெற்றார் என அறிந்தேன். அவர்
'ஞானஸ்நானம்' செய்விக்கப் பெற்ற போது, மாட்டிறைச்சி தின்று, மதுபானமும்
குடிக்க வேண்டியிருந்தது என்றும், தமது உடையையும் அவர் மாற்றிக் கொள்ள
வேண்டியதாயிற்று என்றும் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது. அது முதல் அவர்
ஐரோப்பிய உடையுடன் தொப்பியும் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் போக
ஆரம்பித்தாராம். இவையெல்லாம் எனக்கு வெறுப்பை உண்டாக்கின. 'மாட்டிறைச்சி
தின்ன வேண்டும் என்றும், குடிக்கவேண்டும் என்றும், தமது சொந்த உடையை
மாற்றிக் கொண்டுவிட வேண்டும் என்றும், ஒருவரைக் கட்டாயப் படுத்தும் ஒரு
மதம், மதம் என்ற பெயருக்கே நிச்சயமாக அருகதையில்லாதது' என்று நான்
எண்ணினேன். புதிதாக மதம் மாறியவர், தமது மூதாதையாரின் மதத்தையும், பழக்க
வழக்கங்களையும், நாட்டையும் தூஷித்துப் பேசவும் தலைப்பட்டு விட்டார்
என்றும் கேள்விப்பட்டேன். இவைகளெல்லாம் கிறிஸ்தவத்தின் மீது எனக்கு
வெறுப்பை உண்டாக்கின.
மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மை கொள்ள நான் கற்றிருந்தேன்
என்றால், உண்மையில் எனக்கு கடவுளிடம் திடமான நம்பிக்கை இருந்தது என்பது
பொருளல்ல. அந்த சமயத்தில் மனுஸ்மிருதியையும் நான் படிக்க நேர்ந்தது.
படைப்பைப் பற்றியும், அது போன்ற விஷயங்களைக் குறித்தும் அதில்
கூறப்பட்டிருந்த கதை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை ஊட்டுவதாயில்லை.
இதற்குமாறாக நாஸ்திகத்தை நோக்கி ஓரளவுக்கு என்னைச் சாயும்படியும் அது
செய்தது.
என் பெரியப்பா பிள்ளை ஒருவர் உண்டு. அவர் இன்றும் இருக்கிறார்.
அவருடைய அறிவாற்றலில் எனக்கு அபார மதிப்பு உண்டு. எனக்கு இருந்த
சந்தேகங்களையெல்லாம் குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவற்றைத்
தீர்த்துவிட அவரால் இயலவில்லை. "உனக்கு வயதானதும் இந்தச் சந்தேகங்களை
எல்லாம் நீயே தீர்த்துக் கொண்டு விடுவாய். இந்த வயதில் இப்படிப்பட்ட
சந்தேகங்கள் உனக்குத் தோன்றலாகாது" என்று பதில் சொல்லி, அவர் என்னை
அனுப்பிவிட்டார். என் வாய் அடைப்பட்டுப் போயிற்று. ஆயினும், மனம்
திருப்பதியடையவில்லை. மனுஹ்மிருதியில் உணவு பற்றியும் அது போன்றவை
குறித்தும் கூறப் பட்டிருந்தவை, தினசரி வழக்கத்திற்கு மாறுப்பட்டவை என
எனக்குத் தோன்றின. இதில் எனக்கு உண்டான சந்தேகத்திற்கும் அதே பதில்தான்
கிடைத்தது. அறிவு வளர வளர, அதிகமாகப் படிக்க படிக்க, அதை நான் நன்றாகப்
புரிந்து கொள்ளுவேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
மனுஸ்மிருதி, அக்காலத்தில் அகிம்சாதருமத்தை எனக்கு போதிக்கவிலலை
என்பது மாத்திரம் உண்மை. நான் புலால் உண்ட கதையைக் கூறியிருக்கிறேன். அதை
மனுஸ்மிருதி ஆதரிப்பதாகத் தோன்றியது. பாம்புகள், மூட்டைப் பூச்சி
முதலியவைகளைக் கொல்லுவது முற்றும் நியாயமானதே என்று கருதினேன். மூட்டைப்
பூச்சிகள் போன்ற ஜந்துகளைக் கொல்லுவது ஒரு கடமை எனக் கருதி அந்த வயதில்
அவற்றை நான் கொன்றது எனக்கு நினைவிருக்கிறது.
ஆனால், ஒன்று மாத்திரம் என்னுள் ஆழ வேரூன்றியது. 'ஒழுக்கமே
எல்லாவற்றிக்கும் அடிப்படை; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றிற்கும் சாரமும்'
என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு
நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக்
கொண்டே வந்தது.
அதேபோல நன்னெறியைப் போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும்
உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. தீமை செய்தோருக்கும் நன்மையே செய் என்ற
அப்பாடலின் போதனை, என் வாழ்க்கையில் வழிகாட்டும் தருமமாயிற்று. அதில்
எனக்கு அதிக பிரேமை உண்டாகி விட்டதால் அதை மேற்கோளாகக் கொண்டு பற்பல
சோதனைகளையும் செய்யத் தொடங்கினேன். மிக அற்புதமானவை என நான் எண்ணும்
அப்பாடலின் வரிகள் இவை:
'உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குக் கைம்மாறாய்
விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிய படைத்திடுவாய்.
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்.
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்.
உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்.
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி,
வையத்தார் எல்லோரும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பா டின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னாசெய்தாரை ஒறுக்க, அவர் நாண
நன்னயம் செய்து விடுவர் இந்நானிலத்தே.'