Wednesday, June 20, 2012

சுத்தமான குடிநீர்

சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை; ஐ,நா., பிரகடனம்

தனிமனிதன் ஒருவனுக்கு சுத்தமான குடிநீர் என்பது மனிதனின் அடப்படை உரிமையாக ஐக்கிய நாட்டு சபை பிரகடனப்படுத்தியிருக்கிறது. சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
நாட்டில் வாழும் மனிதனின் சுகாதாரத்திற்கும் உலக நாடுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. உலக அளாவிய தண்ணீர் பிரச்னை குறித்து ஐ.நா., விவாதித்தது. ஏற்கனவே 190 நாடுகள் ஒப்புதல் வழங்கிய சுத்தமான குடிநீர் வலியுறுத்தும் அடிப்படை உரிமை தீர்மானத்தை பொலிவியா முன்மொழிந்தது. இதில் 121 நாடுகள் ஏற்றுக்கொண்டு ஆதரவாக ஓட்டளித்துள்ளன. 41 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்து விட்டன.
இந்த தீர்மானம் மூலம் ஐ.நா.,வில் உள்ள உறுப்பினர் நாடுகள் இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுக்க வலியுறுத்தியுள்ளது. இத்தோடு சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும் என்றும் கேட்டுள்ளது. பிற நாடுகள் தங்களது மக்களுக்கு சுத்தமான குடி நீர் வழங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு போதிய வழிகாட்டுதலையும் தெரிவிக்க ஐ.நா., பணி செய்யும் .
எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். இது குறித்து ஜெர்மன் அம்பாசிட்டர் விட்டிங் கூறுகையில் ; ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர் என்றார்.

நிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம்

இந்தியாவில் பல நகரங்கள், ஜீவநதிகளின் கரைகளில் அமைந்துள்ளன. இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதையே, இது எடுத்துக்காட்டுகிறது.இந்தியாவில் இன்னும் பல நகரங்கள், சிறிய நதிக்கரைகளில் அமைந்துள்ளன; பல நகரங்கள், எந்த ஒரு நதிக்கரைகளிலும் அமையாமலும் உள்ளன.

இவைகள் தமக்குள்ளும், தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை, தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய சென்னை மாநகர மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து, கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.
ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும், தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.

உதாரணமாக, சின்னமலை பகுதியில் மூன்று அடி ஆழத்திலும், பெசன்ட் நகர் பகுதியில் 60 அடி ஆழத்திலும், ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.
மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள், மழைநீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

வாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்:நிலத்தடி நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும், அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும், சென்னை மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்...
* ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.

* இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.

* அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து, இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.

ஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

* மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து, தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

* ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

தண்ணீர்ப் பஞ்சம்



நீராபத்து, இன்னும் சில ஆண்டுகளில் ஏற்படப் போகும் விபரீத விபத்து என்றே கூறலாம். இப்போது கோடைக்காலம் தொடங்கியதும், மாநிலத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்னை, இன்னும் சில ஆண்டுகளில் கோடைக்காலம், மழைக்காலம் என்றில்லாமல் எப்போதும் இருக்கும்.

அந்த அளவுக்கு நம்முடைய சீர்கெட்ட குடிநீர் மேலாண்மையாலும், அதிகரிக்கும் குடிநீர்த் தேவையாலும் நீரை அத்தியாவசியப் பொருளாகப் பார்ப்பது மறைந்து, மருந்துப் பொருளாகப் பார்க்கும் காலம் விரைவிலேயே ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

தமிழகம், குடிநீர் உள்பட அனைத்து நீர் தேவைக்கும் வடகிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையை நம்பித்தான் உள்ளது. பருவமழை பெய்வதைப் பொறுத்துத்தான் நீர்நிலைகளும், ஆறுகளிலும் நீர் பெருகுகிறது. மாநிலத்தின் சராசரி மழையளவு 925 மி.மீ. ஆகும். ஆனால், இந்த மழை அளவைத் தமிழகம் எட்டிப்பிடித்து பல ஆண்டுகள் ஆகின்றன. அப்படியே இந்த மழை அளவை சில ஆண்டுகள் எட்டிப்பிடித்தாலும் அப்போது ஏதாவது ஒரு பகுதியில் அழிவு மழையாகப் பெய்து, இருக்கின்ற எல்லாவற்றையும் கடலுக்கு அடித்துச் சென்று விடுகிறது. மாநிலம் முழுவதும் ஒரே அளவில் பெய்யாமல், ஏதோ ஒரு பகுதியில் அழிவு மழையாகவும் இதர பகுதிகளில் லேசாகவும் பெய்து வருகிறது.

இதனால் அண்மைக்காலமாக நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது.நாட்டில் நீர்ப் பற்றாக்குறை உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனக் கூறி வரும் அரசு, நீர் மேலாண்மையில் இப்போதைய நிலைமை நீடிக்கும்பட்சத்தில் அடுத்த சில ஆண்டுகளில் வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டிய சூழ்நிலைக்குச் சென்றுவிடும்.

தமிழகத்துக்கு ஆண்டுக்கு 54,395 மில்லியன் கன மீட்டர் நீர் தேவையானதாக இருக்கிறது. இதே அளவில் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும்பட்சத்தில், 2050-ம் ஆண்டில் தமிழகத்தின் நீர்த் தேவை 57,725 மில்லியன் கன மீட்டராக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள தண்ணீர்த் தேவைக்கே, பக்கத்து மாநிலங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் வேளையில், இன்னும் சுமார் 3 மில்லியன் கன மீட்டர் தேவைப்படும்பட்சத்தில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆறு, அணை, குளங்கள், ஏரி போன்ற நீர்நிலைகளைக் கொண்டு, இப்போது தண்ணீர் தாகத்தைத் தமிழகம் தணித்து வருகிறது. மாநிலத்தில் சுமார் 39,202 குளங்கள் உள்ளன. இதில் மழையையும், ஆறுகளின் பாசனத்தையும் சார்ந்து மட்டும் தோராயமாக 20,104 குளங்கள் உள்ளன. குறிப்பாக மழையை எதிர்பார்த்து 80 சதவிகித குளங்கள் உள்ளன.
இக் குளங்கள் அனைத்தும் மன்னர் காலங்களில் வெட்டப்பட்டவை. போதிய பராமரிப்பின்மை, ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றால் இவற்றின் நீர்ப்பிடிப்புத் தன்மை பெருமளவு குறைந்துள்ளது. இப்போது குளங்களில் நீர்ப்பிடிப்புத் தன்மை 30 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதம் வரை குறைந்துள்ளது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தக் குளங்கள் மூலம் பாசனம் பெறும் பரப்பளவும் 60 சதவிகிதமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக குளத்தை நம்பியுள்ள குடிநீர் விநியோகமும்,விவசாயமும் சூதாட்டத்தைவிட மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது.

மாநிலத்தில் முக்கியமாக 34 நதிகள் உள்ளன. இவற்றைச் சார்ந்து சுமார் 86 துணை நதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான நதிகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்தே உற்பத்தியாகி வருகின்றன. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையிலேயே உற்பத்தியாகி, தமிழகக் கடல்பகுதியில் கலக்கும் ஒரே நதி தாமிரபரணிதான். இந்த நதியைத் தவிர பெரும்பாலான முக்கிய நதிகள் அனைத்தும் அண்டை மாநிலங்களில் உற்பத்தியாகி, தமிழகத்துக்குள் வரும் நதிகளாகவே இருக்கின்றன.

இப்போதுள்ள அரசியல்வாதிகளாலும், அரசுகளாலும் இந் நதிகளின் நீர்வளத்தை முழுமையாக நம்ப முடியாத சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை வளம் குறைந்து வருவதால், நீர்வளமும் குறைந்து வருகிறது.

÷மேலும், மாநிலத்தில் உள்ள பிரதான அணைகள் மேடாகி வருவதால் அதிக அளவிலான நீரைத் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிரதான அணைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 8 அணைகளில் 30 சதவிகிதமும், 2 அணைகளில் 50 சதவிகிதமும், 4 அணைகளில் ஒரு சதவிகிதமும் நீரைத் தேக்கி வைக்கும் அளவு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக  மணல் திருடர்களால், ஆற்று மணல் திருடுவது அதிகரித்துள்ளதால் மண்வளம் மட்டுமன்றி, நீர் வளமும் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆற்றின் போக்கையே மாற்றிவிடும் அளவுக்குப் பகிரங்கமாக நடைபெறும் இந்தத் திருட்டால், ஆறுகளில் நீர்வளம் வேகமாகக் குறைந்து வருகிறது.இவ்வாறு பல்வேறு காரணங்களால் வேகமாகக் குறைந்து வரும் நீர்வளத்தைப் பாதுகாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தாலும், அது கடலில் கரைத்த பெருங்காயமாகத்தான் உள்ளது.

நீர்வளத்தைப் பெருக்காவிட்டாலும், இருக்கின்ற வளத்தையாவது காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். மலைப் பகுதியில் வியாபார ரீதியான நடவடிக்கைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆறுகள் மூலம் நடைபெறும் நீர் வணிகத்துக்குத் தடை விதிக்க வேண்டும். நீர்நிலைகளில் பராமரிப்பு, பாதுகாப்பு மீது தனி அக்கறை எடுத்துச் செயல்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளப்படுவதை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும், நீர் நிலைகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீர்மேலாண்மையில் அரசு காலதாமதமோ, அலட்சியமோ செய்யும்பட்சத்தில், வரும்காலத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாது.

நீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி


நீர் ஆதார மேம்பாட்டுக்கு மீண்டும் ஒரு பசுமைப் புரட்சி

நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு,​​ நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கும் தொலைநோக்குத் திட்டமும் கலந்த பசுமைப் புரட்சி மீண்டும் ஏற்பட்டால்தான்,​​ தமிழகத்தில் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை மேலும் அழிவுப்பாதையை நோக்கிச் செல்லாமல் தடுக்க முடியும்.

​ ​ விவசாயத்தை முக்கியத் தொழிலாக கொண்டுள்ள நாடுகள்,​​ ​ இதன் வளர்ச்சிக்கு சரியான திட்டங்களைச் செயல்படுத்தி,​​ அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து வளமிக்க நாடாக மாற்ற முயற்சிக்கும்.​ ஆனால்,​​ 75 சதவீத மக்களின் வாழ்வாதாரமாகத் திகழும் விவசாயத்தைக் காப்பதற்கு இப்போது உள்ள அரசுக்கும்,​​ இதற்கு முன்னர் இருந்த அரசுகளிடமும் தொலைநோக்குச் சிந்தனைகள் இல்லாமல் போனதால்,​​ இப்போது மீண்டும் ஒரு பசுமைப்புரட்சியைத் தமிழக விவசாயம் எதிர்நோக்கியுள்ளது.​ ​ ​

​ ​ 1960-க்குப் பின்னர் ஏற்பட்ட பசுமைப் புரட்சியால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றது என்பது மறுக்க முடியாத உண்மை.​ ​ இந்தப் பசுமைப் புரட்சி தமிழக விவசாயத்தில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டுவந்தது.​ இதன்பிறகு கிணற்றுப் பாசனப் பரப்பு அதிகரித்துள்ளது.

​ தமிழகத்தில் கடந்த 1951-ல் 14,751 பம்ப்செட்டுகள் இருந்தன.​ இது 1974-ல் 6,81,205 பம்ப்செட்டுகளாக உயர்ந்தன.​ இப்போது சுமார் 25 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளதாக விவசாய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

​ பசுமைப் புரட்சிக்குப் பின்னர் நிலத்தடி நீரின் பயன்பாடு பிரதானமாக்கப்பட்டது.​ ஏரி,​​ கால்வாய்ப் பாசனப் பகுதிகளிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.​ ÷அந்தச் சமயத்தில்தான் விவசாயத்துக்குத் தேவையான தண்ணீர்,​​ சந்தைப் பொருளாகியது.​ அப்போது இருந்த தமிழக அரசுகள் இதைக் கவனத்தில் கொள்ளவில்லை.​ ​

​ ​ பசுமைப் புரட்சிக்குப் பிறகு,​​ விவசாய சாகுபடி பரப்பு அதிகரித்தது.​ விவசாயத் தேவைக்கான இயற்கையான நீர் ஆதாரங்களை அதிகரித்துக் கொள்ளவோ,​​ நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்துக் கொள்ளும் சிறிய நீர்த்தேக்கங்களை உருவாக்கவோ தமிழக ஆட்சியாளர்கள் முழு முயற்சி மேற்கொள்ளவில்லை.​ காவிரி,​​ முல்லைப்பெரியாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகளில் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகள்,​​ இந்தப் பிரச்னைகளை மேலும் சிக்கலாக்கி வருகிறது.​ அரசியல் மாற்றங்களால்,​​ ஓர் அரசு மேற்கொள்ளும் கொள்கைக்கு நேர்எதிரான கொள்கையை மற்றோர் அரசு எடுக்கிறது.​ ​ விவசாயிகளின் நலன்களை மனதில் கொள்ளாமல்,​​ சுய லாபத்துக்காக அரசியல் கட்சிகளும் கருத்துகளில் முரண்பட்டு நிற்கின்றன.

​ ​ அரசு மணல் குவாரிகள் என்ற பெயரில் முக்கிய ஆறுகள் சிலவற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுகிறது.​ அரசு மணல் குவாரிகள் இல்லாத ஆறுகளில் அரசியல்வாதிகள்,​​ உள்ளூர் மக்கள் துணையுடன் மணல் கொள்ளை நடந்து வருகிறது.​ ​ இதனால் அந்தந்த ஆற்றுப்படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைவதால் விவசாயக் கிணறுகள் பெரும்பாலானவை வறண்டுவிட்டன.​ ஆற்றின் மூலம் நீரைப் பெறுகின்ற ஏரிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில்,​​ மணல் கொள்ளை மூலம் ஆற்றின் ஆழம் அதிகரிப்பதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மட்டுமே ​ ஏரிகளுக்குத் தண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.​ ​

​ ஆறுகளில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால்,​​ வைகை மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளிலுள்ள சுமார் 25,000 ஏக்கர் நிலங்களின் நீர்ப்பாசனம் நேரடியாகப் ​ பாதிக்கப்பட்டுள்ளதாக,​​ நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு ​ தெரிவித்துள்ளது.​ மேலும்,​​ காவிரி மற்றும் அதன் துணை நதிகளில் அதிக ஆழம் ஏற்படுவதால்,​​ ஆற்றின் நீரோட்ட வேகம் வெகுவாகத் தடைபட்டுள்ளதாகவும்,​​ இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​ ​

​ ​ ​ விவசாயத்துக்குப் போதுமான அளவில் நீர் ஆதாரம் இல்லை என்ற நிலை ஒருபுறமிருக்க,​​ இருக்கும் நீர் வளத்தையும் பாதுகாக்காமல் விட்டுவிட்டதால் ஆறுகள் அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன.​ காவிரி,​​ அமராவதி,​​ நொய்யல்,​​ பவானி,​​ பாலாறு போன்ற நதிக்கரைகளில் அமைந்துள்ள ஏராளமான தொழிற்சாலைகள் வெளியேற்றும் ஆலைக்கழிவுகள்,​​ சுற்றுச்சூழல் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு,​​ நதிநீரும்,​​ நிலத்தடி நீரும் இந்த தலைமுறையே பயன்படுத்த முடியாத நிலைக்கு மாசுபடுத்திவிட்டன.​ ​ ​
​ ​ இதனால் விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியவில்லை.​ சாகுபடி செய்யும் நிலங்களிலும் விளைச்சல் பெருமளவில் குறைந்து வருகிறது.​ இந்த ஆற்றுப்படுகைகளில் உள்ள சுமார் 1 லட்சம் ஏக்கர் நிலங்கள்,​​ ஆலைக் கழிவுகளால் விவசாயம் செய்ய முடியாத அளவுக்குப் பாழடைந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.​ இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற விவசாயிகளின் குரல் மட்டும்,​​ ​ பல ஆண்டுகளாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.​ தேர்தலின்போதும்,​​ பட்ஜெட்டின் போதும் சாயக்கழிவுப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கோடிகளில் நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்புகள் அரசிடமிருந்து பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.
​ விவசாயத்துக்கு மிக முக்கியத் தேவையாக உள்ள நீர் ஆதாரம் பாதுகாக்கப்படாததால்,​​ விவசாயம் படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது.​ ​ கடந்த 30 ஆண்டுகளில் இருக்கும் நீர் ஆதாரங்களைக் கூட பாதுகாப்பதற்கு ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான்,​​ இன்று அத்தியாவாசியப் பொருள்களை விளைவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.​ இதனால் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களின் விலை தாறுமாறாக உயர்ந்துவிட்டது.​ ​ இனிமேலாவது,​​ ஆட்சியாளர்கள் விழித்துக்கொண்டு,​​ எஞ்சியுள்ள விவசாயத்தைக் காப்பாற்றுவதற்கு,​​ நம்மிடம் இருக்கும் நீர் ஆதாரங்களைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியை உடனடியாகத் ​ தொடங்க வேண்டும்.

ஒலி மாசுவின் விஸ்வரூபம்


வாழ்வதற்கு ஏற்ற நல்ல சூழல் என்பது, நல்ல காற்று, குடிநீர், இருப்பிடம் ஆகியவற்றோடு முடிந்துவிடுவதில்லை. அமைதியும் முக்கியம். ஓசை என்பது ஓசையாகவே இருக்க வேண்டும்; அது ஒலியாக மாறி நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது.

மாசு நிறைந்த நீர், நிலம், காற்று ஆகியவற்றால் உடல் ஆரோக்கியம் எப்படிப் பாதிக்கப்படுகிறதோ அதற்கு இணையாக ஒலி மாசு உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும் என்பதை உணராவிடில் உடல் உறுப்புகள் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஒலியற்ற வாழ்வை நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே நேரத்தில், ஒருவருக்கு விருப்பமான ஒலி மற்றவருக்கு விரும்பத்தகாததாகவும் இருக்கலாம். இதில், சப்தம், ஓசை, இரைச்சல், கூச்சல், உருமல் ஆகிய விதங்களில் வெளிப்படும் ஒலிகளில் எது மனித உடலையும் உள்ளத்தையும் பாதிப்படையச் செய்கிறதோ அது ஒலி மாசாகக் கருதப்படுகிறது.

ஆனால், பெரும்பாலானோர் சப்தம் நம்மை என்ன செய்துவிடும் என்றே கருதுகின்றனர், அதிலும் இளைஞர்களின் விருப்பம் இவ்விஷயத்தில் மோசமாக உள்ளது.

அதிக ஒலியே இன்பம் தரும் என்ற தவறான எண்ணத்தால் மின்னணு ஒலியால் கவரப்பட்டு அதில் மயங்கிக் கிடக்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.

ஆனால், ஒலி என்பது அமைதியாகக் கொல்லும் தன்மையுடையது என்பதை அவர்கள் உணரவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம். ஒலியினால் ஏற்படும் அதிர்வுகளை நம் செவி ஏற்றுக்கொண்ட பின்னர், அதை நாம் புரிந்து செயல்பட மூளை துணை புரிகிறது.

அதேநேரத்தில் செவியால் குறிப்பிட்ட அளவுக்கு மேலான அதிர்வுகளைத் தாங்க முடியாது. அதாவது, 20 ஆயிரம் அதிர்வுகளுக்கு மேல் செவியால் கேட்க முடியாது, 120 டெசிபல் வரையிலான ஒலி அழுத்தங்களை மட்டுமே நன்றாகக் கேட்க முடியும். இதன் அளவு அதிகரித்தால் செவிகள் பாதிக்கப்படும்.

ஆனால், நமது கிராமங்களில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியானாலும் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலியுடன் அதிக நேரம் பாடல்கள் ஒலித்துக் கொண்டேயிருப்பதைப் பார்க்கலாம்.

இதை நாள் முழுவதும் கேட்டுக் கொண்டிருந்தால், அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் இந்த ஒலி அளவை மீறியே பிறரிடம் பேசும் சூழலில், அவர்களது செவித்திறன் பாதிக்கப்படும்.

மேலும், அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள் ஆகியவை ஒலி மாசினால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன.

ஒலி மாசைக் கட்டுப்படுத்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நமது செவித்திறனின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு இயக்கத்தின்போதும் வெளியாகும் ஒலியின் அளவு, அதன் தீவிரம் குறித்து வகுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் உலகில் 5 சதவீத சிறுவர்கள் (10 வயதுக்கு உள்பட்டோர்) ஒலி மாசு காரணமாக, கேட்புத் திறனை இழந்துள்ளதாகவும் 85 டெசிபல் இரைச்சல் சூழலில் பணியாற்றிய பலரும், காது இரைச்சல், தலைவலி, அயர்ச்சி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்டோமொபைல் தொழிலகங்களில் பணிபுரிவோரில் நான்கில் ஒரு பங்கினர் கேட்கும் சக்தியை இழக்கத் தூண்டும் இரைச்சலால் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கிறது.

மேலும், 90 டெசிபலுக்கு மிகையான இரைச்சல் சூழலில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு செவிப்புல அயர்ச்சி ஏற்படுகிறது. நம் நாட்டில் சென்னை, கொல்கத்தா, தில்லி, மும்பை ஆகிய நகரங்களில் உள்ள சாலையோர பழ வியாபாரிகள், ஓட்டுநர்களில் 40 சதவிகிதத்தினர் காது இரைச்சல் பற்றி முறையிட்டுள்ளதாகவும், அமெரிக்காவில் ஒலி மாசினால் 10 சதவிகிதத்தினர் செவித்திறனை இழப்பதாகவும், ஏறத்தாழ 8 கோடி மக்கள் ஒலி மாசினால் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், 1000 பேருக்கு 35 பேர் எனும் விகிதத்தில் காது இரைச்சல் நோயால் பாதிப்படைவதாகவும் நம் நாட்டில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 10 சதவிகிதத்தினரும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் 7 சதவிகிதத்தினரும் கேட்கும் திறன் குறைந்தவர்களாகவே உள்ளனர் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிக ஒலி ஒரு மனிதனை நிம்மதியாக உறங்கவிடுவதில்லை. குறைவான ஒலியும் மூளையின் முக்கிய மையங்களைப் பாதித்து இயல்பான உறக்கத்தைக் குலைத்துவிடுகிறது.

நரம்புத்தளர்ச்சி மற்றும் இதய நோய் உள்ளவர்கள் அதிக ஒலியையோ, எதிர்பாராத சப்தத்தையோ கேட்க நேரிட்டால் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின்றனர். இரைச்சல் தொடர்ந்தால் அதுவே மனிதனின் இறப்புக்கு வழிகோலும். எனவே, இரைச்சலைக் கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆனால், இன்றைய சூழல் எப்படி இருக்கிறது என்பதை நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் புரிந்துவிடும். தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்திலிருந்து துக்க நிகழ்ச்சிகள் வரை தொடரும் பட்டாசு சப்தம் நம் காதுகளைப் பதம் பார்க்கிறது.

கனரக வாகனங்கள், பஸ்களில் பொதுமக்களை அச்சுறுத்தும்வகையில் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை போதாது என்று இரு சக்கர வாகனங்களிலும் தங்கள் பங்குக்கு பலவகை வினோத ஒலி எழுப்பும் மின்னணு ஒலிப்பான்களைப் பொருத்தி, பாதசாரிகளை மிரட்டி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.

இதைக் கண்காணித்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒலி மாசுக் கட்டுப்பாடு சட்டத்தைத் திருத்தி விதிமுறைகளைக் கடுமையாக்க வேண்டும்.

மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் நடவடிக்கைகளுக்கு எந்தவித குறுக்கீடுகளோ, இடையூறுகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒலி மாசால் மனிதனுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இயற்கை நமக்கு அளித்துள்ள சிறந்த ஒலி மாசுத் தடுப்பு சாதனமாகத் திகழும் மரங்களை சாலையோரங்களில் பெருமளவில் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இப்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒலி மாசு என்னும் அரக்கனை அழிக்க வேண்டும்.

Sunday, June 3, 2012

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்


கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399).கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.

சிறிது காலம் இராணுவத்தில் பணியாற்றிய சாக்ரடீஸ் அந்தப் பணியில் ஈடுபாடு இல்லாததால் வேலையை விட்டு வெளியேறினார்.சாக்ரடீஸின் எழுத்துக்களும், சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது.

சிறுவனாக இருந்த போதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இந்த வழக்கம் அவர் வளர வளர வளர்ந்தது.எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே அவருடைய வளர்ச்சிக்குக் காரணமாயின.

பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை சாக்ரடீஸ் செலவிட்டார்.ஆனால் மற்றவர்கள் சக்ரடீஸீடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப் பதில் சொல்வதை அவர் தவிர்த்தார்.ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாக்க் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ்.பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார்.இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர்.

இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது.

அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும்.இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர்.நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளிதான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர்.தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திருநாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் நமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ்.ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்த தயாராக இருப்பதாகவும் நீதி மன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார்.

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் நீதிபதிகள் சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை அறிவித்தனர்.

நீதிமன்ற விசாரணையின் போது சாக்ரடீஸ் செய்த மூன்று சொற்பொழிவுகள் அவருடைய அறிவு விசாலத்தையும் அஞ்சாமையையும், வெளிப்படுத்துவதாக அமைந்தது.

சாக்ரடீஸ் சிறையில் இருந்தபோது அவருடைய நண்பர் கிரிட்டோ என்பவர் சாக்ரடீஸைச் சந்தித்து, சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு ஆலோசனை கூறினார். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளைத் தாம் செய்வதாகவும் கூறினார். அதற்கு,“நான் தப்பிச் செல்வது பொது மக்களின் கருத்துகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கும் நான் பணிந்து விட்டதாக ஆகிவிடும். அத்துடன் என் வாழ்நாளில் நான் கொண்டிருந்த கொள்களைகளுக்கும் எதிராக அமைந்ததாகும்.

நீதிமன்ற விசாரணையின்போது, நான் சாவைக்கூட சந்திக்க தயார்; மன்னிப்புக் கேட்க முடியாது , என்று கூறி சாக்ரடீஸ் தப்பிச்செல்ல மறுத்ததுடன், சாவை எதிர்கொள்ள மகிழ்வுடன் இருந்தார்.சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…

அவருடைய கால் விலங்குகள் அகற்றப்பட்டு, விஷம் கொடுக்க வேண்டும் என்பது நீதிபதிகளின் தீர்ப்பு.இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர்.சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.

“மரணத்தைச் சந்திக்கும் வேளையில் அதிகமாகப் பேசக் கூடாது” என்று விஷம் கொடுக்கும் பொறுப்பில் இருந்த அதிகாரி சாக்ரடீஸிடம் சொன்னான். ஆனால் அவர் அது பற்றிக் கவலை கொள்ளாமல் நகைச்சுவையுடன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

இறுதியாக சாக்ரடீஸ் குளித்து முடித்தார்.

“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள்.

அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.

சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.)

நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.

அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன் கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ் “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார்.சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின! தம்மை ‘அறிஞன்’ என்று அழைப்பதை வெறுத்த சாக்ரடீஸ் என்ற அந்தப் பேரறிஞனின் ஆயுள் முடிந்தது.அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!

Friday, June 1, 2012

புத்தர்



புத்தர் (கி.மு.563-கி.மு.483)

இளவரசர் சித்தார்த்தர் எனும் இயற்பெயருடைய கௌதம் புத்தர் பெரும் சமயங்களுள் ஒன்றான பௌத்த சமயத்தை நிறுவியவராவார். சித்தார்த்தர் வடகிழக்கு இந்தியாவில் நேப்பாள எல்லையின் அருகிலுள்ள கபில வஸ்து எனும் நகரை ஆண்டு வந்த மன்னரின் மைந்தர் (கௌதம குடும்பத்தையும் சாக்கிய குலத்தையும் சேர்ந்த) சித்தார்த்தர் இன்றைய நேப்பாள எல்லைக்குள்ளிருக்கும் லும்பினியில் கி.மு. 563 இல் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. அவர் தமது 16 ஆம் வயதில் ஒத்த வயதுள்ள உறவினளைத் திருமணம் செய்து கொண்டார். செல்வம் கொழிக்கும் அரண்மனையில் பிறந்த சித்தார்த்தர் இளவரசருக்கு இன்ப நலன்களுக்குக் குறைவில்லை. ஆயினும் அவர் ஆழ்ந்த அதிருப்தியடைந்திருந்தார். மனிதருள் பலர் ஏழையாக இருப்பதையும், தொடர்ந்து வறுமையில் துன்புறுவதையும், எல்லோரும் நோயுற்று இறுதியில் இறப்பதையும் கண்டார். மறைந்து போகும் இன்பங்களை விட மேலானாதொன்று வாழ்க்கையில் உண்டென்றும், அவற்றை எல்லாம் துன்பமும் இறப்பும் விரைவில் அழித்தொழிக்கும் என்றும் சித்தார்த்தர் கருதினார்.

கௌதமர் தமது 29 ஆம் வயதில் தம் மூத்த மகன் பிறந்ததும் தாம் வாழ்ந்து வந்த வாழ்கையை துறந்து உண்மையை நாடுவதில் முழு முயற்சியுடன் ஈடுபடத் தீர்மானித்தார். தம் மனைவி, மழலை மகன், உடமைகள் எல்லாம் துறந்து அரண்மனையை விட்டு வெளியேறி, கையில் காசின்றி அலைந்து திரிந்தார். சிறிது காலம் அவர் அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த அறவோரிடம் பயின்றார். அவர்களுடைய போதனைகளை நன்கு கற்ற பின், மனித வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் காட்டிய வழி தமக்கு மன நிறைவளிக்கவில்லை யெனக் கண்டார். கடுமையான துறவே உண்மையான அறிவை அடையும் வழியென்று அப்போது பரவலாக நம்பப்பட்டு வந்தது. ஆகவே கௌதமரும் கடுந்துறவியாக முயன்று, பல ஆண்டுகளாக கடும் நோன்பையும், ஒறுத்தலையும் மேற் கொண்டார். ஆயினும் நாளடைவில் உடலை வருத்துவதால் உள்ளம் குழம்புவதையும் உண்மையான அறிவை அடைய இயலவில்லை என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் வழக்கம் போல் உண்டு, கடுந்துறவைக் கைவிட்டார்.

வாழ்க்கைப் பிரச்சினைக்களுக்குத் தீர்வு காண அவர் தனிமையில் கடுஞ் சிந்தனையில் ஆழ்ந்தார். இறுதியில் ஒரு நாள் மாலையில் அவர் ஒரு பெரிய அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்த போது, தம்மைக் குழப்பிய பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு கிடைப்பது போல் அவருக்கு தோன்றியது. சித்தார்த்தர் இரவு முழுவதும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்தார். மறுநாள் காலையில் தாம் " அறவொளி பெற்ற " ஒரு புத்தர் என்றும் உறுதியாக உணர்ந்தார். அப்போது அவருக்கு 35 வயது. எஞ்சிய 45 ஆண்டுகளில் அவர் வட இந்தியா முழுவதும் சென்று கேட்க விரும்பிய அனைவருக்கும் தமது புதிய கோட்பாட்டைப் போதித்து வந்தார். கி.மு. 483 இல் அவர் இறப்பதற்குள் ஆயிரக்கணக்கான மக்களை மதம் மாற்றினார். அவர் கூறியவை எழுதப் பெறவில்லை யெனினும், அவருடைய சீடர்கள் அவர் போதனைகள் பலவற்றை மனப்பாடம் செய்திருந்தனர். அவை வாய்மொழி மூலமாகத் தலைமுறையாகப் பரவின.

புத்தரின் முக்கியப் போதனைகளைப் பௌத்தர்கள் " நான்கு உயர் உண்மைகள்" எனச் சுருக்கமாகக் கூறுவர். முதலாவது, மனித வாழ்க்கை இயல்பாகவே துயருடையது. இரண்டாவது, இத்துயரின் காரணம் மனிதனின் தன்னலமும் ஆசையுமாகும். மூன்றாவது, தனி மனிதன் தன்னலத்தையும் ஆசையையும் அடக்கிவிடலாம். எல்லா ஆசைகளும் ஆவல்களும் ஒழிந்த இறுதி நிலை (" அணைதல் அல்லது அவிதல்" எனப் பொருள்படும்) " நிர்வாணம்" எனப்படும். நான்காவது, தன்னலம், ஆசை ஆகியவற்றிலிருந்து தப்பிக்கும் " எட்டு வகைப் பாதை" எனப்படும். அவை, நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான தியானம், பௌத்த சமயத்தில் இன வேறுபாடின்றி அனைவரும் சேரலாம். (இந்து சமயம் போலன்றி) இதில் சாதி வேறுபாடு இல்லை.

கௌதமர் இறந்த பின் கொஞ்ச காலம் இப்புதிய சமயம் மெதுவாகப் பரவியது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பெரும் இந்தியப் பேரரசரான அசோகர் பௌத்த சமயத்தை தழுவினார். அவரது ஆதரவினால் பௌத்த சமயச் செல்வாக்கும் போதனைகளும் இந்தியாவில் விரைவாகப் பரவியதுடன், பௌத்த சமயம் அண்டை நாடுகளுக்கும் பரவியது. தெற்கில் இலங்கையிலும், கிழக்கே பர்மாவிலும் பௌத்த சமயம் பரவியது. அங்கிருந்து அது தென்கிழக்கு ஆசியா முழுவதும், மலேசியாவிலும், இன்றைய இந்தோனேசியாவிலும் பரவியது. பௌத்த சமயம் வடக்கே திபெத்திலும், வடமேற்கில் ஆப்கானிஸ்தானிலும், மத்திய ஆசியாவிலும் பரவியது. அது சீனாவிலும் பரவியது. அங்கு ஏராளமான மக்கள் அதைத் தழுவினர். அங்கிருந்து அது கொரியாவிற்கும், ஜப்பானுக்கும் பரவியது.

இந்தியாவினுள் இப்புதிய சமயம் கி.பி. 500 - க்குப் பிறகு நலிவுறத் தொடங்கி, கி.பி. 1200 - க்குப் பிறகு ஏறக்குறைய முழுவதும் மறைந்து விட்டது. ஆனால் சீனாவிலும், ஜப்பானிலும் அது முக்கிய சமயமாக இருந்தது. திபெத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் பல நூற்றாண்டுகளாக அது தலையாய சமயமாக இருந்து வந்துள்ளது. புத்தர் இறந்து பல நூற்றாண்டுகள் வரை அவருடைய போதனைகள் எழுதப் பெறவில்லை. ஆகவே இவரது இயக்கம் பல கிளைகளாகப் பிரிந்தது பௌத்த சமயத்தின் இரு முக்கிய கிளைகளுள் ஒன்று தேரவதா பிரிவு. இது தென்கிழக்கு ஆசியாவில் தழைத்தோங்கியது. இதுவே புத்தர் போதித்த போதனைகளுடன் நெருங்கிய தொடர்புடையதென மேல் நாட்டு அறிஞர் பலர் கருதுகின்றனர். மற்றொரு கிளை மகாயானம். இது பொதுவாக திபெத், சீனா, வட ஆசியாவில் செழித்தோங்கியது.

உலகப் பெரும் சமயங்களுள் ஒன்றை நிறுவியவரான புத்தர் இப்பட்டியலில் உயரிடம் பெற தகுதியுடையவர். 80 கோடி முஸ்லீம்களும், 100 கோடி கிறிஸ்தவர்களும் இருக்கும் இவ்வுலகில் 20 கோடி பௌத்தர்களே இருப்பதால், நபிகள் நாயகமும் கிறிஸ்து பெருமானும் கவர்ந்ததை விடக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களையே புத்தர் கவர்ந்தார் என்பது போல் தோன்றுகிறது. ஆயினும் எண்ணிக்கை வேறுபாட்டைக் கொண்டு நாம் தவறான முடிவுகளுக்கு வரலாகாது. பௌத்த சமயத்தின் கருத்துகளையும் கொள்கைகளையும இந்து சமயம் ஈர்த்துக் கொண்டது. பௌத்த சமயம் இந்தியாவில் மறைந்ததற்கு அது ஒரு காரணமாகும். சீனாவில் கூட தம்மை பௌத்தர்களெனக் கருதாதவர் பலரை பௌத்தக் கோட்பாடுகள் கவர்ந்துள்ளன.

கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயங்களை விட பௌத்த சமயம் பெரும் அமைதி இயல்புடையது. இன்னா செய்யாமைக் கொள்கை பௌத்த சமய நாடுகளில் அரசியல் வரலாற்றில் சிறப்பிடம் பெற்றுள்ளது. கிறிஸ்து பெருமான் திரும்பவும் உலகிற்கு வருவாரானால் தமது பெயரால் நடைபெறும் பலவற்றைக் கண்டு அதிர்ச்சியடைவரெனவும், அவரைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் வெவ்வேறு பிரிவினரிடையே நிகழும் கொடிய போராட்டங்களைப் பார்த்துத் திகிலடைவாரெனவும் பலமுறை சொல்லப் படுகின்றது. புத்தரும் பௌத்தக் கோட்பாடுகளெனக் கூறப்படும் பல கோட்பாடுகளைக் கண்டு வியப்படைவாரென்பதில் ஐயமில்லை. ஆனால் பௌத்த சமயத்தில் பல கிளைகள் இருப்பினும், இக்கிளைகளிடையே பெரும் வேறுபாடுகள் இருப்பினும், கிறிஸ்துவ ஐரோப்பாவில் நிகழ்ந்தவை போன்ற கொடிய சமயப் போர்கள் பௌத்த வரலாற்றில் நிகழ்ந்ததில்லை. இதைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவின் போதனைகள் அவரைப் பின்பற்றியவரிடையே மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது போல் தோன்றுகிறது. புத்தரும் கன்ஃபூசியஸிம் உலகை ஏறக்குறைய ஒரேயளவில் கவர்ந்துள்ளனர். இருவரும் ஏறக்குறைய ஒரே காலத்தில் வாழ்ந்தனர். அவர்களைப் பின்பற்றியவர்களின் தொகையும் மிகுதியாக வேறுபடவில்லை. நான் புத்தரைக் கன்ஃபூசியஸிக்கு முன்னால் வைப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, சீனாவில் பொதுவுடமைக் கொள்கை தோன்றியதிலிருந்து கன்ஃபூசியஸின் செல்வாக்கு மிகவும் குறைந்து விட்டது. வருங்காலத்தில் கன்ஃபூசியஸின் கருத்துகளை விட புத்தரின் கொள்கைகளே மிக முக்கியமாகக் கருதப்படுமெனத் தெரிகின்றது. இரண்டாவது, கன்ஃபூசியக் கோட்பாடு சீனாவிற்கு வெளியே பரவவில்லை என்பது முந்திய சீன மனப்பாங்கில் கன்ஃபூசியஸின் கருத்துகள் எவ்வளவு மெதுவாகப் பதிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது. ஆனால் புத்தரின் போதனைகளோ முந்திய இந்தியக் கோட்பாட்டைத் திரும்பக் கூறுவதாக அமையவில்லை. கௌதம புத்தரின் கருத்துகள் புதுமையாக இருந்தாலும், அவருடைய கோட்பாடு பலரைக் கவர்ந்ததாலும், பௌத்த சமயம் இந்திய எல்லையைக் கடந்து மிகத் தொலைவில் பரவியது.

Wednesday, May 30, 2012

Dr.A.P.J.அப்துல் கலாம்

கடவுள் எங்கே இருக்கிறார்?

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

“நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”

(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”

“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

……

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”

…….

“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”

(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. ‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”
“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎�

மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”
“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)

“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)

“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”

“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

(மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

“நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. ‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.

இது ஒரு உண்மைச் சம்பவம். ‏

இறுதிவரைப் பி‎ன்வாங்காமல் விவாதித்த அந்த மாணவர்?

வேறு யாருமல்ல.

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

இந்திய பொருளாதாரம்



இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாட்டின் வளர்ச்சி விகிதம் ஒன்பது சதவீதமாக தொடர்ந்து இருந்து வருகிறது. நாம் 10 சதவீதத்தை எட்டி, அதை 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், நாம் வளர்ந்த இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் காண முடியும்.இந்தியாவின் மொத்த உற்பத்தித்திறன் ஒரு பில்லியன் டாலர் என்ற இலக்கை எட்டி விட்டது. நம் அன்னியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 300 பில்லியன் இலக்கை தாண்டியுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அன்னிய முதலீடுகள் குவிக்கின்றன. இந்தியாவில் வேலைக்கேற்ற தகுதி வாய்ந்த திறமையான மனித வளம் கிடைப்பது அரிதாக உள்ளது. இதன் காரணமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தை சமநிலைப்படுத்தி, அதே நிலையில் மேம்படுத்தி கொண்டு செல்லக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு எண்ணெய் தூர் வாரும் தனியார் நிறுவனத்தின் பணிகளுக்கு இந்தியாவிலேயே அதற்குரிய மனிதவளம் கிடைக்கவில்லை என்பதால், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்தியாவில் மனித வளத்தை நாம் பதப்படுத்தி பக்குவப்படுத்தாவிட்டால், இந்தியா தனது முகவரியை இழந்து நிற்கும் நிலை ஏற்படும்.இந்தியாவினுடைய வேலைவாய்ப்பு திறன் கொண்ட மொத்த மனித வளம் 45 கோடி. அதில் வரன்முறை படுத்தப்பட்ட மனிதவளம் 8 முதல் 10 சதவீதம் மட்டுமே. மீதமுள்ள 90 சதவீதம் வரன்முறைபடுத்தப்படாத துறைகளிலிருந்து வருகிறது. இதில், விவசாயிகள், கட்டட தொழிலாளர்கள், தினக்கூலிகள், வீட்டு வேலையாட்கள் மற்றும் சுயதொழில் செய்யும் நபர்களும் உள்ளனர். பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 10 சதவீதம் என்று வளர வேண்டும் என்றால், விவசாயம் ஆண்டுக்கு நான்கு சதவீத வளர்ச்சியையும், உற்பத்தி மற்றும் சேவை துறைகள் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியம்.

விவசாயத் துறையில் குறைந்த வருவாயில் ஈடுபட்டுள்ள மனித வளம், மற்ற துறைகளுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் அவர்களுக்கு தேவையான பயிற்சியும், தேவையான திறமையும் இல்லையென்றால், அவர்களால் எந்தத் துறையிலும் நுழைய முடியாது. இங்கு தான் சவால் ஆரம்பிக்கிறது.இதை சரி செய்வதற்கு அரசு, தனியார் துறைகள், தொழில் துறை, கல்வித்துறை, பல்கலைக் கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும்.

-  அப்துல்கலாம்


இந்தியாவின் அடையாளமான விவசாயம் மறைந்து வருவதால் உணவு பிரச்னை ஏற்படுமா?

விவசாயத்தை பாதுகாக்காவிட்டால் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. விவசாயத்திற்கான திட்டங்களை கொண்டு வந்து உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும். உணவு பொருட்களை பதப்படுத்தும் முறையை கையாள வேண்டும்.

புவி வெப்ப மயமாவதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் சம்பவங்களை தடுக்க வேண்டும். நாம் ஓட்டும் வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை கூட புவி வெப்பமயமாக காரணமாக உள்ளது. இதற்கு மாற்றாக மரம் வளர்த்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்.

விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எப்போது ஏற்பட்டது?

நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது, வானத்தில் பறவை பறப்பதை பார்த்து அதிசயத்தேன். பறவையால் எப்படி பறக்க முடிகிறது என்பதை ஆசிரியரின் உதவியால் அறிந்தேன். அதன்பின், இயற்பியல் மீது கொண்ட ஆர்வத்தால் விட முயற்சியுடன் படித்து விஞ்ஞானி ஆனேன்.

சந்திரயான் விண்கல ஆய்வு பற்றி...

சந்திரயான் விண்கலம், சந்திரனில் உள்ள நீர் மற்றும் கனிம வளம் பற்றி ஆய்வு செய்கிறது. இந்தியாவில் விவசாயம் செழிக்கும். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் இணைக்கப்படும்.

சூரியசக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறிய வேண்டும்: அப்துல் கலாம்


மாணவ, மாணவியருடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அணுக்களின் பரிமாற்றம் குறித்து "பாஞ்சாலி சபதம்' எனும் நூலில் பாரதியார் குறிப்பிட்டுள்ளார்; அவரை ஒரு விஞ்ஞானி எனக் கூறலாம். சூரியன் பூமியை சுற்றி வருவது போல, வாழ்க்கையில் நாம் நிலைத்து நிற்க, விடாமுயற்சியுடன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். கல்லூரி வாழ்க்கை பருவம், ஒரு முக்கியமான கட்டமாகும். அப்போது நாம் கற்கும் கல்வியே, வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும். ஒருவரது வாழ்க்கையின் 20 வயதுக்குள் பெற்றோர், ஆரம்ப கல்வி கற்றுத் தந்த ஆசிரியர் ஆகியோர், எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நல்லறிவு, நல்நோக்கம், கடின உழைப்பு இருந்தால் வெற்றி நிச்சயம். புதிய கண்டுபிடிப்புகளுக்கான தேடல் மிக முக்கியம். சிந்தனை, நல்லறிவு ஆகியவையே ஒருவரை மகானாக திகழச் செய்யும். நாம் செய்யும் பணியில் ஈடுபாடும், கடின உழைப்பும் இருந்தால் வெற்றி எளிதாகும். ஒரு செயலை மேற்கொள்ளும்போது ஏற்படும் தடைகளை கடந்து, வெற்றி பெறும் மனப்பக்குவத்தை வளர்க்கவேண்டும். நாம் பிறந்தோம், வளர்ந்தோம் என்றில்லாமல், நாம் மறைந்த பிறகும் நமது பெயர் நிலைத்திருக்கும் விதத்தில் நமது செயல் இருக்கவேண்டும்; நாட்டின் வளர்ச்சிக்கு அவை உதவவேண்டும்.

பூமி வெப்பமயமாதல், தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றை நாம் உணர்ந்து, அவற்றை தடுக்கும் வழி முறைகளை ஆராயவேண்டும். மாணவ பருவத்தில், ஆராய்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது; ஒரு நாட்டின் முன்னேற்றத்திலும் இதுவே முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு அடித்தளம் கல்லூரி வாழ்க்கை. ஒவ்வொரு கல்லூரியும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மாணவர்களுக்கு முழுமையாக உதவவேண்டும். இதன்மூலம் கண்டுபிடிப்புத்திறன் அதிகரிக்கிறது. வேளாண், வேளாண் உற்பத்தி அதிகரிக்கவேண்டும். இன்ஜி., மற்றும் ஐ.டி., தொழில்நுட்பத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படவேண்டும். இதில், மாணவ, மாணவியரின் பங்கு முக்கியமானது. எதிர்கால தேவையை உணர்ந்து இளைய தலைமுறை செயல்படவேண்டும். வான்வெளி ஆராய்ச்சிதுறையில் வரும் 10 முதல் 15 ஆண்டுகளுக்குள் மிகப்பெறும் வளர்ச்சி ஏற்படும். சூரிய சக்தியை பயன்படுத்துவதில் புதிய முறைகளை கண்டறியவேண்டும். கண்டுபிடிப்புத் திறன் மிக முக்கியம். வரும் 2020ம் ஆண்டுக்குள் சோலார் மற்றும் அணுசக்தி பயன்பாடு மிக அதிகமாகும். இதற்காக "சோலார் பவர் சேட்டிலைட்' அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் எனது பங்கும் உள்ளது. இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.
மாணவ, மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை குறிப்பிட்டார். "கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் என்பவர், குறைந்த உயரத்தில் பறக்கும் விமானத்தை கண்டுபிடிக்கும் திட்டத்தை கொடுத்தார். ஆறு மாத காலத்தில் ஏழு பேர் கொண்ட குழுவாக நாங்கள் செயல்பட்டு வடிவமைத்தோம். பேராசிரியரிடம் காண்பித்தபோது, அதனை ஏற்றுக் கொள்ளவில்லை; மூன்று நாட்கள் மட்டும் அவகாசம் கொடுத்து மாற்றி வடிவமைக்குமாறு தெரிவித்தார். மூன்று நாட்களில் அதை வெற்றிகரமாக செய்து முடித்தோம். அப்போதுதான் நேரத்தின் அருமை குறித்து உணர்ந்தேன். மேலும், மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது எனவும் தெரிந்தது. அதுபோல, இளைதலைமுறையினர் நேரம் தவறாமையை கடைபிடிக்கவேண்டும்' என்றார் அப்துல் கலாம்.

தலைமைப்பண்பில் நேர்மையும் அறமும் தேவை..


ஒருநல்ல தலைவனுக்கு ஒரு நல்ல தீர்மானத்தை எடுத்து அதைச் செயல்படுத்த வேண்டிய மனோதைரியமும் துணிச்சலும் இருக்க வேண்டும்’என்பது. இதற்கு நான் உதாரணம் காட்ட வேண்டும் என்றால் உடனடியாக என் நினைவுக்கு வருவது இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல்தான்.

அவர் மட்டும் அன்று ஒன்றுபட்ட இந்தியாவை உரு வாக்க வேண்டும் என்று தீர்மானித்து , அதை இரும்புக்கரம் கொண்டு செயல்படுத்தியிராவிட்டால் இன்று இந்தியா எத்தனையோ குட்டி குட்டி நாடுகளாக, சமஸ்தானங்களாகச் சிதறுண்டு போயிருக்கும். அவரை விமர்சித்தவர்களும் வாயடைத்துப் போனார்கள். இந்த டிஸிஷன் மேக்கிங் பண்பு ஒரு தலைவனுக்கு மிகவும் தேவையானது.
“தலைமைப்பண்பில் நேர்மையும் அறமும் தேவை..’ஒரு அமைப்புக்கு லாபம் என்பது குறிக்கோளாக இருக்கலாம், ஆனால் அது நேர்மையையும் அறத்தையும் விலை கொடுத்து வாங்குவதாக இருக்கக் கூடாது. அதே போல் ஒரு தலைவன் தன் பணிகளில் அறத்தைப் பேணுவதில் அக்கறை காட்ட வேண்டும்.

“ஒரு தலைவனின் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்..’இது இன்றைய காலகட்டத்துக்கு மிக முக்கியமான ஒன்று. எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டதை நாம் காண்கிறோம். பொது வாழ்க்கைக்கு மட்டுமின்றி ஒரு அமைப் புக்குத் தலைவனாக இருப்பவனும் தன்னைப் பற்றிய நடவடிக்கைகளை வெளிப் படையாக வைத்திருக்க வேண்டும். அந்தத் தலைவனை உதாரணமாகக் கொண்டு தான் கோடிக்கணக்கான தொண்டர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு வழி காட்டு வது போல் அந்தத் தலைவனின் நடவடிக்கைகள் கிளீன் ஸ்லேட்டாக இருக்க வேண்டும்.

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தி இந்த வெளிப்படையான தன்மைக்கு ஒரு உதாரண புருஷர். அவர் மக்களுக்கு எதையுமே மறைத்ததில்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விஷயங்களைக் கூட அவர் ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக அறிவித்தார். அவருடைய ஆசிரமத்தில் எப்போதும் பஜன் நடக்கும். அதில் கலந்து கொள்பவர்கள் ஆளுக்கு ஒரு ரூபாய் காணிக்கை அளித்து விட்டுக் கலந்து கொள்ளலாம். அதில் வசூலாகும் தொகை நல்ல விஷயங்களுக்குச் செலவிடப்படும்.

தினமும் அந்த வசூலில் சேரும் ஒரு ரூபாய்கள் மொத்தமாக கணக்கிடப்படும். ஒருநாள் அந்தக் கணக்கில் சிறு தவறு நேர்ந்து விட்டது. சிறு தவறு தான். அதாவது ஒரே ஒரு ரூபாய் கணக்கு இடித்தது. மகாத்மா காந்தி கடுங்கோபம் கொண்டு விட்டார். அந்த ஒரு ரூபாய்க்கு சரியான கணக்கு வரும்வரை நான் சாப்பிட மாட்டேன் என்று சொல்லி உண்ணா விரததத்தில் இறங்கி விட்டார். மூன்று நாட்கள் அந்த உண்ணாவிரதம் நீடித்தது. பிறகு அந்த ஒரு ரூபாய்க்கான கணக்கு சரியாகக் காட்டப்பட... உண்ணா விரதம் ஒரு முடிவுக்கு வந்தது. ஒரு ரூபாயாக இருந்தாலும் பொது மக்களுக்கு அந்தக் கணக்கு சரியாகத் தெரியவேண் டும் என்பதில் உறுதியாக இருந்தார் அந்த தேசப்பிதா.

வேலை செய்வதிலும் செய்து முடிப்பதில் ஒரு தலைவனுக்கு நம்பகத்தன்மையும் ஒற்றுமையுணர்வும்  வேண்டும்.’நான் இந்தக் கருத்தைப் பல மீட்டிங்குகளில் சொல்வதுண்டு. இதை ஒப்புக் கொள்பவர்கள் கை தூக்குங்கள்’’ என்று சொல்வேன். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள் போன்றவர்கள் கை உயர்த்துவார்கள். ஆனால் பெரியவர்கள் கை உயர்த்த மாட்டார்கள். சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்த போது ஒரு மீட்டிங்கில் இதே கேள்வியைக் கேட்டு கையை உயர்த்தச் சொன்னேன். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒருவர் கூட கை தூக்கவில்லை. ஆனால் இந்தத் தகுதியை ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை தகுதியாக நான் கருதுகிறேன்.

இந்த எட்டு அடிப்படை தகுதிகளுடன் ஒரு தலைவன் உருவாகும் போது, அது எந்தக் கட்சியில் அல்லது அமைப்பில் இருந்தாலும் சரி, அந்த தலைவனால் பெரிய மாற்றங்கள் உருவாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த எல்லா அடிப்படைத் தகுதி களையும் ஒரே வார்த்தையில் அடக்குவதைத்தான் நான் “கிரியேட்டிவ் லீடர்ஷிப்’’ என்று குறிப்பிட்டேன்.

இளைஞர்களிடம்தான் இந்த படைப்பாற்றல் மிக்க தலைமை இருக்கப் போகிறது. இது இளைஞர்கள் காலம். முழுமூச்சுடன் அவர்கள் பணியாற்றப் போகும் காலம். இந்த நாட்டில் உள்ள 540 மில்லியன் இளைஞர்களின் பொறுப்பில்தான் தேசத்தின் எதிர்காலமே இருக்கிறது. அவர்கள் சரியான நேரத்தில் சரியான வேலையைச் செய்ய வேண்டுமே தவிர, தேவையற்ற வேலைகளில் கவனத்தைச் சிதற விடக்கூடாது.

நான் எம்.ஐ.டியில் படித்துக் கொண்டிருந்தபோது ஒரு மிகப் பெரும் தலைவரைச் சந்தித்தேன். அவர் அப்போது எனக்கு கொடுத்த தங்கமான அறிவுரை. ""இப்போதைக்கு படிப்பில் மட்டுமே உன் கவனம் இருக்க வேண்டும். அரசியல் அது இது என்று கவனத்தைத் திருப்பாதே..உன் படிப்புதான் உன்னையும் இந்த சமூகத்தையும் உயர்த்தும்...''’என்றார்.

அவர்- தந்தை பெரியார்!

நதிகளை இணைக்க முடியும்!

நதிநீர்இணைப்பு’’ பற்றிய பேச்சு நம் நாட்டில் அடிக்கடி எழுகிறது. அது சாத்தியம் என்றும் சாத்தியமில்லை என்றும், நாட்டின் பல பிரச்னை களுக்கு அது தீர்வாக இருக்கும் என்றும் இல்லை இல்லை சுற்றுச்சூழலை அது கெடுக்கும் என்றும் இரண்டு விதமான கருத்துகள் அவை. எந்த ஒரு திட்டத்துக்குமே இரண்டு வகையான கருத்துக்கள் இருக்கவே செய்யும்.

அதுவும் இந்தியாவைப் போன்ற மிகப்பெரும் ஜன நாயக நாட்டில் பல்வேறு கருத்துக்கள் முட்டி மோது வதில் ஆச்சர்யமில்லை. அவற்றையெல்லாம் நமது சுய விமர்சனங்களாகவே எடுத்துக் கொண்டு விவாதம் செய்து பார்த்தால்தான் உண்மை எது என்பது விளங்கும். "நாடு முழுவடும் உள்ள நதிகளை இணைப்பது என்பது சாத்தியமே இல்லை.. அது ஒரு மிகப்பெரிய சவால்...'’என்கிறார்கள் சிலர்.

நான் சொல்வது, இப்படி சாத்தியமே இல்லை என்று பேசுவதை முதலில் விட்டு விடுவோம் என்பதுதான். நதி நீர் இணைப்பு ஏன் சாத்தியமில்லை? மனிதனால் முடியாதது என்று ஒன்று உண்டா? வரலாற்றில் அவன் புரிந்திருக்கும் சாதனைகள் எல்லாம் ஒன்றா, இரண்டா?

கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை பிறந்திருக்காது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது.

சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன் னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியை அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று சந்திரனுக்கு செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது.
7 முறை அமெரிக்காவால் சந்திரனை சுற்றி வர இயலவில்லை, சீனாவாலும், ஜப்பானாலும் சந்திரனில் சாதிக்க முடியாததை இந்தியாவின் கன்னி முயற்சியிலேயே நமது விஞ்ஞானிகள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். அயர்லாந்தில், சுவிட்ச்சர்லாந்தில், நெதர்லாந்தில் அமெரிக்காவில் (பனாமா கால்வாய்), ஆப்பிரிக் காவில் (நைல் நதிகளை) இணைத்து சாதித்து காட்டியிருக் கிறார்கள். இப்படி பல்வேறு நாடுகளில், அதன் தலைவர்கள், இயற்கையை மாற்றி, நதிகளை இணைத்து நாட்டை வளமாக்கி காட்டி இருக்கிறார்கள்.
அவ்வளவு ஏன் இந்தியாவிலே அதற்கு பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன. உத்திரபிரதேசம், கோவா, ஆந்திரா, கேரளாவிலே நதிகள் இணைக்கப்பட்டி ருக்கிறது. இந்தியாதான் இயற்கை வளத்திலும் சுற்றுப்புற சூழல் வளத்திலும் சிறந்த நாடு. தண்ணீரே இல்லாத பாலைவனத்தை சோலைவனமாக துபாய், இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள் மாற் றிக்காண்பிக்கவில்லையா? "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்' என்ற பாடல் வரிகள் முடியும் என்பதைத்தானே உணர்த்துகின்றன?

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிக மாக உள்ளது. இப்பொழுது சில இளைஞர்களையும் அது தொற்றிக்கொண்டு விட்டது. முடியும் என்று நம்பும் மனிதனால் தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.

எனவே நண்பர்களே, முடியும் என்ற நம்பிக்கை கொண்ட 54 கோடி இளைஞர்கள்தான், இந்திய நதிகளை இணைக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்ட இளைஞர்கள்தான் அனுபவம் கொண்டோரின் துணை கொண்டு வெற்றியை காண முடியும். நதிகளை இணைக்க என்ன வேண்டும். தைரியமும், நம்மால் முடியும் என்ற நம்பிக்கையும்தான் வேண்டும்.

தைரியம் என்று சொன்னேனே, எப்படிப்பட்ட தைரியம் வேண்டும்?

இமயமலையையே புரட்டிப் போடுகிற தைரியம்.

புதுமையாக சிந்திக்கக் கூடிய தைரியம்!

படைப்பாற்றலை வெளிப்படுத்தக்கூடிய தைரியம்!

கண்டு பிடிக்கப்படாத பாதைகளை உருவாக்கி அதில் நடந்து சாதித்துக்காட்டக்கூடிய தைரியம்.

புதிய பாதைகளில் பயணித்து புதுப்புது விஷயங்களைக் கண்டுபிடிக்கக் கூடிய தைரியம்!
இளைஞர்களுக்கு அந்த தைரியம் உண்டு. எந்தப் பிரச்னைகளையும் தைரியமாக எதிர் கொண்டு, பிரச்சினைகளை வெற்றி கொள்ளும் அவற்றைத் தவிடு பொடி ஆக்கும் தைரியம் அவர்களிடம் உண்டு!

இப்படிப்பட்ட இளைய சமுதாயம் ஒன்றுபட்டு எழுந்தால் நதிநீர் இணைப்பு என்பது சாத்தியம்தான் !

சீனாவில் அதன் நடுப்பகுதியிலிருந்து, திபெத் வரை பனிநிலத்தில் உலகிலேயே உயரமான ரயில் பாதையை அமைத் திருக்கிறார்கள். மலைக்க வைக்கும் உழைப்பு அது. அது சாத்தியம் என்றால் நதி நீர் இணைப்பும் சாத்தியம் தான்.

ஏற்கனவே, உலக வெப்பமயமாதல் மற்றும் வேறு சில பிரச்னைகளால் பருவ மழையே பொய்த்து வருகிறது. 2020-ம் வருட அளவில், நாளுக்குநாள் கிடுகிடுவென்று உயர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத் தால், 400 மில்லியன் டன் உணவுப் பொருட் களை நாம் அதிகமாக உற்பத்தி செய்தாக வேண்டும். அதற்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்று யோசித்துப் பாருங்கள்!

நதிநீர்இணைப்பு சாத்தியமில்லை என்று சில அரசியல் தலைவர்களும் மந்திரி பொறுப்பில்உள்ளவர்களும் பேசுவதை இப்போதும் கேட்கிறோம். நாம் வானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை, வானவில்லையும் நேராக்கச் சொல்லவில்லை. நம்கண்ணெதிரே இருக்கக் கூடிய ஒரு விஷயத்தைச் சரி செய்யுங்கள் என்றுதான்கேட்கிறோம்.

தமிழ்நாடு வாட்டர்வேஸ் பிராஜக்ட் ஒரு மிகப் புதுமையான திட்டம். வெள்ளத்தைக் கட்டுப் படுத்துவது மட்டுமின்றி உபரிநீரைச்சேமிக்கவும் வைக்கக்கூடிய திட்டம். இரண்டு வழிகளில் நீர் செல்லக்கூடியஒன்று. மேட்டூர், சாத்தனூர், பவானி, வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை,சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு இவற்றோடு பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ்,செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற எண்ணற்ற ஏரிகள், குளங்களை இணைக்கக் கூடியஅற்புதமான திட்டம்.
தமிழ்நாட்டில்மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயக்கூடிய முக்கியமான நதிகளை ஒருபொதுவான வழியின் மூலம் இணைக்கக் கூடிய அத்தனை வரைத் திட்டங்களும் அதில்இருக்கின்றன. இந்தத் தண்ணீர் வழிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 300மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு ஆழமானஆராய்ச்சிக்குப் பிறகு இவை தீட்டப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குப்புரியும்.

இது என்னுடையகனவுத் திட்டம். இந்த தண்ணீர் வழிகளின் வழியே தமிழ்நாட்டின் அத்தனைஆறுகளும் இணைக்கப்பட்டு தமிழகத்தின் எல்லா ஆறுகளும், ஏரிகளும்,குளங்களும், கால்வாய்களும், இணைக்கப்பட்டு எல்லாவற்றிலும் ஆண்டு முழுவதும்கற்கண்டுத் தண்ணீர் தளும்பி நின்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்,தொழிற்சாலைகளுக்கும் எப்போதும் தாகம் தீர தண்ணீர் கிடைக்கக் கூடிய அந்தஅற்புதக்காட்சி எப்போதும் என் கனவுகளில் வருவது உண்டு. அந்தக் கனவுமட்டும் நிறைவேறிவிட்டால் தமிழ்நாடே சொர்க்கபுரி ஆகிவிடாதா என்ன?

ஒவ்வொருநதியும் ஒவ்வொரு இடத்தில் இருப்பது போல் மேம்போக்காகப் பார்க்கும் போதுநம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் தேர்ந்த வரைபடத் திட்டங்களின் முலம் இவைஎத்தனை அழகாக இணைக்கப்படக்கூடியவை என்கிற உண்மை புரியும்.

இதுஏதோ வரைபடத்தில் மட்டுமே உள்ள, நிதர்சனத்தில் சாத்தியமே இல்லாத பகல்கனவுதிட்டம் அல்ல. ஐந்து கட்டங்களில் நிறைவேற்றப்படக் கூடிய பிராக்டிகலானதிட்டம்.

முதல் கட்டத்தில் வைகையையும் மேட்டூரையும் இணைக்கும் திட்டம். இது 350 கிலோ மீட்டர் நீளமானது.

இரண்டாவது கட்டம் மேட் டூரையும் பாலாறையும் இணைப்பது, இது 270 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

150 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வைகை - தாமிரபரணி இணைப்பு அடுத்த கட்டத்தில் உள்ளது.

நான்காவது கட்டத்தில் 130 கிலோமீட்டர் நீள முள்ள தாமிரபரணி - பெருஞ்சாணி இணைப்பு வருகிறது.

ஐந்தாவதுகட்ட மாக இந்த நதிகளை இணைப்பு மூலம் கிடைக் கக்கூடிய உபரி நீரை ஆங்காங் கேஉள்ள குளம், குட்டை, ஏரிகளில் இணைக்கக்கூடிய சப்சிடியரி கால்வாய்திட்டங்கள்.

இப்படி நதிகளைஇணைப்பது மூலம் தண்ணீர் அற்ற நதிகளுக்குத் தண்ணீர் கிடைப்பது மட்டுமன்றி,இதர தண்ணீர் நிலைகளுக்கு அதன் உபரித்தண்ணீரும் திறந்து விடப்படுவதால்நாடெங்கும் தண்ணீர் திரண்டு நிற்கக்கூடிய அற்புதமான நிலையை நம்மால் காணமுடியும். செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டியதைப் போன்ற மலைக்கவைக்கும் திட்டம் அல்ல இது. பத்தே வருடங்களில் செய்து முடிக்கக் கூடியபிராக் டிகலான திட்டம்.
இதனுடைய பலா பலன்களும் திட்டவரைவில் தெளிவாகவே சுட்டிக்காட் டப்பட்டிருக்கின்றன.

முதல்கட்டமாக வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது இந்தத் திட்டம்,உபரியாக, 7.5. மில்லியன் ஏக்கர் அளவு விவசாய நிலத்துக்குப் பாசன நீரைஅளிக்கும்.
150 மெகாவாட்மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் அளவைஅதிகரிப்பதின் மூலம் மின்சார உபயோகத்தை 1350 மெகாவாட் அளவு குறைக்கும்.

10மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு அருமையான நீர்வழிப்பாதையைஇந்தத் திட்டம் ஏற்படுத்தித் தரும். தண்ணீர் போக்கு வரத்து, சுற்றுலாபோன்ற வற்றின் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
சாலைப் போக்குவரத் தைக் காட்டிலும் 90 சதவீத எரிபொருள் சேமிப்பு இந்தத் தண்ணீர்வழிப் போக்கு வரத்தின் மூலமாகக் கிடைக் கும்.

ஐம்பது மில்லியன் பொது மற்றும் தொழிற் சாலை சார்ந்த மக்களுக்கு இந்தத் தண்ணீர் மூலம் பயன் கிடைக்கும்.

புதிய மின் உற்பத்திக் கான வழிகள் இந்தப் புதிய தண்ணீர் சாலைகளின் வழியே ஏற்படும்.

சிந்தித்துப்பாருங்கள். இந்தப் புதிய தண்ணீர் வழிகள் தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடாதா? அசோகர் சாலை இருமருங்கிலும் மரங்களை நட்டார், ஏரி, குளங்களைஏற்படுத்தினார் என்று இன் றைய சரித்திரத்தில் படிக்கி றோமே, அதே போல்நாளைய வரலாற்றில், தமி ழகத்தில் நதிகளை இணைத் தார்கள், அதன் மூலம்தமிழ்நாடு வளம்பெற்றது என்று எழுதப் பட வேண்டாமா? அது நம் கையில்தானேஇருக்கிறது?
நதிநீர் இணைப்பு அது காலத்தின் கட்டாயம்! நனவாகக் கூடிய கனவு!
...... அப்துல் கலாம்

ஒரு தலைவன் யாரும் பயணிக்காத பாதையில் பயணம் செய்ய அறிந் திருக்க வேண்டும்.

தண்ணீரும், எரிசக்தியும்தான் எதிர்காலத்தில் நாம் சந்திக்க வேண்டிய இருபெரும்சவால்கள் . நதிநீர்இணைப்பு, புதிய தண்ணீர் வழிச் சாலைகள் அமைப்பது இந்த இரண்டு தீர்வுகள்தான் தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். அதே போல் கச்சா பெட்ரோல்எண்ணெய்க்கான மாற்று எரிசக்திகளைக் கண்டறிவது எரிசக்திப் பிரச்னையைத்தீர்க்கும். ஆனால் இவற்றை சாதிப்பது சாதாரண விஷயமில்லை.

கடும்உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு, புதுமை படைக்கும் எண்ணம், இவற்றோடு கூடியஒருங்கிணைந்த சக்தி அதற்குத் தேவைப்படும். முக்கியமாக இந்த சக்திக்குத்தேவை ஒரு கிரியேட்டிவ்வான தலைமை. கற்பனைத் திறன் மிக்க ஒரு தலைமைஇருந்தால் எந்தக் காரியமும் சாத்தியமாகும்.

இந்தபடைப்புத் திறன் மிக்க தலைமை என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நான்மூன்று கனவுகள் நனவான அற்புதத்தில் கண் ணெதிரே கண்டேன். விண்வெளித் திட்டம்,  அக்னி ஏவுகணைத் திட்டம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு நகரத்தின் வசதிகளை அளிக்கும் திட்டம் இந்த மூன்று பிரம்மாண்ட கனவுகள் நனவானதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

ஒரு நல்ல தலைவனுக்கு இருக்க வேண்டிய தலைமைப்பண்புகளை பார்க்கலாம்.

ஒரு தலைவனுக்கு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும்.

தொலைநோக்குப் பார்வை என்பது எதிர்காலத்தில் என்ன தேவைப்படும் என்பதை இப்போதே சரியாக கணித்து அதை நிறை வேற்றுவது. இதற்கு உதாரணமாக இந்தியாவின் ராக்கெட்தொழில் நுட்பத் துறையின் தந்தையாகப் போற்றப்படும் பேராசிரியர் விக்ரம்சாராபாயைச் சொல்வேன். இந்தத் தொழில்நுட்பம் உலக அளவில் பரவிக் கொண்டிருந்தகால கட்ட மான 1960-களில் இந்தியாவுக்கான அதன் அவசியத்தை உணர்ந்தார் விக்ரம்சாராபாய். இந்திய ராக்கெட் செயற்கைக் கோள் தொழில் நுட்பத் திட்டத்துக் கானதேவையை முன் கூட்டியே உணர்ந்து அரசாங்கத்துக்கு சில திட்டங்களைப்பரிந்துரை செய்தார். ஒரு மாபெரும் படைப்புத் திறன் கொண்ட தலைமைப்பண்புஅவருக்கு இருந்தது என்றால் அதற்குத் தோள் கொடுக்க ஜவஹர்லால் நேரு போன்ற மகத்தான தலைவரும் அப்போது இருந்தார்.
பண்டிதஜவஹர்லால் நேருவும் விஞ்ஞானி விக்ரம் சாராபாயும், இந்தியாவின் எதிர்காலப்பாதுகாப்புக்கு ராக்கெட் தொழில் நுட்பம் அவசியம் தேவை என்பதைஉணர்ந்திருந்தார்கள். நாட்டில் வறுமை, பசி, பஞ்சம் உள்பட எத்தனையோபிரச்னைகள் இருக்கும் போது இந்த ராக்கெட் ஆராய்ச்சி எல்லாம் தேவையா என்றுபலத்த விமர்சனங்கள் எழுந்த காலகட்டத்தில் தங்கள் எண்ணத்தில் உறுதியாகஇருந்தார்கள் இருவரும். அவர்கள் தொடங்கி வைத்த படைப்புத்திறன் மிக்கதிட்டத்தினால்தான் நாம் உலக அரங்கில் செயற்கை கோள் விஞ்ஞானத்தில்பின்னாளில் பிரகாசிக்க முடிந்தது.

இன்றைக்குஉலகமே நம்முடைய செயற்கை கோள் மற்றும் ராக்கெட் துறை முன்னேற்றங்களைக்கண்டு பிரமிப்புடன் வியக்கிறது. நான் சமீபத்தில் அமெ ரிக்கா சென்றிருந்தபோது நாசாவில் உள்ள விஞ் ஞானிகள் ""சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை உங்களுடைய சந்திராயன் கண்டுபிடித்திருக் கிறது. பல வருடங்களாகநாங்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும் எங்களுக்குக் கிடைக்காதவெற்றி உங்களுக்குக் கிடைத்திருக்கிறது...''’என்று பாராட்டி னார்கள்.

விக்ரம் சாராபாய் தொலைநோக்குடன் கண்ட கனவுதான் இப்போது நனவாகி இருப்பதாகஎனக்குத் தோன்றியது. இன்று இந்தியா அனுப்பியிருக்கும் ரிமோட் சென்சிங்மற்றும் தகவல் தொடர்பான செயற்கை கோள் டிரான்ஸ்பாண்டர்கள் மொத்தம் 180விண்ணில் வெற்றிகரமாக வலம் வருகின்றன. இந்தியா முழுக்க 30,000கல்விக்கூடங்களும் 375 ஸ்பெஷா லிட்டி மருத்துவமனைகளும் செயற்கை கோள்மூலமாக இணைக்கப்பட்டிருக் கின்றன. இந்த அற்புதங்களுக்கு அடிப்படை, விக்ரம்சாராபாயின் தொலைநோக்குப் பார்வைதான்.
தொலைநோக்குப்பார்வை இருந்தாலும் அதை நிஜமாக்க செயலாற்றும் ஆற்றல் தலைவனுக்குகண்டிப்பாக இருக்க வேண்டும். விஞ்ஞானம் மட்டுமின்றி வேறு பல துறைகளிலும்இதைப் போன்ற தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் இருக் கிறார்கள். ஆனால் பலகனவுகள் நனவானது எப்படி? அந்தக் கனவை நனவாக்கும் செயல் வீரர்கள்தலைவர்களாக இருந்ததுதான் அந்த வெற்றிகளுக்குக் காரணம்.
1950-களில்அமெரிக்காவில் இருந்து கோதுமைக் கப்பல் வந்தால்தான் நமக்கு உணவேகிடைக்கும் என்கிற மோசமான நிலை உருவான போதுதான் சி. சுப்ரமணியம் என்கிறஅரசியல் மேதை தொலைநோக்குடன் பசுமைப் புரட்சித் திட்டத்தைக் கொண்டுவந்தார். அது அவருடைய தொலைநோக்குப் பார்வை. அதை எப்படிச் செயல்படுத்தவேண்டும் என்பதும் அந்தத் தலைவருக்குத் தெரிந்திருந்தது.

சிவராமன்ஐ.ஏ.எஸ், வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் போன்ற மிகச் சிறந்ததலைவர் கள் அவருக்குக் கரம் கொடுத்தார்கள். அவர்களின் திறமைகளை திரு சி.எஸ். பயன் படுத்திக் கொண்டார். நாட்டில் உணவுப் பஞ்சம் நீங்கியது. அதேபோல் வர்கீஸ் குரியனின் தொலைநோக்குப் பார்வை மற்றும் செய லாற்றும் திறனால்தான் இங்கே பால் உற்பத்தியில் வெண் மைப் புரட்சி ஏற்பட்டது.

ஒரு தலைவன் யாரும் பயணிக்காத பாதையில் பயணம் செய்ய அறிந் திருக்க வேண்டும்.

பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்: கலாம்

சென்னை: மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிக்கும்போதே ஆராய்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறினார்.


சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் அவர் கூறியதாவது:

சென்னை மருத்துவக் கல்லூரி 175வது ஆண்டை கொண்டாடி வருகிறது. அப்படியென்றால் இந்தக் கல்லூரி சூரியனை 175 ஆண்டுகள் சுற்றி வந்துவிட்டது என்று அர்த்தம்.

மாணவர்களுக்கு கற்பனைத் திறன், நேர்மை, பொறுமை, ஈடுபாடு, தைரியம் அனைத்தும் அவசியம். வாழ்க்கையின் இறுதி வரை எதையாவது கற்றுக் கொண்டே இருங்கள்.

மருத்துவ மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பின்போதே ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும். ஏழைகளும், கிராமப்புற மக்களும் பயனடையும் வகையில் குறைந்த செலவில் நவீன மற்றும் தரமான மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும்.

நோயால் வேதனைப்பட்டு வரும் மக்களிடம் சரியான முறையில் நோயைக் கண்டறியுங்கள். அந்த சோதனை, இந்த சோதனை என அவர்களின் வேதனையை அதிகரிக்காதீர்கள்.

ஐ.ஐ.டியில் மருத்துவப் படிப்பு அறிமுகப்படுத்தப்படுவது நல்ல விஷயம் தான். வாழ்க்கை அறிவியலின் தேவைக்கு பொறியியலும் மருத்துவமும் இணைவது அவசியம்தான்.

வாழ்க்கையில் எழும் பிரச்சனைகளுக்கு நீங்கள் தலைவராக இருங்கள். பிரச்சனைகளை உங்களுக்கு தலைவராகாமல் பாரித்துக் கொள்ளுங்கள் என்றார் கலாம்.

2020 ல் இந்தியா வல்லரசு ஆகுமா?

சென்னை : ""தங்கள் தனித்திறனை வளர்த்துக் கொள்வதன் மூலம், இளைஞர்கள் சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்ற முடியும்,'' என, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேசினார்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில், புதிய கட்டட திறப்பு விழா நேற்று நடந்தது. கட்டடத்தை திறந்துவைத்து, அப்துல் கலாம் பேசியதாவது: தீவிரவாதம் இன்று நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதை தடுக்க, குடிமக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவது, தீவிரவாத தடுப்பு சட்டங்களை கடுமையாக செயல்படுத்துவது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு தனிமனிதனும் சேவை மனப்பான்மை, நேர்மை குணத்துடன் செயல்பட்டால் தான் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க முடியும்.

இளைஞர்கள், தங்களின் தனித்திறனை கண்டறிந்து அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள்,தொழில் முனைவோர் என பன்முக திறமைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கலாம். நகர்ப்புற கல்லூரி மாணவ, மாணவியர் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களை தத்தெடுத்து, அம்மக் களுக்கு கல்வியறிவு வழங்க வேண்டும். இதன் மூலம், கிராம பொருளாதார முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைக்கலாம். இவ்வாறு அப்துல் கலாம் பேசினார்.

விழாவில், மாணவியரின் கேள்விகளுக்கு அப்துல் கலாம் அளித்த பதில்கள்:

இந்தியாவின் நீர்வள ஆதாரம், எரிபொருள் பயன்பாடு பற்றி?

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை சரியாக பராமரிப்பது, கால்வாய்களை முறையாக தூர்வாருவது மற்றும் நதிகளை இணைப்பதன் மூலம் நீர்வள ஆதாரத்தை பாதுகாத்துக் கொள்ளலாம். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச்சூழல் மாசுப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க, பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக, சூரிய எரிசக்தி, "பயோ காஸ்' போன்றவற்றின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

விண்வெளி துறையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து?

செவ்வாய் கிரகத்தை ஆராயும் அளவிற்கு இந்திய விண்வெளி துறை முன்னேற்றம் அடைந்துள்ளது. எதிர்காலத்தில் செவ்வாய்க்கு செயற்கை கோள் அனுப்பும் திட்டம் உள்ளது.

இளைஞர்கள் அரசியலில் சாதிக்க முடியுமா?

நிச்சயம் சாதிக்க முடியும். அதற்கு முதலில், இளைஞர்கள் பொதுவாழ்விற்கு விரும்பி வரவேண்டும். பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக தான், "பார்லிமென்ட்'டில் அவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் நடைபெறுகிறது. பெண் களுக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம், ஈடுபாடு குறைவாக தான் உள்ளது.

சமச்சீர் கல்வி திட்டம் பற்றி?

நல்ல திட்டம். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களுக்கும் சிறந்த கல்வி கிடைக்கும்.

2020 ல் இந்தியா வல்லரசு ஆகுமா?

தற்போது நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக உள்ளது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், 2020ல் இந்தியா நிச்சயம் வல்லரசாகும். இவ்வாறு அப்துல் கலாம் பதிலளித்தார்.

Thursday, April 26, 2012

உலகைத் தாங்குவது அன்பு

* அணுக்களிடையே இணைக்கும் சக்தி இருப்பதால்தான், உலகம்
பொடிப்பொடியாக உதிர்ந்துவிடாமல் இருப்பதாக விஞ்ஞானிகள்
கூறுகிறார்கள். அது போலவே, உயிர்களிடத்தும் அன்பு என்னும்
இணைக்கும் சக்தி இருக்க வேண்டும். அன்பு உள்ள இடத்திலேயே,
உயிர் இருக்கிறது. பகைமை அழிவையே தருகிறது. மனித ஜாதி
அழியாமல் ஜீவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம், இணைக்கும்
சக்தியே. இது பிரிக்கும் சக்தியை விடப் பெரியது.


* உண்மை இன்றேல் அன்பும் இல்லை. உண்மை இல்லாமல் பாசம்
இருக்கலாம். உதாரணம், பிறர் கெடத் தான் வாழும் தேசபக்தி.
உண்மை இல்லாமல் மோகம் இருக்கலாம். எடுத்துக்காட்டு, ஓர்
இளம் பெண்ணிடம் ஒரு வாலிபன் கொள்ளும் காதல். உண்மை
இல்லாமல் வாஞ்சை இருக்கலாம். உதாரணமாக, பெற்றோர்
பிள்ளைகளிடம் காட்டும் அன்பு மிருகத்தன்மைக்கு
அப்பாற்பட்டது. அது ஒரு போதும் பாரபட்சமாய் இருக்காது.
உலகத்தை தாங்கி நிற்பது அன்பு ஒன்றே என்பது என் திடமான
நம்பிக்கை. அன்புள்ள இடமே வாழ்வுள்ள இடம். அன்பில்லா
வாழ்வு மரணமே.

* அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் மீது தனக்கு அன்பு
இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணரும்படி ஒருவர் செய்ய
வேண்டும். தான் கூறும் முடிவு சரியானதாகவே இருக்கும் என்ற
நம்பிக்கை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட
வேண்டும். அதோடு தன்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவோ,
அமலாக்கவோ இல்லையானால், அதனால் தனக்கு எந்தவிதமான
மனக்கஷ்டமும் ஏற்படாது என்பதும், நிச்சயமாக இருக்க
வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால்தான் குற்றம் குறைகளைக்
கூறிக் கடுமையாகக் கண்டிக்கும் உரிமையை ஒருவர்
பெற்றவராவார்.

அமைதி தரும் உண்ணாவிரதம்

* உண்ணாவிரதம் என்பது இன்று நேற்று உண்டான சாதனமன்று.
ஆதிபுருஷன் என கருதப்படும் ஆதாம் காலத்திலிருந்தே
அனுஷ்டிக்கப்பட்டு வருவது. அது தன்னைத் தானே
தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு பயன்பட்டிருக்கிறது. நல்ல
லட்சியங்களோ, தீய லட்சியங்களோ அவைகளை அடைவதற்கு
பயன்பட்டிருக்கிறது.

* உண்ணாவிரதம் என்பது அகிம்சை என்னும் ஆயுத சாலையில்
உள்ள ஆயுதங்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஆயுதமாகும். அதை
வெகு சிலரே உபயோகிக்க முடியும் என்பதால் அதை உபயோகிக்கவே
கூடாது என்று ஆட்சேபிக்க முடியாது.

* உண்ணாவிரதமெனும் ஆயுதத்தை உபயோகிப்பதற்குச் சரீரபலம்
மட்டும் போதாது. சத்தியாக்கிரக கடவுளிடத்தில் அசாத்திய
நம்பிக்கை தேவைப்படும்.

* நான் அனுஷ்டித்த உண்ணாவிரதங்களில் எதுவும் பலன்
தராமல் போனதாக எனக்கு ஞாபகமில்லை. அப்படி நான் உண்ணாவிரதம்
அனுஷ்டித்த காலத்திலெல்லாம் அதிக உன்னதமான அமைதியும்,
அளவற்ற ஆனந்தமுமே அடைந்தேன்.

* அதிக பலனுள்ள சில மருந்துகளைப் போல உண்ணாவிரதமும்
அபூர்வமான சந்தர்ப்பங்களிலும், அதில் திறமையுடைவர்களின்
மேற்பார்வையிலும் தான் உபயோகிக்கக் கூடியதாகும்.

* உண்ணாவிரதத்தை உபயோகிக்கும் வித்தையில் திறமை உள்ளவன்
உபயோகித்தாலன்றி அது பலாத்காரமாகவே ஆகிவிடக்கூடும்.

* ஆண்டவன் அருளால் ஏற்படாத உண்ணாவிரதங்கள் அனைத்தும்
பயனற்ற வெறும் பட்டினியைவிடக் கூடக் கேவலமானதே ஆகும்.

* உண்ணாவிரதத்தால் ஏதேனும் நன்மை ஏற்படக்
கூடியதாயிருந்தாலும், அடிக்கடி நிகழ்த்தி வந்தால் எந்த
நன்மையும் ஏற்படாமல் போகும். இறுதியில் ஏளனமே
மிச்சமாகும்.

வார்த்தைகளற்ற இருதயம் வேண்டும்

பிரார்த்தனை மனிதனுடைய வாழ்க்கையின் உயிர்நாடியாகும்.
கடவுளை வேண்டிக் கொள்வதே பிரார்த்தனை. அல்லது பரந்த
அர்த்தத்தில் உள்ளுக்குள் இறைவனுடன் தொடர்பு கொள்வதும்
பிரார்த்தனையே. எப்படியிருந்தாலும் பலன் ஒன்றுதான்.
வேண்டிக் கொள்வதாக இருந்தால்கூட, ஆன்மாவைத்
தூய்மைப்படுத்தும் படியும், அதைச் சூழ்ந்துகொண்டுள்ள
அறியாமையையும், இருட்படலங்களையும் போக்கும்படியும்
வேண்டிக் கொள்வதாகவே இருக்க வேண்டும். தன்னிடமுள்ள
தெய்வீகத் தன்மை விழிப்படைய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவன்,
பிரார்த்தனையின் உதவியை நாடித்தான் தீரவேண்டும். வெறும்
சொற்களின் அலங்காரமோ அல்லது காதுகளுக்குப் பயிற்சி
அளிப்பதோ பிரார்த்தனை அல்ல. அர்த்தமற்ற சூத்திரத்தைத்
திரும்பத் திரும்பக் கூறுவதும் பிரார்த்தனை அல்ல.

ராமநாமத்தை எத்தனை தடவைகள் திரும்பத் திரும்பக்
கூறினாலும் அது ஆன்மாவைக் கிளறவில்லையாயின், அது
வீணேயாகும். இருதயமற்ற வார்த்தைகளைக் காட்டிலும்,
வார்த்தைகளற்ற இருதயமே பிரார்த்தனைக்குச் சிறந்தது.
பசியுள்ள மனிதன் நல்ல உணவை மனதார ருசிப்பதுபோல, பசியுள்ள
ஆன்மா மனமார்ந்த பிரார்த்தனையை ருசித்து அனுபவிக்கும்.
பிரார்த்தனையின் மந்திர சக்தியை அனுபவித்தவன்
சேர்ந்தாற்போல் நாட்கணக்கில் உணவின்றி வாழமுடியும். ஆனால்,
பிரார்த்தனையின்றி ஒரு விநாடி கூட வாழமுடியாது. ஏனெனில்
பிரார்த்தனையின்றேல், உள்ளத்தில் அமைதி இருக்க முடியாது.